Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 389)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
பழையதாக உழுவது நடுவது விளைவதாய்ப்போரும் ஷேத்ரத்திலே உதிரி முளைத்து பலபர்யந்தமாமாபோலே, இவைதான் தன்னடையே விளையும்படியாயிற்று பத்தியுழவன் பழம்புனத்தை ஸ்ருஷ்டித்த கட்டளை.
ஈச்வர ஸ்ருஷ்டியாலிவனுக்கு விளையு மங்கீகாரப் பற்றாசுகள் யாத்ருச்சி காதிகள் மாத்ரமேயன்று, இன்னமும் சிலவுண்டென்று தர்சிப்பிக்கைக்காவாதால், கீழ்ச்சொன்ன இவைதானுண்டாம் ப்ரகாரத்தை யுபபாதிக்கைக்காகவாதல் அருளிச் செய்கிறார் மேல் (பழையதாக) என்று தொடங்கி.
ஸர்வேச்வரனுடைய ஸ்ருஷ்டியால் ஜீவனுக்கு ஏற்படும் அங்கீகாரம் என்பதற்கு “தற்செயலாகச் செய்த புண்ணியம்” போன்றவை மட்டும் காரணங்கள் அல்ல. மேலும் சில காரணங்களும் உள்ளன என்று கூறுவதற்காகவோ அல்லது மேலே கூறப்பட்டவை ஏற்படும் விதங்களை உரைப்பதற்காகவோ மேலும் அருளிச்செய்கிறார்.
– அதாவது, புதிசாகத் தரிசு திருத்தின தன்றிக்கே பழையதாக உழுவது நடுவது விளைவதாய்க் கொண்டு செய்காலாய்ப்போரும் க்ஷேத்ரத்திலே கர்ஷகன் அதுக்கென்ன வொரு க்ருஷியும் பண்ணாதிருக்க உதிரியானது முளைத்து விளைந்து தலைக்கட்டுமாப்போலே, மேற்சொல்லப் புகுகிற நிரூபண விசேஷங்களாதல் கீழ்ச் சொன்ன யாத்ருச்சிகாதிகளாதல் இதுக்கென்ன வொரு க்ருஷி செய்யவேண்டாதே இச்சேதநர் பக்கலிலே தன்னடையே விளையும்படியாய்த்து, பக்திக்கு கர்ஷகனான ஈச்வரன் ப்ரவாஹரூபேண நடக்கிற ஸம்ஸாரமாகிற பழம்புனத்தை ஸ்ருஷ்டித்துத் திருத்து மென்றபடி.
– தரிசாகக் கிடந்த நிலத்தைப் புதிதாகத் திருத்தாமல், நீண்டகாலமாக உழுதல், நடுதல், விளைத்தல் போன்ற செயல்கள் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் உள்ள உழவன் ஒருவன் அதற்கென எந்தவிதமான முயற்சியும் செய்யாமல் உள்ளபோதிலும், முன்பே அந்த வயலில் உதிர்ந்த நெல்லானது பயிராக விளைந்து நிற்பது போன்று - என்கிறார். இது போன்று நடப்பது என்னவென்றால் – இனிமேல் கூறப்போகும் நிரூபணங்கள் மூலமோ அல்லது இதுவரை கூறப்பட்ட “தற்செயலாகச் செய்த புண்ணியங்கள்” முதலானவை மூலமோ, இதற்கு என எந்தவிதமான முயற்சியையும் சேதனன் செய்யவேண்டாதபடி ஸர்வேச்வரனுடைய அங்கீகாரம் கிட்டுகிறது. அதாவது பக்தி என்பதை விவசாயம் செய்யும் உழவனாகிய ஸர்வேச்வரன் நீண்டகாலமாகவே ஸம்ஸாரம் என்னும் பழைய நிலத்தை ஸ்ருஷ்டித்து திருத்துகிறான் என்று கருத்து.