Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 392)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

“யதாஹி மோஷகா: பாந்தே” என்று தொடங்கி இதனுடைய க்ரமத்தை பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று.

இந்நிர்ஹேதுக விஷயீகார க்ரமம் சாஸ்த்ரத்திலெங்கே சொல்லிற்றென்ன அருளிச்செய்கிறார் (யாதாஹி) என்று தொடங்கி.

எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் ஜீவனுக்குக் க்ருபை செய்தல் எப்படி என்பது குறித்து சாஸ்த்ரத்தில் எங்கு உரைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

பகவச் சாஸ்த்ரம் நூற்றெட்டு ஸம்ஹிதையாயிறே யிருப்பது; அதிலே யொன்றிறே அஹிர்ப்புத்ந்ய ஸம்ஹிதை. “பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம்” என்கிறபடியே ஸகலத்துக்கு மாதிவக்தா பகவானாயிருக்கச் செய்தே தத்தத் ஸம்ஹிதைகள் தோறும் அவாந்தர வக்தாக்களுமுண்டிறே; அதிலிந்த ஸம்ஹிதைக்கு அஹிர்புத்ந்ய ஸம்ஜ்ஞகனான ருத்ரன் வக்தாவாகையாலே இத்தை அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை என்கிறது; இந்த ஸம்ஹிதையிலே, “நுண்ணுணர்வின் நீலார் கண்டத்தம்மான்” என்கிறபடியே ஸத்வம் தலையெடுத்தபோது ஸூக்ஷ்மதர்சியா யிருக்கும் ருத்ரனை, தேவர்ஷியாய் ப்ரஹ்மவித்தமனான ஸ்ரீநாரதபகவான் சென்ற நுவர்த்தித்து ஸ்வ ஸம்சயங்களெல்லாம் கேட்க, அவன் நிர்ணயித்துக் கொண்டு வாராநிற்க, பதினாலா மத்யாயத்தில் இவன் பண்ணின ப்ரச்நத்துக்கு உத்தரமாக ஸம்ஸார மோக்ஷ ஹேதுக்களான நிக்ரஹசக்தி அநுக்ரஹசத்தி யென்று ஸர்வேச்வரனுக் கிரண்டு சக்தி யுண்டென்று ப்ரதிஜ்ஞை பண்ணி, அதில் “திரோதாநகரீ சக்திஸ் ஸா நிக்ரஹ ஸமாஹ்வயா, புமாம்ஸம் ஜீவஸம்ஜ்ஞம் ஸா திரோபாவயதி ஸ்வயம்” என்று தொடங்கி நிக்ரஹாத்மிகையான சக்தியாலே திரோஹித ஸ்வஸ்வரூபாதிகனாய் ஜீவாத்மா ஸம்ஸரிக்கும்படியை விஸ்தரேண ப்ரதிபாதித்து, அநந்தரம் அநுக்ரஹாத்மிகையான சக்தியாலே ஸம்ஸாராந் முக்தனாம்படியை ப்ரதிபாதிப்பதாக, “ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே, ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே, ஸமீக்ஷிதஸ்து தாஸோயம் கருணாவர்ஷரூபயா, கர்மஸாம்யம் பஜத்யேவ ஜீவோ விஷ்ணு ஸமீக்ஷயா சக்தி பாவஸ் ஸவை ஜீவ முத்தாரயதி ஸம்ஸ்ருதே:, கர்மணீச ஸமேதத்ர தூஷ்ணீம் பாவ முபாகதே” என்று, ஸம்ஸார சக்ரஸ்தனாய் துக்காகுலனான ஜீவன் விஷயமாக ஸர்வேச்வரனுக்கொரு க்ருபை ஜநிக்கும்படியையும், அந்த க்ருபையடியாக உண்டான வவன் கடாக்ஷத்துக்கு விஷயபூதனாய்க் கொண்டு இவன் கர்மஸாம்யத்தை பஜிக்குமென்னுமத்தையும், அந்த அநுக்ரஹாத்மிகையான சக்தியினுடைய ஸத்பாவமிவனை ஸம்ஸாரத்தினின்று