Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 382)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
லலிதா சரிதாதிகளிலே இவ்வர்த்தம் சுருக்கமொழியக் காணலாம்.
இவ்வஜ்ஞாந ஸுக்ருதமடியாக ஈச்வர னங்கீகரிக்குமென்னுமது காணலா மிடமுண்டோ வென்ன (லலிதா சரிதாதிகளிலே இவ்வர்த்தம் சுருக்கமொழியக் காணலாம்) என்கிறார்.
புண்ணியம் என்று அறியாமல் செய்த செயல்களை ஸர்வேச்வரன் ஏற்றுக் கொள்வதற்குத் தகுந்த ப்ரமாணம் ஏதும் உண்டோ என்ற கேள்விக்கு விடை அருளிச் செய்கிறார்.
– அதாவது, விதர்ப்பராஜ ஸுதையாய் காசீராஜ மஹிஷியான லலிதை, ஸபத்நிகளான முந்நூறு ஸ்த்ரீகளிலுங்காட்டில் ஆபிரூப்யம் அதிவச்ய பர்த்ருமத்தை தேஹ தேஜஸ்ஸு ஸர்வகுணஸம்பந்நதை இவை யுடையளாய் அஹோராத்ர விபாகமற பகவத் ஸந்நிதியில் அநேகந் திருவிளக்கேற்றி அதிலே நிரதையாய்ப் போருகிறபடியைக் கண்டு, “உனக் கிவ்வாபிரூப்யாதிகளுக்கும் தீபாரோபண கைங்கர்ய ப்ராவண்யத்துக்குங் காரணமென்” என்று ஸபத்நிகள் கேட்க, அவள் ஜாதி ஸ்ம்ருதியோடே பிறந்தவளாகையாலே, “ததேஷா கதயாம்யேதத் யத் வ்ருத்தம் மம சோபநா:” என்று தொடங்கி, “ஸௌவீர ராஜஸ்ய புரா மைத்ரேயோபூத் புரோஹித:, தேந சாயதநம் விஷ்ணோ: காரிதம் தேவிகாதடே, அஹந்யஹநி சுச்ரூஷாம் புஷ்ப தூபாம்பு லேபநை:, தீபாதாநாதிபிச்சைவ சக்ரே தத்ரவஸந் த்விஜ:” என்று ஸௌவீரராஜ புரோஹிதனான மைத்ரேயன், தேவியாற்றங்கரையிலே ஓரெம்பெருமான் கோயிலையுண்டாக்கி, அங்கே நாள்தோறும் ஸகல கைங்கர்யங்களையும் பண்ணி வர்த்தித்தபடியையும்; “கார்த்திகே தீபிதோ தீப உபாத்தஸ் தேநசைகதா, ஆஸீந் நிர்வாண பூயிஷ்டோ தேவஸ்ய புரதோ நிசி, தேவதாயதநேசாஸம் தத்ரா ஹமபி மூஷிகா, ப்ரதீபவர்த்திக்ரஹணே க்ருதபுத்திர் வராநநா:, க்ருஹீதாச மயா வர்த்தி ப்ருஷதம்சோரராவச, நஷ்டாசாஹம் ததஸ்தஸ்ய மார்ஜாலஸ்ய பயாநுகா, வக்த்ர ப்ராந்தேந நச்யந்த்யா ஸதீப: ப்ரேரிதோமயா, ஜஜ்வால பூர்வவத் தீப்த்யா தஸ்மிந் நாயதநே புந:” என்று கார்த்திகமாஸத்திலே, அவனந்த எம்பெருமான் ஸந்நிதியிலேற்றின அத்திருவிளக்கு அவியத்தேடுகிறவளவிலே, அக்கோயிலிலே யொரு பெண்ணெலியாய்க் கொண்டு வர்த்திக்கிறதான் அத்திருவிளக்கில் திரியைக் கவ்விக்கொண்டு போவதாக நினைத்துச்சென்று கவ்வினவிளவிலே ஒரு பூனை கத்தின குரலைக் கேட்டஞ்சி மரணத்தையடையா நிற்க, அப்போது பயத்தாலே நடுங்குகிற தன் மூஞ்சியாலே அந்தத் திரி தூண்டப்பட்டு முன்புபோலே அத்திருவிளக்குப் பளபளத்து எரிந்தபடியையும்; “ம்ருதா சாஹம் ததோ ஜாதா வைதர்ப்பீ ராஜகந்யகா: ஜாதிஸ்மரா காந்திமதீ பவதீநாம் பராகுணை:” என்று அநந்தரம் தான் மரித்து விதர்ப்பராஜனுக்குப் புத்ரியாய் ஜாதி