Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 388)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
அது தன்னை நிரூபித்தால் இவன் தனக்கு ஒன்றும் செய்ய வேண்டாதபடியா யிருக்கும்.
தந்நிரூபணத்தி லிவனுக்கு ஸம்பவிக்குமதை அருளிச்செய்தார் (அது தன்னை) என்று தொடங்கி.
இப்படியாக ஸர்வேச்வரன் அளித்த சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் என்பதுடன் கூடிய ஸ்ருஷ்டியை ஆராய்ந்தால், அவனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, அசித் விசேஷிதமாய்க் கிடக்கிற தசையிலே உஜ்ஜீவநோப யோகியான கரணகளேபரங்களை பரம தயையாலே அவன் தந்தபடியை அநுஸந்தித்தால் தததீந ஸத்தாதிகனான இவன்றனக்கு ஸ்வோஜ்ஜீவநாம்சத்திலவன் செய்தபடி கண்டிருக்கை யொழியத் தானொரு ப்ரவ்ருத்தி பண்ண வேண்டாதபடியாயிருக்கு மென்கை.
உயிரற்றதும் அறிவற்றதும் ஆகிய அசித் வஸ்துக்கள் போன்று ஸ்ருஷ்டி காலத்தில் கடந்த நிலையில் இந்த ஜீவன் கரையேறுவதற்குத் தேவையான சரீரம் மற்றும் உறுப்புகளைத் தனது பரமக்ருபை காரணமாக ஸர்வேச்வரன் அளிக்கிறான். அதனைச் சிந்தித்துப் பார்க்கும்போது, ஸர்வேச்வரனுக்கு மட்டுமே வசப்பட்டதான ஸ்வரூபம், இருப்பு போன்றவற்றை உடைய ஜீவன், தான் கரையேறும் பொருட்டு ஸர்வேச்வரன் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்த்தபடி இருப்பது அல்லாமல், தானாகவே எந்த ஒரு முயற்சியும் செய்யவேண்டாம் என்பது வெளிப்படுகிறது.