Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 393)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

“வெறிதே யருள்செய்வர்” என்று இவ்வர்த்தத்தை ஸ்பஷ்டமாக அருளிச்செய்தாரிறே.

இப்படி சாஸ்த்ரம் சொன்னவளவன்றிக்கே, நிர்ஹேதுக விஷயீகாரத்துக்கு நேரே பாத்ரபூதராய் ஆப்ததமாக்ரேஸரரான ஆழ்வார் இவ்வர்த்தத்தைத் தெளிய வருளிச் செய்தாரென்கிறார் மேல் (வெறிதே) என்று தொடங்கி.

– இப்படியாகச் சாஸ்த்ரம் உரைத்தது மட்டும் அல்லாமல், எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் கடாக்ஷிப்பதற்கு நேரடியான பாத்திரமாக இருந்தவரும், நம்பத்தகுந்தவர்களில் உயர்ந்து நிற்பவர்களின் தலைவரும் ஆகிய நம்மாழ்வாரும் இதே கருத்தை அருளிச்செய்தார் என்று இந்தச்சூர்ணையில் உரைக்கிறார்.

(வெறிதே யருள்செய்வர்) என்றது, நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுவரென்றபடி. (இவ்வர்த்தத்தை ஸ்பஷ்டமாக வருளிச்செய்தார்) என்றது, இந்நிர்ஹேதுக விஷயீகாரமாகிற ரஹஸ்யார்த்தத்தை ஸம்சய விபர்யயமற ஸகலரு மறியும்படி ப்ரகாசமாக வருளிச் செய்தாரென்கை.

(வெறிதே யருள்செய்வர்) – திருவாய்மொழியில் (8-7-8) – வெறிதே அருள் செய்வார் - என்பது என்னவென்றால், எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் க்ருபை செய்வான் - என்பதாகும். (இவ்வர்த்தத்தை ஸ்பஷ்டமாக வருளிச்செய்தார்) - இப்படியாக எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் க்ருபை செய்கிறான் என்னும் இரகசியத்தை, எந்தவிதமான சந்தேகமும் இன்றி அனைவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி அருளிச்செய்தார் - என்று கருத்து.