ஸ்ம்ருத்யாதிகளோடே பிறந்தபடியையும்; “ஏஷ ப்ரபாவோ தீபஸ்ய கார்த்திகே மாஸி சோபநா:, தத்தஸ்ய விஷ்ண்வாயதநே யஸ்யேயம் வ்யுஷ்டிருத்தமா, அஸங்கல்பிதமப்யஸ்ய ப்ரேரணம் யத்க்ருதம் மயா, விஷ்ண்வாடயதந தீபஸ்ய தஸ்யைதத் புஜ்யதே பலம், ததோ ஜாதி ஸ்ம்ருதிர் ஜந்ம மாநுஷ்யம் சோபநம் வபு: வச்ய: பதிர் மே ஸர்வாஸாம் கிம்புநர் தீபதாயிநாம்” என்று, அந்த அஜ்ஞாத ஸுக்ருத பலமாக தனக்கிந்த வேற்றங்களெல்லா முண்டான படியையும் சொன்னாளென்று, ஸ்ரீவிஷ்ணுதர்மத்திலே லலிதாசரிதம் விஸ்தரேண சொல்லப்பட்டதிறே. இனி, ஆதிசப்தத்தாலே, தத்வவித்தாயிருப்பானொரு ப்ராஹ்மணனுடைய புத்ரியான ஸுவ்ரதை அதிபால்யத்திலே மாத்ருஹீநையாய், அது தோற்றாதபடி பரமதயாளுவான பிதா வளர்த்துக் கொண்டு போக வளர்ந்து கொண்டு, இனி ஒருவன் கையிலே ப்ரதாநம் பண்ண ப்ராப்தமென்னுமளவிலே, அந்தப் பிதாவும் மரிக்கையாலே அதீவ சோகார்த்தையாய், “யேந ஸம்வர்த்திதா பாலா யேநாஸ்மி பரிரக்ஷிதா, தேந பித்ரா வியுக்தாஹம் நஜீவேயம் கதஞ்சந நத்யாம்வா நிபதிஷ்யாமி ஸமித்தேவா ஹுதாசநே, பர்வதாத்வா பதிஷ்யாமி பித்ருஹீநா நிராச்ரயா” என்று தேஹ த்யாகோத் யுக்தையான வளவிலே, “ஆகத்ய கருணாவிஷ்டோ யமஸ் ஸர்வஹிதேரத:, ஸ்தவிரோ ப்ராஹ்மணோ புத்வா ப்ரோவா சேதம் வசஸ் ததா” என்கிறபடியே, ஸர்வப்ராணிகளுடையவும் ஹிதத்திலே நிரதனாயிருக்கும் யமன் க்ருபாவிஷ்டனாய் ஒரு வ்ருத்த ப்ராஹ்மண வேஷத்தைக் கொண்டு வந்து, “அலம்பாலே! விசாலாக்ஷி ரோதநேநாதி விஹ்வலே, நபூய: ப்ராப்யதே தாதஸ் தஸ்மாந் நார்ஹஸி சோசிதும்” இத்யாதியாலே இவளுடைய சோகாபநோதநத்தைப் பண்ணி; “தஸ்மாத் த்வம் துக்க முத்ஸ்ருஜ்ய ச்ரோதுமர்ஹஸி ஸுவ்ரதே, பித்ருப்யாம் விப்ரயோகோயம் யேநாபூத் கர்மணா தவ” என்று, ஆகையால் உன்னுடைய துக்கத்தை விட்டு, இந்த மாதாபித்ரு வியோகம் உன்னுடைய யாதொரு கர்மத்தால் யுண்டாய்த்து அத்தைச் சொல்லக் கேளென்று தானே சொல்லி, “புரா த்வம் ஸுந்தரீ நாம வேச்யா பரமஸுந்தரீ, ந்ருத்த கீதாதி நிபுணா வீணா வேணு விசக்ஷணா” என்று தொடங்கி, நீ பூர்வஜந்மத்திலே ஸுந்தரி யென்பாளொரு வேச்யை, உன்னாலே வசீக்ருதனாய் உன்னுடனே ஸம்ஸர்கித்துப் போருவானெரு ப்ராஹ்மண புத்ரனை உன் நிமித்தமாக ஸ்பர்த்தையாலே யொரு சூத்ரன் வதிக்க, அவனுடைய மாதாபிதாக்கள், “எங்கள் புத்ரனைக் கொல்லுவித்த நீ, இனியொரு ஜந்மத்திலே மாதாபிதாக்களை இழந்து மறுகிப் பரிதபிப்பாய்”, என்று சபித்தபடியாலே காணுனக்கிந்த சோகம் வந்ததென்ன; “ஆனால் இந்த பாபிநியான நானுத்தம ஜந்மத்திலே பிறக்கைக்கு ஹேதுவென்” என்று கேட்க; “ச்ருணு தஸ்ய மஹாப்ராஜ்ஞே நிமித்தம் கததோமம, யேந த்வம் ப்ராஹ்மணஸ்ய அஸ்ய குலே ஜாதா