Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 391)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
பூர்வக்ருத புண்யா புண்ய பலன்களை சிரகாலம் புஜித்து, உத்தர காலத்தில் வாஸனைகொண்டு ப்ரவர்த்திக்கு மத்தனை யென்னும்படி கையொழிந்த தசையிலே நாமார்? நாம் நின்ற நிலையேது? நமக்கினிமேல் போக்கடியேது? என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்களுண்டு; அவையாதல், முன்பு சொன்னவையாதல்.
அதுக்கு உத்தர மருளிச்செய்கிறார் (பூர்வக்ருத) இத்யாதியாலே.
– கடந்த சூர்ணையில் எழுப்பட்ட கேள்விக்கான விடையை அருளிச்செய்கிறார்.
– அதாவது, முன்பு செய்யப்பட்ட புண்ணியபாபரூப கர்ம த்வயித்தி னுடையவும் பலங்களை ஸ்வர்க்க நரகாதிகளிலே நெடுங்கால மநுபவித்து மேலுள்ள காலத்தில் பூர்வகர்ம வாஸநைகொண்டு புண்யபாபரூப கர்மங்களில் ப்ரவர்த்திக்கு மத்தனை யென்று சொல்லத்தக்கதாம்படி அச்சகர்மாவாய் கர்ம பலாநுபவத்தில் கையொழிந்து நின்ற தசையிலே காண்கிற தேஹமோ தேஹாதிரிக்தரோ ஸ்வதந்த்ரரோ பரதந்த்ரரோ நாமாரென்றும், நசிக்கும்படி நின்றோமோ பிழைக்கும்படி நின்றோமோ? நாம் நின்ற நிலை யேதென்றும்; இப்படி நின்ற நமக்கினிமே லீடேறுகைக்கீடான போக்கடி யேதென்றும் தன்னடையே யுண்டாவன சில நிரூபண விசேஷங்களுண்டு, அந்நிரூபண விசேஷங்களாதல், பூர்வோக்தங்களான யாத்ருச்சிகாதி ஸுக்ருதங்களாத லென்கை.
முற்பிறவிகளில் செய்த புண்ணியம் மற்றும் பாவம் என்பதான கர்மங்களின் பலன்களை ஸ்வர்க்கம் மற்றும் நரகத்தில் நீண்டகாலம் அனுபவித்து, மீண்டும் இங்கு வந்து பிறந்து, அடுத்துள்ள காலகட்டங்களில் முன்பு செய்த புண்ணியபாவ கர்மங்களின் பழக்கம் காரணமாக, மீண்டும் அதே போன்ற செயல்களில் ஈடுபடுவர் என்று கூறலாம்படியாக, கண்களுக்குப் புலப்படாத கர்மவாசனைகளை உடையவர்களாக கர்ம பலன்களை அனுபவிக்கும்போது நாம் செயலற்ற நிலையில் நிற்கிறோம். மேலும் அந்த நிலையில், “நான் யார் – நான் இந்தச் சரீரமோ? அல்லது இந்தச் சரீரத்தைக் காட்டிலும் வேறுபட்டவனா? நான் சுதந்திரமானவனா? நான் யாருக்கேனும் வசப்பட்டவனா? நான் அழியும்விதத்தில் உள்ளேனா? அல்லது நான் பிழைப்பேனா? எனது நிலை என்ன? இவ்விதமாக நிற்கும் எனக்கு இனி பிழைக்க வழியேது?”, போன்ற பல கேள்விகள் நமக்குள்ளே தானாகவே தோன்றுகின்றன. இப்படிப்பட்ட கேள்விகள் அல்லது முன்னர் கூறப்பட்டதான “தற்செயலாக ஏற்பட்ட புண்ணியம்” என்பதே இங்கு கூறப்படுகின்றன என்று கருத்து.