முத்தரிப்பிக்குமென்னு மிடத்தையும், கீழ் கர்ம ஸாம்யமென்றதின் கருத்தையும் ஸங்க்ரஹேண சொல்லி, – “யதாஹி மோஷகா: பாந்தே பரிபர்ஹ முபேயுஷி, நிவ்ருத்த மோக்ஷணோத்யோகாஸ் ததா ஸந்த உதாஸதே, அநுக்ரஹாத்மிகாயாஸ்து சக்தே: பாதக்ஷணேததா, உதாஸாதே ஸமீபூய கர்மணீதே சுபாசுபே, தத்பாதாநந்தரம் ஜந்துர்யுக்தோ மோக்ஷ ஸமீக்ஷயா, ப்ரவர்த்தமாந வைராக்யோ விவேகேபிநிவேசவாந், ஆகமா நநுஸஞ்சிந்த்ய குரூநப்யுபஸர்ப்ப்யச, லப்தஸத்த: ப்ரகாரைஸ்தை: ப்ரபுத்தோ போதபாலந:” இத்யாத் யத்யாய சேஷத்தாலே, வழிபோகிறவன் ஸம்பாரத்தை வைத்து மறைய நின்றவளவிலே அவனுடைய ஸம்பாரத்தை அபகரிப்பதாக உத்யோகிக்கிற தஸ்கரர், அந்த ஸம்பாரத்தை அவன் வந்து கைப்பற்றினவளவில், யாதொருபடி நிவ்ருத்த மோக்ஷணோத்யோக ராகா நின்றுகொண்டு எப்போது முதாஸீநரா யிருந்து விடுவர்கள்; அப்படியே, பகவதநுக்ரஹ சக்தி இவன் பக்கலிலே வந்த க்ஷணத்திலே, இவ்வாத்மாவைத் தன் வழியே இழுப்பதாக புண்ணியபாப கர்மங்களிரண்டு மிவனை வந்து மேலிடாமல் உதாஸீநித்திருந்துவிடும்; அந்த அநுக்ரஹாத்மிகையான சக்தி தன் பக்கல் வந்த வநந்தரம் இச்சேதநன் மோக்ஷ ஸமீக்ஷா யுக்தனாய் ப்ரவர்த்தமாக வைராக்யனாய் விவேகா பிநிவேசியாய் சாஸ்த்ர ப்ரவணனாய் ஸதாசார்ய ஸமாச்ரயணம் பண்ணி லப்த ஸத்தாகனாய் லப்தஜ்ஞாநனாய் அந்த ஞானத்தை ரக்ஷித்துக்கொண்டு ஸாரக்ராஹியாய் ஸமுசிதோபாய பரிரஹத்தாலே ஸம்ஸாரா துத்தீர்ணனாய் பரமபதத்தை ப்ராபிக்குமென்று சொன்னானிறே; ஆகையால், “யதாஹி மோக்ஷகா: பாந்தே” என்று தொடங்கி இந்நிர்ஹேதுக விஷயீகாரத்தினுடைய க்ரமத்தை ஆப்தப்ரமாணமான பகவச் சாஸ்த்ரத்திலே சொல்லிற் றென்கிறார்.

பகவத்சாஸ்த்ரம் என்று கூறப்படும் பாஞ்சராத்ர ஆகமம் என்பது 108 ஸம்ஹிதைகளை உடையதாகும் (ஸம்ஹிதை என்றால் நூலின் உள்ள பிரிவு). அவற்றில் ஒன்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை ஆகும். பாஞ்சராத்ரத்தில் - பஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம் - பாஞ்சராத்ர ஆகமம் முழுவதையும் அருளிச்செய்தவன் ஸ்ரீமந்நாராயணன் - என்று கூறுவதற்கு ஏற்ப, அந்தச் சாஸ்த்ரம் முழுவதையும் முதலில் அருளிச் செய்தவன் ஸ்ரீமந்நாராயணனே ஆவான் என்றபோதிலும், அதில் உள்ள ஸம்ஹிதைகளை பலர் அருளிச்செய்துள்ளனர். அவற்றுள், இந்தச் ஸம்ஹிதையை அருளிச்செய்தவன் அஹிர்புத்ந்யன் என்ற பெயர் உள்ள சிவன் என்பதால், இது அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை எனப்படுகிறது. இந்த ஸம்ஹிதையில், திருவாய்மொழி (6-10-8) - நுண்ணுணர்வின் நீலார் கண்டத்தம்மான் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஸத்வகுணம் அதிகமாக உள்ளபோது நுட்பமாக உள்ள