மஹாத்மந:” என்று தொடங்கி, ஜ்ஞாநாதிகனாய் ஒன்றிலும் பற்றற்று ஸர்வத்ர ஸமதர்சியாய் பகவத் த்யாநபரனாய் “க்ராமைக ராத்ர” நியாயத்தாலே யெங்கும் ஸஞ்சரிப்பானொரு பாகவதன் ஒரு ராத்ரி உன் வாசல் புறத்திண்ணையிலே யொதுங்கின வளவிலே, தலாரிக்காரர் அவனைக் கள்ளனென்று பிடித்துக்கட்ட, அவ்வளவிலே நீயோடிச் சென்று அக்கட்டை விடுவித்து, அந்த பாகவதனை உன் க்ருஹத்திலே கொண்டு போய் ஆச்வஸிப்பித்தாய். அத்தாலே யிது உனக்குண்டாய்த்து என்று இதிஹாஸ ஸமுச்சயத்திலே சொல்லப்பட்ட ஸுவ்ரதோபாக்யாநமும்; இன்னமும் ஒரு ஸ்த்ரீ யமபடராலே அத்யந்த பீடிதையாய் ஆகாசத்திலே ரக்ஷகாபேக்ஷை தோற்றக் கூப்பிட்டுக் கொண்டு வாராநிற்க, அச்வத்த தீர்த்தத்திலே சிரகாலம் தபஸ்ஸு பண்ணியிருந்த மாதவி அத்தைக் கண்டு க்ருபை பண்ணி, தானொரு நாள் செய்த தப:ப்பலத்தை அவளுக்குக் கொடுக்க, அப்போதே யமபடரும் பந்துபூதராய், யாம்யமார்க்கமும் ஸுகோத்தரமாய், யாதநா சரீரமும் போய் விலக்ஷண சரீரமாய், இவளையுங் கொண்டு அவர்கள் யமன் ஸந்நிதியிலே சென்றவளவிலே, “பிதேவ தர்மராஜோபூத் தஸ்யாஸ் தத் ப்ரியதர்சந:, ஸாந்த்வயந் ஸ மஹாதேஜா வ்யாஜஹாரச தாம்ப்ரதி” என்று, பித்ருவத் ப்ரஸந்நவதநனாய் இவளைக் குறித்து இன்சொல்லுச் சொல்லுகிற யமன், “பத்ரே! த்வயா ஸுஷ்டு க்ருதம் ந கிஞ்சிதிஹ வித்யதே, இதோ த்வாதச ஜந்மாந்தே த்வாம் கச்சித் ஸித்த ஆவிசத், விஷ்ணுபக்தோ நிவாஸார்த்தம் ராத்ர்யாந்து தவவேச்மநி, தத் ஸந்நிதாந ப்ரபவஸ் தவ ஸாது ஸமாகம:, ஸாஹிவை ப்ரஹ்ம விநுஷீ ஸ்ரீமத்ரங்கமுபாச்ரிதா, தத்ர தீர்த்தோத்தமம் ஸ்ரீமதச்வத்தம் நாமஸம்ச்ரிதா, தர்மஜ்ஞாதர்ம பரமா யஸ்யாஸ்தே ஸங்கமோ பவத்” என்று மாதவியினுடைய வங்கீகார முனக்கு வருகைக் குறுப்பாக நீயறியச் செய்த தொரு நன்மை யில்லை, இஜ்ஜந்மத்துக்குப் பன்னிரண்டாம் ஜந்மத்திலே யொரு ராத்ரி உன்னுடைய க்ருஹத்திலே தங்கிப் போகைக்காக ஒரு பாகவதன் வந்துன்னைக் கிட்டியிருந்து போனான், தத் ஸந்நிதாநத்தாலே யுண்டானது காணுனக்கிந்த ஸாது ஸமாகமம் என்று முன்பே யுண்டானதோர் அஜ்ஞாத ஸுக்ருதத்தை இவள் பேற்றுக்கடியாகச் சொன்னானென்கிற காருட புராணத்தில் கோயில் மஹாத்ம்யத்தில் கதையும் முதலானவற்றைச் சொல்லுகிறது. (சுருக்கமொழியக் காணலாம்) என்றது, விஸ்தரேண காணலாமென்றபடி. இவ்வஜ்ஞாத ஸுக்ருதங்களடியான பகவத்கடாக்ஷமே இவர்களுக்கிவ்வோ பலங்கள் வருகைக்கு ஹேதுவாகையாலே, அஜ்ஞாத ஸுக்ருதங்களைப் பற்றாசாகக் கொண்டு ஈச்வர னங்கீகரிக்கு மென்னுமிதுக்கு இவை உதாஹரணமாகலாமிறே.
