Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 384)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
ஜ்ஞானவான்கள் “இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை யென்னுள் வைத்தான்”, “எந்நன்றி செய்தேனோ வென்னெஞ்சில் திகழ்வதுவே”, “நடுவே வந்துய்யக் கொள்கின்ற நாதன்”, “அறியாதன வறிவித்தவத்தா நீ செய்தன வடியேனறியேனே”, “பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்”, “என்னைத் தீமனங்கெடுத்தாய்”, “மருவித் தொழும் மனமே தந்தாய்” என்று ஈடுபடா நிற்பர்கள்.
இதில் வாசி அறிந்தவர்க ளீடுபடும்படியை அருளிச்செய்கிறார் (ஜ்ஞாநவான்கள்) என்று தொடங்கி.
எந்தவிதமான காரணமும் இல்லாமல் உண்டாகும் ஸர்வேச்வரனுடைய கருணையின் மேன்மை அறிந்தவர்கள் எவ்விதம் ஈடுபாடு கொள்வர் என்பதை அருளிச் செய்கிறார்.
ஜ்ஞாநவான்களாகிறார், நிர்ஹேதுக விஷயீகார வைபவத்தை உள்ளபடி அறியுமவர்கள். (“இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை யென்னுள் வைத்தான்” இத்யாதி) அநாதிகால மவஸ்துவாய்க் கிடந்தவென்னை இன்று வஸ்துவாக்கி நித்யஸூரிகளுக்கு மவ்வருகான தன்னை நித்யஸம்ஸாரிகளுக்கு மிவ்வருகான வென்னுடைய ஹேயமான நெஞ்சிலே வைத்தான்; பெரியவுடையாரைப்போலே தலையோடே முடிந்தேனோ, திருவடியைபோலே “த்ருஷ்டா ஸீதா” என்று வந்தேனோ, அன்றிக்கே தன்னுடைய ஆஜ்ஞாநுவர்த்தநம் பண்ணினேனாம்படி விஹிதகர்மங்களை அநுஷ்டித்தேனோ, என்ன நன்மை செய்தேனாக வென்னெஞ்சிலே புகுந்து பெறாப்பேறு பெற்றானாய் விளங்குகிறது; விஷய ப்ரவணனாய்ப் போகா நிற்க நடுவே வந்து உஜ்ஜீவிப்பியா நின்ற ஸ்வாமி; எனக்கஜ்ஞாத ஜ்ஞாபநத்தைப் பண்ணி ஸ்வாமியான நீ சேஷபூதனான வென்பக்கல் பண்ணின உபகாரம் உபகரித்த நீயறியி லறியுமித்தனை, என்னால் சொல்லித் தலைக்கட்டப்போமோ; “அஸந்நேவ” என்கிறபடியே அஸத்கல்பனாய்க் கிடந்தவென்னை, “ஸந்தமேநம்” என்கிறபடியே ஸத்தாவானாய் ஒரு வஸ்துவாம்படி பண்ணி, அந்த ஸத்தை நிலைநிற்கும்படி கைங்கர்யத்தையும் கொண்டருளினாய்; அம்ருதத்தையும் விஷத்தையு மொக்க விரும்புவாரைப்போலே உன்னையு முகந்து க்ஷுத்ர விஷயங்களையு முகக்கும் பொல்லாத நெஞ்சைப் போக்கினாய்; அநந்யப்ரயோஜநமாய்க் கொண்டு உன்னையே அநுபவிக்கும் மநஸ்ஸைத் தந்தாயென்று அவன் நிர்ஹேதுகமாகப் பண்ணின உபகார விசேஷங்களை அநுஸந்தித்துத் தலைசீய்த்து ஈடுபடா நிற்பர்களென்கை. அன்றிக்கே, (அஜ்ஞர்) இத்யாதிக்கு (வாளார் தந்தார்) என்று பாடமாகில், இப்படி ஸர்வேச்வரன் தன் நிர்ஹேதுக க்ருபையாலே தங்களை உஜ்ஜீவிப்பிக்க க்ருஷி பண்ணிக் கொண்டு வரும் ப்ரகாரத்தை அறியாத மநுஷ்யர், வாள்வலியாலே ஜீவித்துத் திரிவார் தங்களுக்கு வந்ததொரு ஸம்ருத்தியை நம்முடைய வாளார்தந்தாரென்று நினைத்திருக்குமாபோலே, நிர்ஹேதுகமாக வந்த பகவதங்கீகாரத்தை தங்கள் ஸுக்ருத பலத்தாலே வந்ததாக நினைத்திருப்பர்களென்று பொருளாகக்கடவது. அப்போதைக்கு, ஸகலமு மவனருளாலே வந்ததென்று தெளியக்கண்டவர்கள் அவன் நிர்ஹேதுகமாகப் பண்ணின உபகார விசேஷங்களை அநுஸந்தித் தீடுபடும்படியை அருளிச் செய்கிறாரென்று மேலே வாக்யத்துக்கு ஸங்கதி.