அனைத்தையும் அறியவல்ல சிவனை, தேவரிஷியும் ப்ரஹ்மத்தை அறிந்தவரும் ஆகிய நாரதமஹரிஷி சென்றடைந்து, அவனை வணங்கி, தனக்கு இருந்த சந்தேகங்களைக் கேட்கத் தொடங்கினார். அப்போது சிவன் அவருடைய சந்தேகங்கள் அனைத்தையும் நீக்கியபடி உரைத்துக் கொண்டிருந்தான். அதில் பதினாலாவது அத்யாயத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு விடை அளிக்கத் தொடங்கினான். ஸம்ஸாரத்திலிருந்து (ஜீவனை) விடுவிப்பதற்கு ஸர்வேச்வரனுக்கு நிக்ரஹசக்தி மற்றும் அநுக்ரஹசக்தி என்பதான இரண்டு சக்திகள் உண்டு என்று உறுதியாக உரைக்கத் தொடங்கினான். அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் – திரோதாநகரீ சக்திஸ் ஸா நிக்ரஹ ஸமாஹ்வயா, புமாம்ஸம் ஜீவஸம்ஜ்ஞம் ஸா திரோபாவயதி ஸ்வயம் - ஸர்வேச்வரனுடைய திரோதாநகரீ எனப்படும் நிக்ரஹசக்தியானது, ஜீவனுடைய ஞானத்தை மறைக்கிறது - என்று தொடங்கி, நிக்ரஹம் செய்வதான சக்தி காரணமாக மறைக்கப்பட்ட ஸ்வரூபம் முதலானவற்றை உடைய ஜீவன், ஸம்ஸாரத்தில் எவ்விதம் உழன்றபடி உள்ளான் என்று விரிவாக உரைத்தான். அதனைத் தொடர்ந்து ஸர்வேச்வரனுடைய அனுக்ரஹ சக்தி காரணமாக ஜீவன் ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை அடைகிறான் என்று விரிவாக உரைக்கும்விதத்தில் அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் – ஏவம் ஸம்ஸ்ருதி சக்ரஸ்தே, ப்ராம்யமாணே ஸ்வகர்மபி:, ஜீவே துக்காகுலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே, ஸமீக்ஷிதஸ்து தாஸோயம் கருணாவர்ஷரூபயா, கர்மஸாம்யம் பஜத்யேவ ஜீவோ விஷ்ணு ஸமீக்ஷயா சக்தி பாவஸ் ஸவை ஜீவ முத்தாரயதி ஸம்ஸ்ருதே:, கர்மணீச ஸமேதத்ர தூஷ்ணீம் பாவ முபாகதே - இப்படியாக ஸம்ஸாரம் என்ற சக்கரத்தில் சுற்றியபடி உள்ள ஜீவன் விஷயத்தில் மஹாவிஷ்ணுவிற்குக் கருணை ஏற்படுகிறது. கருணை மழையைப் பொழியும் ஸர்வேச்வரனுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகும் ஜீவன், கர்மம் அற்ற நிலையை அடைகிறான். ஸர்வேச்வரனுடைய அந்த அனுக்ரஹசக்தி காரணமாக அந்த ஜீவன் ஸம்ஸாரத்திலிருந்து உயர்த்தப்பட்டு, புண்ணிய பாவ கர்மங்கள் இல்லாத நிலையை அடைகிறான் - என்று ஸம்ஸாரத்தில் சுழன்றபடி உள்ள ஜீவனுடைய துன்பகரமான நிலையை உரைத்து, அந்த ஜீவன் விஷயத்தில் ஸர்வேச்வரனுக்கு உண்டாகும் கருணையைக் குறித்து உரைத்தான்; தொடர்ந்து, அந்தக் கருணை காரணமாக ஏற்படுவதான ஸர்வேச்வரனுடைய கடாக்ஷத்திற்கு இலக்காகும் ஜீவன், புண்ணிய பாவ கர்மங்கள் சமமாக உள்ள நிலையை (அதாவது அவை இல்லாமல் போகும் நிலையை) அடைகிறான் என்று கூறினான். அடுத்து கர்மஸாம்யம் (புண்ணியபாவங்கள் சமமாக உள்ள நிலை) என்பதைக் குறித்துத் தனது