விதர்ப்பதேசத்தின் அரசகுமாரியும், காசிராஜனின் பட்டமஹிஷியுமான லலிதை என்பவள், அந்த அரசனின் மற்ற முன்னூறு மனைவிகளைக் காட்டிலும் அதிகமான அழகு, கணவனை வசீகரிக்கும் திறமை, சரீர தேஜஸ், அனைத்து நற்குணங்களும் ஒருங்கே அமைந்திருத்தல் என்னும் பல குணாதியசங்கள் கொண்டவள் ஆவாள். மேலும் அவள் பகல், இரவு என்று ஆராயாமல் எப்போதும் ஸர்வேச்வரனுடைய ஸந்நிதியில் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டு, அதிலேயே எப்போதும் ஈடுபட்டவளாகத் தனது பொழுதைக் கழித்தாள். இதனைக் கண்ட மற்ற மனைவிமார்கள் அவளிடம், “உன்னிடம் அழகு முதலான பலவும் ஒருங்கே பொருந்தியுள்ளபோது, நீ இப்படியாக விளக்குகள் ஏற்றிக் கைங்கர்யம் செய்து வருவதன் காரணம் என்ன?”, என்று கேட்டனர். அவள் தனது பூர்வஜன்ம அறிவோடு பிறந்தவள் என்பதால் பின்வருமாறு உரைக்கத் தொடங்கினாள். ஸ்ரீவிஷ்ணுதர்மம் – ததேஷா கதயாம்யேதத் யத் வ்ருத்தம் மம சோபநா: - சிறந்த பெண்களே! என்னுடைய எந்த ஒரு சரிதத்தை நீங்கள் கேட்க ஆவலாக உள்ளீர்களோ அதனை நான் கூறுகிறேன் – என்று உரைக்கத் தொடங்கினாள். ஸ்ரீவிஷ்ணுதர்மம் - ஸௌவீர ராஜஸ்ய புரா மைத்ரேயோபூத் புரோஹித:, தேந சாயதநம் விஷ்ணோ: காரிதம் தேவிகாதடே, அஹந்யஹநி சுச்ரூஷாம் புஷ்ப தூபாம்பு லேபநை:, தீபாதாநாதிபிச்சைவ சக்ரே தத்ரவஸந் த்விஜ: – முன்பு ஒரு காலத்தில் ஸௌவீர அரசனுடைய புரோஹிதனாக மைத்ரேயன் என்பவன் இருந்தான். அவன் தேவியாற்றங் கரையில் மஹாவிஷ்ணுவுக்கு ஒரு கோயில் கட்டினான். அந்த இடத்திலேயே அவன் வாழ்ந்து வந்தான். அவன் அன்றாடம் அந்த இறைவனுக்கு மலர்கள், தூபம், தீர்த்தம் முதலானவற்றைச் சமர்ப்பித்து, திருவிளக்கு ஏற்றுவதையும் செய்தபடி இருந்தான் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஸௌவீர அரசனின் புரோஹிதனான மைத்ரேயன், தேவியாற்றங் கரையில் ஸர்வேச்வரனுக்கு ஒரு திருக்கோயிலை நிர்மாணித்து, அங்கு அன்றாடம் அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்தபடி, அங்கேயே வாழ்ந்து வந்ததைக் குறித்து உரைத்தாள். ஸ்ரீவிஷ்ணுதர்மம் - கார்த்திகே தீபிதோ தீப உபாத்தஸ் தேநசைகதா, ஆஸீந் நிர்வாண பூயிஷ்டோ தேவஸ்ய புரதோ நிசி, தேவதாயதநேசாஸம் தத்ரா ஹமபி மூஷிகா, ப்ரதீபவர்த்திக்ரஹணே க்ருதபுத்திர் வராநநா:, க்ருஹீதாச மயா வர்த்தி ப்ருஷதம்சோரராவச, நஷ்டாசாஹம் ததஸ்தஸ்ய மார்ஜாலஸ்ய பயாநுகா, வக்த்ர ப்ராந்தேந நச்யந்த்யா ஸதீப: ப்ரேரிதோமயா, ஜஜ்வால பூர்வவத் தீப்த்யா தஸ்மிந் நாயதநே புந: - ஒரு கார்த்திகை மாஸத்தில், அந்தப் புரோஹிதன் ஸர்வேச்வரனுடைய கோவிலில் திருவிளக்கு ஏற்றினான். அந்த விளக்கானது இரவில் அணையத் தொடங்கியது. அப்போது அந்தத் திருக்கோயிலில் ஒரு பெண் எலியாக வாழ்ந்து வந்த நான், அந்த