Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 383)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
அஜ்ஞரான மநுஷ்யர்கள் வாளா தந்தானென்றிருப்பர்கள்.
ஆக ஸர்வேச்வரன் தன் நிர்ஹேதுக க்ருபையாலே ஸம்ஸாரி சேதநரை யுஜ்ஜீவிப்பிக்கையிலே உத்யுக்தனாய் கரணகளேபர ப்ரதாநாதிகளைப் பண்ணி ஸ்வாஜ்ஞாரூப சாஸ்த்ராநுகுணமாக இவர்கள் பக்கலிலே சில ஸுக்ருத விசேஷங்கண்டு அங்கீகரிக்கலாம் வழியுண்டோவென்று பார்த்து, ததலாபத்தில் ஸர்வமுக்தி ப்ரஸங்கமும் வைஷம்ய நைர்க்ருண்யமும் வாராமைக்காக அஜ்ஞாத ஸுக்ருதங்களைத்தானே கல்பித்து, அவை தன்னை ஜந்ம பரம்பரைகள் தோறுமொன்று பத்தாக்கி நடத்திக்கொண்டு போகும்படியை விஸ்தரேண அருளிச்செய்து அஜ்ஞாத ஸுக்ருத மங்கீகார ஹேதுவாம்படியையும் தர்சிப்பித்தாராய் நின்றார் கீழ்; இந்நிர்ஹேதுக விஷயீகார வாசி அறியாதவர்கள் இதுக்கிசைந்து வைத்தே ஏததநுஸந்தாநேந வித்தராகம லிருப்பர்க ளென்கிறார் மேலே (அஜ்ஞரான மநுஷ்யர்கள்) என்று தொடங்கி.
– ஆக, ஸர்வேச்வரன் எந்தவிதமான காரணமும் இல்லாமல் தனது கருணையாலே ஸம்ஸாரிகள் அனைவரும் கரையேறும்விதமான முயற்சிகள் செய்தபடி உள்ளான். இதனால்தான் உடல்உறுப்புகளுடன் கூடிய சரீரங்களை அளித்து, தனது ஆணைகள் என்றுள்ள சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டவற்றுக்கு ஏற்ப ஸம்ஸாரி ஜீவன்களிடம் புண்ணியங்கள் ஏதும் இருந்தால் அவற்றையே காரணமாகக் கொண்டு அவர்களை ஏற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தைப் பார்த்தபடி உள்ளான். ஆனால் அவ்விதம் ஏதும் இல்லாத காரணத்தினால் அனைவரும் மோக்ஷத்திற்கு உரியவர்கள் என்ற நிலை, அனைவரையும் சமமாகக் காணாமல் உள்ள நிலை, கருணையைக் காண்பிக்காத நிலை முதலான தோஷங்கள் தனக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணுகிறான். ஆகவே, அவர்கள் அறியாமல் செய்த புண்ணியங்களை ஒன்றுக்குப் பத்தாக ஆக்கிக் கொள்கிறான். மேலும் அந்தப் புண்ணியங்களை அடுத்தடுத்து வரும் பிறவிகளில் மேன்மேலும் அவன் அதிகப்படுத்தியபடி இருப்பதை இதுவரை விரிவாக அருளிச்செய்தார். ஆக, ஸம்ஸாரிகள் தாங்கள் அறியாமல் செய்த சில நல்ல செயல்கள் ஸர்வேச்வரனுடைய அங்கீகாரத்திற்கு காரணமாக அமைவதை விளக்கினார். இனி, எந்தவிதமான காரணமும் இல்லாமல், ஸர்வேச்வரன் ஏற்றுக் கொள்கின்ற சிறப்பை உணராதவர்கள் இருப்பார்கள் என்கிறார்.
– அஜ்ஞராகிறார் நிர்ஹேதுக விஷயீகார வைபவமறியாதவர்கள், (வாளாதந்தானென்றிருப்பார்கள்) என்றது, இப்படி உபகரித்தருளுவதே என்று தலை சீய்த்து ஈடுபடவேண்டியிருக்க, அது செய்யாமல், வெறுமனே, உபகரித்தா னென்கிற மாத்ரத்தை யநுஸந்தித்திருந்து விடுவர்களென்றபடி.
– “அஜ்ஞர்” என்பது யார் என்றால், எந்தவிதமான காரணமும் இல்லாமல் ஸர்வேச்வரன் தனது கருணையை வெளிப்படுத்துகிறான் என்ற மேன்மையை அறியாதவர்கள் ஆவார்கள். இவர்கள், (வாளாதந்தானென்றிருப்பார்கள்) – “இந்த அளவு நமக்கு உதவுகிறானே!” என்று எண்ணியபடி அவனைக் குறித்து ஈடுபாட்டுடன் இருக்காமல், “ஏதோ நம்மை அவன் கடாக்ஷித்தான்” என்று மேம்போக்காக எண்ணியபடி இருந்துவிடுவார்கள்.