கருத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்தினான். தொடர்ந்து அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் – யதாஹி மோஷகா: பாந்தே பரிபர்ஹ முபேயுஷி, நிவ்ருத்த மோக்ஷணோத்யோகாஸ் ததா ஸந்த உதாஸதே, அநுக்ரஹாத்மிகாயாஸ்து சக்தே: பாதக்ஷணேததா, உதாஸாதே ஸமீபூய கர்மணீதே சுபாசுபே, தத்பாதாநந்தரம் ஜந்துர்யுக்தோ மோக்ஷ ஸமீக்ஷயா, ப்ரவர்த்தமாந வைராக்யோ விவேகேபிநிவேசவாந், ஆகமா நநுஸஞ்சிந்த்ய குரூநப்யுபஸர்ப்ப்யச, லப்தஸத்த: ப்ரகாரைஸ்தை: ப்ரபுத்தோ போதபாலந: - வழிப்போக்கன் ஒருவன் தனது தலையில் சுமந்து கொண்டு போகும் அதிகமான பாரத்தைக் கண்ட திருடர்கள், “இத்தனை பாரம் நாம் ஏன் சுமக்கவேண்டும்” என்று எண்ணி விலகுவது போன்று அனுக்ரஹத்தைப் பொழிவதான ஸர்வேச்வரனுடைய கடாக்ஷம் ஜீவனின் மீது விழுந்த உடனேயே புண்ணியபாவ கர்மங்கள் விலகிவிடும்; அந்த நொடியிலேயே ஜீவன் மோக்ஷத்தின் மீது மிகுந்த ஆசை, ஞானத்துடன் கூடிய வைராக்யம், ஞானத்தில் ஆசை போன்றவற்றை அடைகிறான்; வேதசாஸ்த்ரங்களைக் கற்று உணரத் தொடங்குகிறான்; சிறந்த ஆசார்யர்களை அண்டியவனாக, தனது ஸ்வரூபம் விளங்கப்பெற்று, ஞானம் வளர்ந்து, தகுந்த உபாயத்தைக் கைக்கொண்டு மோக்ஷம் அடைகிறான் - என்று உரைத்தான். அதாவது வழிப்போக்கன் ஒருவன் பாரம் நிறைந்த பொருளை எடுத்துக்கொண்டு போகும்போது திருடர்களைப் பார்த்து, அந்தப் பொருள்களை மறைக்கும்போது, அவர்கள் வந்து அந்தப் பொருளைக் கைப்பற்றுகிறார்கள்; ஆனால் அந்தப் பாரமான பொருளை அந்த வழிப்போக்கன் மீண்டும் கைப்பற்றும்போது, அந்தத் திருடர்கள் ஏதும் செய்யாமல் இருக்கிறார்கள். இது போன்று ஸர்வேச்வரனுடைய அனுக்ரஹ சக்தி என்பது ஜீவனிடம் சேர்ந்த உடனேயே, அந்த ஜீவனைத் தங்கள் பக்கம் பற்றி இழுப்பதான புண்ணியபாவ கர்மங்கள் இரண்டும் ஏதும் செய்யாமல் இருந்துவிடுகின்றன. அந்த அனுக்ரஹ சக்தியானது தன் பக்கம் வந்தவுடன், அந்த ஜீவன் மோக்ஷத்தில் விருப்பம் கொண்டவனாகவும், வைராக்யம் வளரப் பெற்றவனாகவும், விவேகம் குறித்து ஆசை அடைந்தவனாகவும், சாஸ்த்ரங்கள் மீது ஆழ்ந்த விருப்பம் கொண்டவனாகவும், சிறந்த ஆசார்யனை அடைந்து தனது ஸ்வரூபம் குறித்து அறிந்தவனாகவும், அப்படிக் கிடைத்த ஞானத்தைக் காப்பாற்றிக் கொண்டு ஸாரத்தை உணர்ந்தவனாகவும், தகுந்த உபாயத்தைக் கைக்கொண்டு ஸம்ஸாரத்திலிருந்து மேலே எழுந்து பரமபதத்தை அடைகிறான் - என்றான். ஆகவே - யதாஹி மோக்ஷகா: பாந்தே - என்பது தொடக்கமாக, எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் ஜீவனைப் பற்றும் விஷயத்தில் நம்பத் தகுந்த ப்ரமாணமாக உள்ள பகவத்சாஸ்த்ரம் கூறுவதை அருளிச்செய்தார்.