விளக்கின் திரியைக் கவ்விக்கொண்டு செல்ல முனைந்தேன். அப்போது அங்கு ஒரு பூனை கத்தியது. இதனைக் கேட்டு அச்சம் அடைந்த நான் நடுங்கினேன். எனது முகத்தின் நடுக்கம் காரணமாக அந்த விளக்கின் திரியானது தூண்டப்பட்டு முன்பு போன்று பிரகாசமாக எரியத் தொடங்கியது - என்று உரைத்தாள். ஸ்ரீவிஷ்ணுதர்மம் - ம்ருதா சாஹம் ததோ ஜாதா வைதர்ப்பீ ராஜகந்யகா: ஜாதிஸ்மரா காந்திமதீ பவதீநாம் பராகுணை: - அதன் பின்னர் மரணம் அடைந்த நான், விதர்ப்பராஜனின் புத்திரியாக, முற்பிறவி குறித்த அறிவும், அழகும், உயர்ந்த குணங்களும் கூடியவளாகப் பிறந்தேன் - என்றாள். ஸ்ரீவிஷ்ணுதர்மம் - ஏஷ ப்ரபாவோ தீபஸ்ய கார்த்திகே மாஸி சோபநா:, தத்தஸ்ய விஷ்ண்வாயதநே யஸ்யேயம் வ்யுஷ்டிருத்தமா, அஸங்கல்பிதமப்யஸ்ய ப்ரேரணம் யத்க்ருதம் மயா, விஷ்ண்வாடயதந தீபஸ்ய தஸ்யைதத் புஜ்யதே பலம், ததோ ஜாதி ஸ்ம்ருதிர் ஜந்ம மாநுஷ்யம் சோபநம் வபு: வச்ய: பதிர் மே ஸர்வாஸாம் கிம்புநர் தீபதாயிநாம் – பெண்களே! கார்த்திகை மாதம் ஏற்றப்படும் விளக்கிற்கு இப்படிப்பட்ட மேன்மை உண்டு. ஸர்வேச்வரனுடைய ஸந்நிதியில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த விளக்கு என்னால், நான் அறியாமல் தூண்டப்பட்டதால் இத்தகைய நன்மை எனக்கு ஏற்பட்டது. அதன் பின்னர் முற்பிறவி குறித்த அறிவோடு கூடிய மனிதப்பிறவி, அழகு, கணவனை வசீகரிக்கும் திறன் போன்றவை அனைத்தும் எனக்குக் கிட்டியது. ஆக பகவத் ஸந்நிதியில் திருவிளக்கு ஏற்றுபவர்களுக்கு உண்டாகவல்ல நன்மைகளைக் கூறவும் வேண்டுமோ – என்று, தான் அறியாமல் செய்த அந்த புண்ணியத்தின் பலனாகத் தனக்கு அந்தப் பிறவியில் இத்தகைய ஏற்றங்கள் உண்டானது என்பதையும் உரைத்தாள். இப்படியாக ஸ்ரீவிஷ்ணுதர்மத்தில் லலிதா சரித்ரமானது எந்தவிதமான சுருக்கமும் இல்லாமல் விரிவாக உரைக்கப்பட்டது அல்லவோ? தொடர்ந்து சூர்ணையில் உள்ள “ஆதி” என்ற பதம் மூலம் உணர்த்தப்படும் வேறு சில நிகழ்வுகளை அடுத்து காணலாம். உள்ளது உள்ளபடி அறியத்தக்கவனான ஒரு அந்தணனின் மகளாக ஸீவ்ரதை என்பவள் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தனது தாயை இழந்தவள் ஆனாள். ஆனால் அந்தத் துன்பம் அவளுக்கு அறியாதவிதத்தில் அவளுடைய தந்தை மிகவும் அன்பாக அவளை வளர்ந்து வந்தான். சரியான பருவம் வந்தபோது, “இனி இவளுக்கு விவாகம் செய்யவேண்டும்” என்று அவன் முடிவு செய்தான். அப்போது அந்தத் தந்தையும் இறந்து போனான். இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த அவள், இதிஹாஸ ஸமுச்சயம் – யேந ஸம்வர்த்திதா பாலா யேநாஸ்மி பரிரக்ஷிதா, தேந பித்ரா வியுக்தாஹம் நஜீவேயம் கதஞ்சந