Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 381)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
த்ரிபாத் விபூதியிலே பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க, அது உண்டது உருக்காட்டாதே, தேசாந்த்ர கதனான புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயம் கிடக்குமாபோலே. ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் கலந்து பரிமாறுகைக்குக் கரணகளேபரங்களைக் கொடுத்து, அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கீடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து கண்காண நிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி, உறங்குகிற ப்ரஜையைத் தாய் முதுகிலே யணைத்துக்கொண்டு கிடக்குமாபோலே, தானறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக விடமாட்டாதே, அகவாயிலே அணைத்துக்கொண்டு, ஆட்சியில் தொடர்ச்சி நன்றென்றுவிடாதே ஸத்தையை நோக்கி உடன்கேடனாய், இவர்கள் அஸத்கர்மங்களிலே ப்ரளர்த்திக்கும்போது மீட்கமாட்டாதே, அநுமதி தானத்தைப் பண்ணி உதாஸீநரைப் போலேயிருந்து போலேயிருந்து மீட்கைக்கிடம் பார்த்து நன்மையென்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே நெற்றியைக் கொத்திப் பார்த்தா லொருவழியாலும் பசைகாணா தொழிந்தால் அப்ராப்யமென்று கண்ணநீரோடே மீளுவது; தனக்கேற இடம் பெற்ற வளவிலே, என்னூரைச் சொன்னாய் என் பேரைச் சொன்னாய் என்னடியாரை நோக்கினாய் அவர்கள் விடாயைத் தீர்த்தாய் அவர்களுக் கொதுங்க நிழலைக் கொடுத்தாய் என்றாப்போலே சிலவற்றை யேறிட்டு, மடிமாங்காயிட்டு, பொன்வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து மெழுகாலே யெடுத்துக் கால்கழஞ்சென்று திரட்டுமாபோலே ஜந்ம பரம்பரைகள்தோறும், யாத்ருச்சிகம் ப்ராஸங்கிகம் ஆநுஷங்கிகமென்கிற ஸுக்ருத் விசேஷங்களைக் கற்பித்துக் கொண்டு தானே யவற்றை ஒன்று பத்தாக்கி நடத்திக்கொண்டு போரும். (நன்மையென்று பேரிடலாவதொரு தீமையுங் காணாதே) அதாவது - இப்படி இடம் பார்த்துப்போருமளவில் சாஸ்த்ர மர்யாதாநுகுணமாகவாதல் தானறிந்ததாக வாரோபித்துக் கொண்டாதல் இவர்களை அஸத் கர்மத்தினின்றும் மீட்கைக் கவகாசமா யிருப்பதொரு நன்மை காணதவளவன்றிக்கே. அவ்வஸத் கர்மங்கள் தன்னிலே நன்மையென்று பேரிட்டுக் கொள்ளலாவதொரு தீமைதானு முட்படக் காணப்பெறாதே யென்கை. (நன்மையென்று பேரிடலாவதொரு தீமையாவது), பரஹிம்ஸை செய்து கொண்டு திரியா நிற்கச்செய்தே பகவத் பாகவத விரோதிகளா யிருப்பாரை யாத்ருச்சிகமாக ஹிம்ஸிக்கை. விஷய ப்ரவணனாய் பகவத் தாஸிகளைப் பின்பற்றிப் பலகாலும் கோயில்களிலே புக்குப் புறப்படுகை, பயிர் தின்ற பசுவைத் தொடர்ந்தவாறே அதொரு கோயிலை வளைய வருமாகில் அத்தை அடிக்கையிலுண்டான ஆக்ரஹத்தாலே தானுமத்தை வளைய வருகை, நிந்தார்த்தமாகத் திருநாமங்களைச் சொல்லுகை முதலானவை.
