Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 394)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

“செய்வார்கட்கு” என்று அருளுக்கு ஹேது ஸுக்ருத மென்னாநின்றதே யென்னில்; அப்போது “வெறிதே” என்கிறவிடம் சேராது.

அந்த திவ்யஸூக்திக் கநந்தரோக்தியி லபிப்ராய மறியாதார் சங்கையை யநுவதித்துப் பரிஹரிக்கிறார் (செய்வார்கட்கு) என்று தொடங்கி.

ஆழ்வார் அருளிச்செய்த அந்தத் திருவாய்மொழியில் அடுத்து உள்ளதான “செய்வார்கட்கு” என்பதான பதத்தின் பொருளை உணர இயலாதவர்களுடைய ஐயத்தை மனதில் கொண்டவராக இந்தச் சூர்ணையில் அதனை நீக்குகிறார்.

– அதாவது, “அருள்செய்வர்” என்ற வநந்தரம், ஆர்க்குத் தானென்னு மபேக்ஷையிலே, “செய்வார்கட்கு” என்று, அருளுகைக் குறுப்பாகத் திருவுள்ள முகக்கும்படி சிலவற்றைச் செய்யுமவர்களுக் கென்கையாலே, அவன் க்ருபை பண்ணுகைக்கு ஹேது சேதந ஸுக்ருத மென்னாநின்றதே யென்னில்? அப்படி சொல்லும்போது நிர்ஹேதுக வாசகமான “வெறிதே” என்கிறவிடம் ஸங்கதமாகா தென்கை. ஆகையால் “செய்வார் கட்கு” என்றது, தான் செய்ய நினைத்தவர்களுக்கென்றபடி.

– திருவாய்மொழியில் (8-7-8) - அருள் செய்வார் - என்று உரைத்த உடனேயே, அடுத்த கேள்வி எழலாம்; அதாவது “யாருக்கு அருள் செய்வான்?”, என்று கேட்கலாம். அதற்கு ஆழ்வார் – செய்வார்கட்கு - ஸர்வேச்வரன் க்ருபை செய்வதற்குக் காரணமாக அவனுடைய திருவுள்ளத்தை குளிர வைத்த சில செயல்கலைச் செய்தவர்களுக்கு - என்று அருளிச்செய்து விடை அளித்தார். ஆனால், ஆழ்வார் அருளிச் செய்தபடி நோக்கினால், ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இன்றி க்ருபை செய்யவில்லை, ஜீவன் செய்த சில புண்ணிய செயல்களால் க்ருபை செய்தான் என்றல்லவோ ஆகிறது என்று அடுத்து ஒரு கேள்வி கேட்கலாம். இவ்விதம் பொருள் கொண்டு கேள்வி எழுப்பினால், பாசுரத்தில் உள்ள “வெறிதே” என்று பதம் பொருந்தாமல் போகும். ஆகவே “செய்தவர்கட்கு” என்ற பதத்திற்கு, “தான் க்ருபை செய்யவேண்டும் என்று எண்ணியவர்களுக்கு” - என்றே பொருள் கொள்ளவேண்டும்.