நத்யாம்வா நிபதிஷ்யாமி ஸமித்தேவா ஹுதாசநே, பர்வதாத்வா பதிஷ்யாமி பித்ருஹீநா நிராச்ரயா - இளம்பெண்ணாகிய நான் யாரால் வளர்ந்து, காப்பாற்றப்பட்டேனோ அந்தத் தந்தையைப் பிரிந்து உயிர் வாழமாட்டேன். தாய், தந்தை இல்லாதவளாகிய நான் ஏதேனும் ஒரு நதியில் விழுவேன், எரியும் நெருப்பில் குதிப்பேன், மலையில் இருந்து கீழே விழுவேன் - என்று கூறியவளாகத் தனது உயிரை விட முயற்சி செய்தாள். அப்போது இதிஹாஸ ஸமுச்சயம் - ஆகத்ய கருணாவிஷ்டோ யமஸ் ஸர்வஹிதேரத:, ஸ்தவிரோ ப்ராஹ்மணோ புத்வா ப்ரோவா சேதம் வசஸ் ததா – அனைத்து உயிர்களிடமும் அன்புள்ளவனான யமன், மிகுந்த கருணையுடன் அந்தண வேஷம் பூண்டவனாக அவளிடம் வந்து இந்தச் சொற்களை உரைத்தான் - என்று கூறுவதற்கு ஏற்ப, அனைத்து உயிர்களின் நன்மைகளைப் பற்றிச் சிந்திப்பவனாகிய யமன் மிகுந்த கருணை நிறைந்த ஒரு முதிர்ந்த அந்தணனாக அங்கு வந்தான். இதிஹாஸ ஸமுச்சயம் – அலம்பாலே! விசாலாக்ஷி ரோதநேநாதி விஹ்வலே, நபூய: ப்ராப்யதே தாதஸ் தஸ்மாந் நார்ஹஸி சோசிதும் - மிகுந்த துக்கத்தையும், விசாலமான கண்களும் உடையவளே! நீ அழுதபடி இருந்தது போதுமானது; உனது தந்தை மீண்டும் உனக்குக் கிட்டமாட்டான். ஆகவே நீ வருந்தவேண்டாம் - என்று அவளுடைய வருத்தத்தை விலக்க முயன்றான். தொடர்ந்து இதிஹாஸ ஸமுச்சயம் - தஸ்மாத் த்வம் துக்க முத்ஸ்ருஜ்ய ச்ரோதுமர்ஹஸி ஸுவ்ரதே, பித்ருப்யாம் விப்ரயோகோயம் யேநாபூத் கர்மணா தவ - சிறந்தவளே! இப்படியாக வருந்துவதை விடுத்து, எந்தக் காரணத்தினால் நீ உனது தாய்தந்தையரை இழந்தாயோ அந்தக் கர்மம் குறித்துக் கேட்பாயாக – என்று கூறுவதற்கு ஏற்ப, “உனது இந்த வருத்தத்தை நீ கைவிட்டு, உனது எந்தக் கர்மம் காரணமாக உன்னுடைய தாய்தந்தையரை நீ இழந்தாய் என்பதை அறியத் தகுதி உடையவள் நீ ஆவாய். அதனை நான் உரைக்க நீ கேட்பாயாக”, என்று தானே உரைக்கத் தொடங்கினான். இதிஹாஸ ஸமுச்சயம் - புரா த்வம் ஸுந்தரீ நாம வேச்யா பரமஸுந்தரீ, ந்ருத்த கீதாதி நிபுணா வீணா வேணு விசக்ஷணா - நீ முன்பு ஒரு பிறவியில் நடனம், பாட்டு போன்ற கலைகளில் தேர்ச்சி உடையவளாகவும், வீணை மற்றும் புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவளாகவும், மிகவும் அழகையுடையவளாகவும், ஸுந்தரி என்ற பெயருள்ளவளாகவும், ஒரு வேசியாகவும் இருந்தாய் - என்று கூறுவதற்கு ஏற்ப, “நீ பூர்வஜன்மத்தில் ஸுந்தரி என்ற பெயருள்ள ஒரு வேசி ஆவாய். அப்போது உன்னால் வசீகரிக்கப்பட்ட காரணத்தால் உன்னுடனேயே ஓர் அந்தணனின் மகன் எப்போதும் வாழ்ந்து வந்தான். ஆனால் உன் மீது கொண்ட மையல் காரணமாக அவனை ஒரு சூத்ரன் கொன்றான். இதனால் சோகம் அடைந்த அந்த