ஞானவான்கள் என்பவர்கள் எந்தவிதமான காரணமும் இல்லாமல் உண்டாகும் ஸர்வேச்வரனுடைய கருணையின் வைபவம் குறித்து உள்ளதுஉள்ளபடி அறிந்தவர்கள் ஆவர். (“இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை யென்னுள் வைத்தான்” இத்யாதி) - திருவாய்மொழி(10-8-9) - இன்றென்னைப் பொருளாக்கித் தன்னை யென்னுள் வைத்தான் – எல்லையற்ற காலம் ஒரு அசேதன வஸ்துவாகக் கிடந்த என்னை, இன்று மதிக்கத்தக்க ஒரு பொருளாக மாற்றி, நித்யஸூரிகளைக் காட்டிலும் மேலான தன்னை, நித்யமாக உள்ள ஸம்ஸாரிகளில் தாழ்ந்த என்னுடைய மிகவும் அற்பமான நெஞ்சத்தில் வைத்துக் கொண்டான். இவன் இவ்விதம் செய்ததற்கு – ஜடாயுவைப் போன்று எனது உயிரை நான் அவனுக்காகக் கொடுத்தேனா? அனுமன் போன்று த்ருஷ்டா ஸீதா - சீதையைக் கண்டேன் - என்று வந்தேனா? அவனுடைய ஆணைகள் என்றுள்ள சாஸ்த்ரங்களின் வழி நடந்தேன் என்று கூறும்படி, எனக்குச் சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் செய்தேனா? நான் என்ன நன்மை செய்தேன் என்று எண்ணி, எனது நெஞ்சத்தில் புகுந்து, இவ்விதம் வந்து நிற்பதை தனது பெறுதற்குரிய பேறு என்று சிந்தித்தபடி உள்ளானே இவன்! இந்த உலகியல் விஷயங்களில் ஈடுபட்டு நான் நிற்கும்போது, என்னை நடுவில் வந்து பிடித்து இழுத்துக்கொண்டு நின்றவன் எனது ஸ்வாமி. நான் அறியாத பலவற்றையும் எனக்கு உபதேசித்தாய்; இதன் மூலம் நீ செய்த உபகாரம் எத்தன்மையது என்பதை அடிமையான எனக்கு உதவி செய்த நீ அறியலாமே அல்லாமல், என்னால் உரைக்க இயலுமோ? தைத்திரீய உபநிஷத் - அஸந்நேவ – பரம்பொருள் இல்லை என்பவன் இல்லாத பொருளாகவே ஆகிறான் – என்பதற்கு ஏற்ப, அறிவற்ற வஸ்துவாகக் கிடந்த என்னை, தைத்திரீய உபநிஷத் – ஸந்தமேநம் - பரம்பொருளை அறிபவன் உள்ளவன் ஆகிறான் – என்பதற்கு அறிவுள்ள வஸ்துவாக மாற்றிக் கொடுத்தான். மேலும் அதே நிலையில் நான் என்றென்றும் நிலைபெற்று நிற்கும்விதமாக என்னிடமிருந்து கைங்கர்யங்களையும் நீ பெற்றுக்கொண்டாய். அமிர்தமும் விஷமும் ஒன்றே என எண்ணுபவர்கள் போன்று, உன்னையும் தாழ்ந்த விஷயங்களையும் ஒருமித்து விரும்பும் தீயநெஞ்சத்தை நீ மாற்றினாய். வேறு எந்தவிதமான பலனையும் எதிர்பாராமல், உன்னை மட்டுமே அனுபவிக்கவல்ல மனதை அளித்தாய் - என்று இப்படியாகத் தங்களிடம் எந்தவிதமான காரணம் இல்லாதபோதிலும், அவன் செய்த உதவிகளை எண்ணியபடி அவனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள் என்று கருத்து. அல்லது சூர்ணை 383ல் உள்ள “வாளா தந்தான்” என்பதை “வாளா தந்தார்” என்று சிலர் கொள்வது போன்று படித்தால் கிட்டும் அர்த்தத்தை விவரிக்கிறார். இவ்விதம் ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இல்லாமல் வெளிப்படுகின்ற தனது கருணையால் தங்களைக் கரையேற்ற முயன்றபடி உள்ளதை அறியாமல் உள்ள மனிதர்கள் - மற்றவர்களிடம் உள்ள பொருள்களை அபகரித்து வாழ்ந்து வரும் மனிதர்கள் அந்தச் செல்வத்தை “எனது வாள் கொடுத்தது” என்று கூறித்திரிவது போன்று, எந்தவிதமான காரணமும் இல்லாமல் தங்களுக்குக் கிட்டிய ஸர்வேச்வரனுடைய அங்கீகாரம் என்பது, தாங்கள் செய்த புண்ணியத்தின் பலன் மூலமாகக் கிட்டியது என்று எண்ணிக்கொள்வர் - என்பது மற்றொரு அர்த்தமாகிறது. இவ்விதம் பொருள் கொள்ளும்போது - அனைத்தும் அவனுடைய கருணையால் கிட்டியது என்று உணர்ந்தவர்கள், அவன் எந்தவிதமான காரணமும் இல்லாமல் தங்களுக்கு உபகாரம் செய்த விதங்களை எண்ணி, அவற்றில் ஈடுபட்டபடி இருப்பார்கள் என்பதை அருளிச்செய்கிறார் என்று தேறுகிறது.