– இனி, (பகவத் குணாநுஸந்தாந மபயஹேது) என்று கீழருளிச் செய்தத்தை விசதீகரிக்கைக்காக, ஈச்வரனிவ்வாத்மோஜ்ஜீவநத்துக்குப் பண்ணும் க்ருஷி பரம்பரையை அருளிச்செய்கிறார் (த்ரிபாத் விபூயிலே) என்று தொடங்கி.
அடுத்து “பகவத் குணாநுஸந்தானம் அபயஹேது” என்று சூர்ணை 366ல் கூறப்பட்டதை விவரித்து உரைக்கும்விதமாக, ஸர்வேச்வரன் ஆத்மாவைக் கரையேற்று வதற்குச் செய்யும் முயற்சிகள் குறித்து இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.
“த்ரிபாதஸ்யாம்ருதம் திவி” என்கையாலே, நித்யவிபூதியை த்ரிபாத் விபூதி யென்னக்கடவதிறே. அதினுடைய த்ரிபாத்த்வந்தான் பலபடியாக நிர்வஹிக்கலா யிருக்கும்; எங்ஙனே யென்னில், “பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபாதஸ்யாம்ருதம் த்வி” என்று, இந்த விபூதியி லெல்லா பூதங்களு மிவனுக்கு நாலத்தொன்று என்னும்படி அல்பமா யிருக்கும்; பரமாகாசத்தில் இவனுடைய நித்யமான விபூதி த்ரிபாத்தென்னும்படி மும்மடங்கா யிருக்கும். “இந்த விபூதி த்வய விஷயமான பாதசப்தமும் த்ரிபாச் சப்தமும் அல்பத்வ மஹத்த்வங்களுக் குபலக்ஷணமித்தனையொழிய பரிச்சேதபர மன்று, லீலாவிபூதியி லண்டங்கள்தானே அஸங்க்யாதங்களாயிறே யிருப்பது” என்று தீப ப்ரகாசத்திலே ஜீயரருளிச் செய்கையாலே, இவ்விபூதியில் கார்யரூப ப்ரதேசத்தைப் பற்ற பரமாகாசத்தில் நித்யவிபூதி மும்மடங்கா யிருக்கு மென்னவுமாம். – அன்றிக்கே, “திவி இதி அப்ராக்ருதம் ஸ்தாநமுச்யதே; த்ரிபாத்த்வஞ்ச, அப்ராக்ருதைர் போக்யபோகோபகரண போகஸ்தாந விசேஷைர் வா, பூஷணாஸ்த்ராதி ரூபேண ஜகதந்தர்கத வஸ்த்வபிமாநிபிர் நித்யைர் பகவதநுபவமாத்ர பரைச்ச நித்யஸித்தைர் முக்தைச் சாத்மபிர்வா ஸம்பவதி” என்று ச்ருதப்ரகாசிகையிலே பட்டரருளிச் செய்தபடியே, அப்ராக்ருதமா யிருந்துள்ள போக்ய விசேஷங்கள் போகோபகரண விசேஷங்கள் போகஸ்தாந விசேஷங்களாகிற மூன்றம்சங்களோடே கூடியிருக்கையாலே, அஸ்த்ர பூஷணாத்யாயத்திற்படியே பூஷணாஸ்த்ராதி ரூபத்தாலே ஜகதந்தர்கத வஸ்த்வபிமாநிகளான நித்யரும், கேவல பகவதநுபவபரரா யிருக்கும் நித்யரும் முக்தருமா யிப்படி மூன்றம்சமா யிருக்கு மாத்மாக்களை உடைத்தாகையாலே யாதல் த்ரிபாத் தென்னவுமாம். ஆக இப்படி லீலாவிபூதியில் அத்யந்த வ்யாவ்ருத்தை யாகையாலே நிரதிசய ஸுகாவஹையான நித்யவிபூதியிலே. (பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க) நித்யமுக்தரோடே கூடியிருந்து ஓரொன்றே நிரதிசயாநந்த ஜநகமான ஸ்வரூப ரூபகுண விபூதிகளெல்லாவற்றையும் யுகபதே வாநுபவிக்கையாகிற