வாலிபனின் பெற்றோர்கள், ‘எங்களுடைய மகனைக் கொல்லக் காரணமாக இருந்த நீ அடுத்த பிறவியில் உனது தாய் தந்தையரை இழந்து சோகத்தில் நிற்பாயாக’ என்று சாபம் இட்டனர். இதனால்தான் உனக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டது”, என்று யமன் உரைத்தான். இதனைக் கேட்ட அந்தப் பெண், “அப்படியென்றால், பாவியான நான் இந்தப் பிறவியில் உயர்ந்த குலத்தில் பிறந்த காரணம் என்ன?”, என்றாள். இதனைக் கேட்ட யமன் உரைக்கத் தொடங்கினான். இதிஹாஸ ஸமுச்சயம் - ச்ருணு தஸ்ய மஹாப்ராஜ்ஞே நிமித்தம் கததோமம, யேந த்வம் ப்ராஹ்மணஸ்ய அஸ்ய குலே ஜாதா மஹாத்மந: - உயர்ந்த அறிவு கொண்டவளே! எந்தக் காரணத்தால் நீ மிகவும் உயர்ந்த அந்தண குலத்தில் பிறந்தாயோ, அந்தக் காரணத்தை நான் உரைக்கிறேன், கேட்பாயாக - என்றுள்ளதற்கு ஏற்ப அவன் கூறத் தொடங்கினான். யமன் அவளிடம், “ஞானத்தில் மிகவும் சிறந்தவனும், எதிலும் பற்றுதல் வைக்காதவனும், அனைத்து உயிர்களையும் சமமாகக் காண்பவனும், ஸர்வேச்வரனை எப்போதும் த்யானித்தபடி உள்ளவனும், ‘ஒரு கிராமத்தில் ஒரு இரவு மட்டுமே தங்கவேண்டும்’ என்ற நியாயத்தின்படி நடக்கவேண்டும் என்றுள்ளவனும் ஆகிய விஷ்ணுபக்தன் ஒருவன், எங்கும் ஸஞ்சாரம் செய்ததைத் தொடர்ந்து, அன்று ஓர் இரவில் உனது வீட்டுத் திண்ணையில் தங்கினான். அப்போது அந்தக் கிராமத்தின் தலையாரி அவனைத் திருடன் என்று எண்ணியவனாக, பிடித்துக் கட்டி வைத்தான். அப்போது நீ ஓடிச் சென்று அவனுடைய கட்டுகளை அவிழ்த்துவிட்டு, அந்தப் பாகவதனை உனது வீட்டிற்குள் அழைத்துச் சென்று உபகாரங்கள் செய்து ஆறுதல் அளித்தாய். இதனால்தான் இப்போது உனக்கு இந்த உயர்ந்த பிறவி ஏற்பட்டது”, என்றான். இப்படியாக இதிஹாஸ ஸமுச்சயத்தில் ஸுவ்ரதை ஒருவளுடைய சரிதம் உரைக்கப்பட்டது. அடுத்ததாக ஒரு நிகழ்வை அருளிச்செய்கிறார்; ஒரு பெண் யமகிங்கரர்களால் மிவவும் துன்புறுத்தப்பட்டவளாக, ஆகாயத்தில் இருந்தபடி தன்னைக் காக்கவேண்டும் என்று அழைத்தபடி (திருவரங்கத்தை நோக்கி) வந்து கொண்டிருந்தாள். அவள் திருவரங்கத்தில் வந்து சேர்ந்தபோது, திருவரங்கத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்றான அச்வத்த தீர்த்தத்தில் (இது ராஜகோபுரம் அடுத்துள்ள காந்திரோட்டில் இப்போதும் உள்ளது) பலகாலமாக தவம் செய்தபடி இருந்த மாதவி என்பவள் அந்தக் கூக்குரலைக் கேட்டு மிகவும் நெகிழ்ந்தாள். மிகுந்த கருணையுடன் தான் அத்தனை வருடங்களாகச் செய்து வந்த தவத்தின் பலனை, மாதவி அந்தப் பெண்ணிற்கு அளித்தாள். அப்போது அந்த யமதூதர்கள் அவளுக்கு உறவினர் போன்றும், யமலோகம் செல்லும் வழி என்பது