Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 385)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் பெருமாள் புறப்பட்டருளுந்தனையும் பார்த்துப் பெரிய திருமண்டபத்துக்குக் கீழாக முதலிகளெல்லாரும் திரளவிருந்த வளவிலே இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக, பின்பு பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது.

இந்நிர்ஹேதுக விஷயீகார ஸ்தாபகமானதொரு ஐதிஹ்யத்தை ஸ்மரிப்பிக்கிறார் (பாஷ்யகாரர் காலத்திலே) என்று தொடங்கி.

இப்படியாக ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறான் என்பதை ஒரு நிகழ்வு மூலம் உணர்த்துகிறார்.

– அதாவது, ஸகல வேதாந்த தாத்பர்யார்த்தங்களெல்லாம் ஸம்சய விபர்யயமற நடந்து செல்லாநிற்கிற நல்லடிக்காலமான பாஷ்யகாரர் காலத்திலே, ஒருநாள் பெருமாள் புறப்பட்டருளுந்தனையும் பார்த்துப் பெரிய திருமண்டபத்துக்குக் கீழாக ஜ்ஞாநாதிகரான முதலிகளெல்லாரும் திரளவிருந்தவளவிலே, ஒரு ஸ்ரீவைஷ்ணவர், “இது நெடுங்கால மார்வாசலிலே அவர்கள் புறப்பாடு பார்த்திருந்தோமோவென்று தெரியாது, இன்று வகுத்த சேஷியான பெருமாள் புறப்பாடு பார்த்து வந்திருக்க என்ன ஸுக்ருதம் பண்ணினோம்!” என்ன; தத்ப்ரஸங்கத்திலே “நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவனுக்கு பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கடியேன்” என்று விசாரிக்கச் செய்தே, யாத்ருச்சிக ஸுக்ருதமென்ன அஜ்ஞாத ஸுக்ருதமென்னப் பிறந்ததாய், அவ்வளவிலே கிடாம்பிப் பெருமாளிருந்தவர் “நமக்கு பகவத் விஷயம்போலே ஸுக்ருத தேவரென்று மொருவ ருண்டோ வாச்ரணீயர்” என்ன; பிள்ளைதிருநறையூரரையர், “ஸுருதமென்று சொல்லுகிறதும் நீ நினைக்கிற விஷயந் தன்னையே காண்” என்றருளிச்செய்ய, ஆக இப்படி பின்பு பிறந்த வார்த்தைகளை இவ்விடத்திலே நினைப்பதென்றபடி. இக்கதைதான் “தருதுயரந் தடாயேல்” என்கிற பாட்டின் வ்யாக்க்யாநத்திலே ஸங்ரஹேண பூர்வர்கருளிச் செய்து வைத்தார்களிறே. இத்தால் அஜ்ஞாத ஸுக்ருத முண்டாய்த்தாகிலும் அது பலஹேதுவன்று, அத்தை வ்யாஜமாக்கி அங்கீகரிக்கு மீச்வரனே பலஹேது என்றதாய்த்து.

அனைத்து வேதாந்தங்களும், அவற்றில் உள்ள உண்மைப் பொருள்களும் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல், அனைவருக்கும் வெளிப்பட்டபடி இருந்த, மிகவும் சிறந்த காலகட்டமான உடையவர் காலத்தில், ஒருநாள் ஸ்ரீரங்கநாதன் தனது மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வருகின்ற நேரத்தில், பெரியமண்டபத்தின் கீழே ஞானம் நிறைந்த ஆசார்யர்கள் பலரும் நின்றிருந்தார்கள். அப்போது அங்கிருந்த ஒரு ஸ்ரீவைஷ்ணவர், “இத்தனை காலமாக யார் வீட்டு வாசலில், யார் புறப்பட, இது போன்று காத்துக் கிடந்தோம் என்பது நமக்கு அறியாது. ஆனால் இன்று நமக்கு ஏற்ற எஜமானனாக உள்ள ஸ்ரீரங்கநாதனுடைய புறப்பாடு எதிர்நோக்கி நிற்கிறோம். இதற்கு என்ன புண்ணியம் நாம் செய்தோமோ?”, என்றார். இப்படியாக அவர் உரைத்தபோது அங்கு இருந்தவர்கள் நடுவில், “எல்லையற்ற காலமாக எப்போதும் ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ள ஜீவனுக்கு, ஸர்வேச்வரனைக் குறித்த ஆர்வம் உண்டாகக் காரணம் என்ன?”, என்ற கேள்வி ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பலரும், “நாம் தற்செயலாகச் செய்த புண்ணியம், நாம் அறியாமல் செய்த புண்ணியம்” என்று பல காரணங்கள் உரைத்தனர். அங்கிருந்த கிடாம்பிப்பெருமாள் என்னும் உடையவரின் சிஷ்யர் ஒருவர், “நமக்கு ஸ்ரீரங்கநாதன் என்பது போன்று, புண்ணியம் என்று அண்டத்தக்க வேறு ஒன்று உள்ளதோ?”, என்றார். இதனைக் கேட்ட பிள்ளைதிருநறையூரரையர் அவரிடம், “புண்ணியம் என்று நீவிர் உரைப்பதும் அந்த ஸ்ரீரங்கநாதனையே அல்லவோ?”, என்றார். இந்த நிகழ்வை பெருமாள்திருமொழி (5-1) - தருதுயரம் தடாயேல் – என்ற பாசுரத்திற்கான வ்யாக்யானத்தில் ஸ்வாமி பெரியவாச்சான்பிள்ளை சுருக்கமாக அருளிச்செய்தமை காண்க. ஆகவே அறியாமல் செய்த புண்ணியங்கள் என்பவை உள்ளபோதிலும், அவை பலனுடைய காரணம் ஆவதில்லை; அவற்றை ஒரு காரணமாக ஏற்றுக்கொண்டு பலன் அளிக்கின்ற ஸர்வேச்வரனே காரணம் என்று கருத்து.