Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 395)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

பகவதாபிமுக்க்யம் ஸுக்ருதத்தாலன்றிக்கே பகவத் க்ருபையாலே பிறக்கிறது. அத்வேஷம் ஸுக்ருதத்தாலே யென்னில்; இந்த பல விசேஷத்துக்கு அத்தை ஸாதநமாக்க வொண்ணாது.

ஆபிமுக்க்யத்துக்கு பகவத் க்ருபை காரணம், அத்வேஷத்துக்கு ஸுக்ருதம் காரணமென்று நினைத்துச் சொல்லுவார் வசநத்தை அநுவதித்துக் கொண்டு பரிஹரிக்கிறார் (பகவதாபிமுக்க்யம்) என்று தொடங்கி.

பகவத் ஆபிமுக்க்யம் என்றால் பகவானிடம் கொள்ளும் ஆழ்ந்த ஈடுபாடு; இதற்கு ஸர்வேச்வரனுடைய க்ருபையே காரணமாக உள்ளது; ஸர்வேச்வரனிடம் ஜீவன் த்வேஷம் இல்லாமல் இருப்பதற்கு ஜீவனுடைய புண்ணிய பலன்கள் காரணமாக உள்ளன. இப்படியாக ஒரு சிலர் உரைப்பர். அவர்களுடைய வாக்கியத்தை உரைத்து, அதற்கான பதிலை இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

– அதாவது, அநாதிகாலம் விமுகனாய்ப் போந்த இச்சேதநனுக்கு பகவத் விஷயத்தில் பிறக்கிற வாபிமுக்க்யம், இவனுடைய ஸுக்ருத நிபந்தநமாகவன்றிக்கே கேவல பகவத் க்ருபையாலே பிறக்கிறது; தத்பூர்வபாவியான அத்வேஷம் ஸுக்ருத மடியாகப் பிறக்கிறதென்று சொல்லப்பார்க்கில், அகிலாத்மகுணாதியாய் ஆத்மோஜ்ஜீவ நாங்குரமா யிருந்துள்ள பகவதத்வேஷமாகிற இப்பலவிசேஷத்துக்கு அதிக்ஷுத்ரமான யாத்ருச்சிகாதி ஸுக்ருதத்தைக் காரணமென்று சொல்லவொண்ணாதென்கை. ஆகையால் அத்வேஷத்துக்கும் பகவத்க்ருபையே காரணமென்று சொல்லவேணுமென்று கருத்து.

– அதாவது, எல்லையற்ற காலமாக ஸர்வேச்வரனிடம் எந்தவிதமான ஈடுபாடும் காண்பிக்காமல் உள்ள ஜீவனுக்கு, ஸர்வேச்வரன் விஷயத்தில் ஒரு காலகட்டத்தில் ஆழ்ந்த ஈடுபாடு ஏற்படுகிறது; இதன் காரணம் ஜீவன் செய்த புண்ணியம் அல்ல; ஸர்வேச்வரனுடைய கருணையே காரணமாகும்; இப்படியாக ஈடுபாடு ஏற்படுவதற்கு முன்பு உண்டாகும் நிலையான “ஸர்வேச்வரனிடம் த்வேஷம் கொள்ளாமல் இருத்தல்” என்பது ஜீவனுடைய புண்ணியத்தின் காரணமாக உண்டாகிறது என்று கூறினால் என்ன தவறு என்று கேட்கலாம். இதற்கு விடை அளிக்கிறார். ஆத்மகுணங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளதும், ஆத்மாவின் உய்தலுக்கு முளையாக உள்ளதும் ஆகிய “பகவானிடம் த்வேஷம் கொள்ளாமை” என்பது மிகவும் உயர்ந்த நிலையாகும்; இப்படிப்பட்ட பலன் கிட்டுவதற்கு மிகவும் தாழ்ந்ததாகிய, “தற்செயலாகச் செய்த புண்ணியம்” போன்றவை காரணமாக இருக்கின்றன என்று கூற இயலாது. ஆகவே “பகவானிடம் வெறுப்பு இன்மை” என்பதும் ஸர்வேச்வரனுடைய கருணை காரணமாகவே ஏற்படுகிறது என்று கருத்து.