மிகவும் சுகம் அளிப்பதாகவும், துன்பத்தை அடைவதற்காக அளிக்கப்பட்ட யாதனா சரீரம் என்பது மேன்மையான தேவசரீரமாகவும் மாறின. இப்படிப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போய், யமனின் முன்பாக நிறுத்தினர். அப்போது காருடபுராணம் - பிதேவ தர்மராஜோபூத் தஸ்யாஸ் தத் ப்ரியதர்சந:, ஸாந்த்வயந் ஸ மஹாதேஜா வ்யாஜஹாரச தாம்ப்ரதி - என்று கூறுவதற்கு ஏற்ப, யமராஜன் ஒரு தந்தையைப் போன்று மலர்ந்த முகத்துடன் இவளை நோக்கி இனிமையான உரைக்கத் தொடங்கினான். காருடபுராணம் – பத்ரே! த்வயா ஸுஷ்டு க்ருதம் ந கிஞ்சிதிஹ வித்யதே, இதோ த்வாதச ஜந்மாந்தே த்வாம் கச்சித் ஸித்த ஆவிசத், விஷ்ணுபக்தோ நிவாஸார்த்தம் ராத்ர்யாந்து தவவேச்மநி, தத் ஸந்நிதாந ப்ரபவஸ் தவ ஸாது ஸமாகம:, ஸாஹிவை ப்ரஹ்ம விநுஷீ ஸ்ரீமத்ரங்கமுபாச்ரிதா, தத்ர தீர்த்தோத்தமம் ஸ்ரீமதச்வத்தம் நாமஸம்ச்ரிதா, தர்மஜ்ஞாதர்ம பரமா யஸ்யாஸ்தே ஸங்கமோ பவத் - சிறந்தவளே! உனது இந்தப் பிறவியில் உன்னால் புண்ணியங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இதற்கு முன்பு உனது பன்னிரண்டாவது ஜன்மத்தின் இறுதியில் ஒரு பாகவதர் உன்னுடைய வீட்டில் இரவில் தங்கிப் போகும்விதமாக வந்து அமர்ந்தார். அதனால் உனக்கு அவருடன் ஸம்பந்தம் ஏற்பட்டது. ஸாதுக்களுடன் ஏற்பட்ட ஸம்பந்தம் காரணமாக நீ ஞானம் பெற்றவளாகத் இந்தப் பிறவியில் திருவரங்கம் அடைந்தாய். அங்கு உள்ள மிகவும் உத்தமமான அச்வத்த தீர்த்தத்தை அடைந்தாய். அதனால் தர்மங்கள் நிறைந்தவளாக மாறினாய் – என்று கூறுவதற்கு ஏற்ப யமன் அவளிடம், “மாதவியின் கருணை உனக்குக் கிட்ட ஏதுவான புண்ணியங்கள் எதனையும் நீ இந்தப் பிறவியில் செய்யவில்லை. ஆனால், உனது இந்தப் பிறவிக்கு முன்பு உள்ள பன்னிரண்டாவது பிறவியின்போது, ஒருநாள் இரவில் உன்னுடைய வீட்டில் தங்கிப் போவதற்காக ஒரு பாகவதன் உன்னை அடுத்துவந்தான். அவன் முன்னிலையில் உனக்கு ஸாதுக்களின் சேர்க்கை என்பது உண்டானது”, என்று முன்பு நடந்ததும், இவள் அறியாதவிதத்தில் புண்ணியம் சேர்ந்ததுமாகிய நிகழ்வை இவளுடைய பேற்றுக்கு காரணமாக உரைத்தான். இப்படியாகக் காருடபுராணத்தில் திருவரங்க மாஹாத்ம்யம் குறித்த நிகழ்வைக் காண்க. (சுருக்கமொழியக் காணலாம்) - இது போன்று பல இடங்களில் மிகவும் விரிவாகக் காணலாம். ஆகவே தாங்கள் அறியாமல் செய்த புண்ணியங்களின் மூலம் உண்டான பகவத்கடாக்ஷம் என்பதே இவர்களுக்கு இந்தப் பலன்கள் வருவதற்குக் காரணமாக இருந்ததது. எனவே இவை அனைத்தும், “அறியாமல் செய்த புண்ணியங்களையும் காரணமாகக் கொண்டு ஸர்வேச்வரன் ஏற்றுக்கொள்வான்” என்பதற்கு உதாரணங்கள் ஆகின்றன அல்லவோ?