பரிபூர்ணாநுபவம் அவிச்சிந்நமாய்ச் செல்லா நிற்க வென்கை. (அது உண்டதுருக்காட்டாதே) அதாவது, அப்போதப்போது வடிவு இட்டு மாறினாப்போலே புதுக்கணித்து வரப்பண்ணுமந்த வநுபவமொன்றும் வடிவில் தோற்றாதே யென்கை. (தேசாந்தரகதனான புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயங் கிடக்குமாப்போலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்) அதாவது, அநேக புத்ரர்களில் வைத்துக் கொண்டு ஒருவன் ஸ்வகர்மாநுகுணமாக தேசாந்தரமே போனால், மற்றுண்டான புத்ரர்களும் தானுமாயிருந்து ஜீவியா நிற்கச்செய்தேயும், “இவர்களோபாதி அவனுங் கூடவிருந்து வாழுகைக் கிட்டுப் பிறந்து வைத்தும் இத்தை யிழந்து கிடக்கிறானே!” என்று, தேசாந்தரகதனான வந்த புத்திரன் பக்கலிலே பிதாவினுடைய ஹ்ருதயங் கிடக்குமாப்போலே, நித்யமுக்தரும் தானுங் கூடியிருந்து வாழச்செய்தே, “இப்போகத்தில் ப்ராப்தியுண்டாயிருக்க இச்சேதந ரித்தை யிழந்து கிடப்பதே!” என்று தேசாந்தரஸ்தரான ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் நோராகப்போயென்கை. (இவர்களைப் பிரிந்தால் ஆற்றமாட்டாதே) அதாவது ஸம்ஹ்ருதி ஸமயத்தில் [ப்ராப்தியுண்டாயிருக்க] நித்யவிபூதியிலே இஸ்ஸம்ஸாரி சேதநரைப் பிரிந்து தானிருக்குமளவில், புத்ரபௌத்ராதிகளோடே ஜீவித்தவன் அவர்களை யிழந்து தனியனானாப்போலே, “ஸ ஏகாகீ நரமேத” என்கிறபடியே அவ்விழவு ஸஹிக்கமாட்டாதே யென்கை. ஸம்ஹ்ருதரா யிருக்குமளவிலும் இவர்களை சரீரமாகக்கொண்டு தான் சரீரியா யிருக்கச்செய்தேயும், அத்தையொரு கலவியாக நினையாதே, கரண களேபர ஸஹிதராய் அவர்கள் வர்த்திக்கிற காலத்தில் அந்தராத்மதயா ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளை நிர்வஹித்துக் கொண்டிருக்கை முதலானவற்றை இவர்களோட்டைக் கலவியாகவும், இவர்கள் கரண களேபர விதுரராய், அசிதவிசேஷிதராய்க் கிடக்க தான் நித்யவிபூதியிலே யிருக்குமிருப்பு இவர்களைப் பிரிந்திருக்கிற விருப்பாகவும் அவன் நினைத்திருக்கையாலே (இவர்களைப் பிரிந்தால்) என்றருளிச்செய்கிறார். (இவர்களோடே கலந்து பரிமாறுகைக்கு கரணகளேபரங்களைக் கொடுத்து) அதாவது, அந்தராத்மதையாலும் அவதாரார்ச் சாவதாரங்களாலும் இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குறுப்பாக, “விசித்ரா தேஹஸம்பத்தி:” இத்யாதிப்படியே, ஸ்வசரணகமல ஸமாச்ரயணோபகரணங்களான கரணகளேபரங்களை “தயமாந மநா” வாய்க்கொடுத்தென்கை. (அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கீடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து) அதாவது, அந்த கரணகளேபரங்களைக் கொண்டு அறியவேண்டுமவற்றை அறிந்து செய்யவேண்டுமவற்றைச் செய்து, தவிரவேண்டுமவற்றைத் தவிர்ந்து இப்படி வ்யாபரிக்கைக்கீடான சிச்சக்தி ப்ரவ்ருத்திசக்தி நிவ்ருத்திசக்திகளாகிற சக்தி விசேஷங்களையுங் கொடுத்தென்கை. (கண்காணநிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி) அதாவது, இத்தனையுஞ்செய்து ஸ்வாமித்வ ப்ராப்திதோற்ற இவர்கள் கண்ணுக்கு விஷயமாய் நிற்கில், “த்வம் மே” என்றால் ஸஹியாமல், “அஹம் மே” என்னும் ஸ்வதந்த்ரராகையாலே, எங்கள் கண் முகப்பிலே நீயொருக்காலும் நிற்கக்கடவை யில்லை என்று திருவாணையிட்டு நிஷேதிப்பர்களென்று நினைத்து, “ந சக்ஷுஷா பச்யதி கச்சநைநம்”, “கட்கிலீ” என்கிறபடியே இவர்கள் கண்ணுக்கு ஒரு காலமும் விஷயமாகாதபடி யென்கை. (உறங்குகிற ப்ரஜையைத் தாய்முதுகிலே யணைத்துக் கொண்டு கிடக்குமாப்போலே, தானறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக விடமாட்டாதே அகவாயிலே யணைத்து) அதாவது, தன்னையும் தாயையுமறியாதே கிடந்து உறங்குகிற ப்ரஜையை வத்ஸலையான மாதாவானவள் தானறிந்த ரக்ஷ்யரக்ஷக ஸம்பந்தமடியாக முதுகிலே யணைத்துக்கொண்டு கிடக்குமாப்போலே, அநாதிமாயயா ஸுப்தராய் ஸ்வபர ஸ்வரூபங்களி ளொன்றையு மறியாமல் கிடக்கிற விச்சேதநரை சேஷியான தானறிந்த ரக்ஷ்யரக்ஷக ஸம்பந்தமே ஹேதுவாக விட க்ஷமனன்றிக்கே, “ஆத்மநி திஷ்ட்டந்” என்கிறபடியே அந்தராத்மத்வேந இவற்றை ஸ்பர்சித்துக் கொண்டென்கை. – (ஆட்சியில் தொடர்ச்சி நன்றென்றுவிடாதே ஸத்தையை நோக்கி) அதாவது ஒருவனுடைமையை யொருவ னபஹரித் தாளாநிற்க உடையவனாய் வைத்து உடைமையை யிழந்தவன் தன்னதென்னு மிடந்தோற்றப் பலநாளும் தொடர்ந்து போந்தால் பின்பு வ்யவஹாரத்தில் விஜயஹேதுவாகா நிற்குமிறே; அப்படியே, “அநுபவ விபவாத்” என்கிற சேதநருடைய ஆட்சியிலும் நம்மதென்னுமிடந்தோற்ற ஒருதலை பற்றிக்கொண்டு போருகிற தொடர்ச்சி ப்ரபலமென்று நினைத்து, அந்தராத்மதயா அவஸ்திதனான தானிவர்களை யொருக்காலும் கைவிடாதே தாரகனாய்க்கொண்டு தார்ய பூதரான இவர்கள் ஸத்தையழியாமல் நோக்கி யென்கை. (உடன் கேடனாய்) அதாவது, இப்படி ஸத்தாதாரகதயா ஸ்வர்க்க நரக ப்ரவேசாதி ஸர்வா வஸ்தையிலு மிவர்களுக்குத் துணையாய்ப் போருகை. (உடன்கேடன்) என்பது, இவன் கேடு தன் கேடாயிருக்கு மவனையிறே. (இவர்கள் ஸத்கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும்போது மீட்கமாட்டாதே அநுமதி தாநத்தைப் பண்ணி உதாஸீநரைப் போலே யிருந்து மீட்கைக் கிடம் பார்த்து) அதாவது, “ஆதாவீச்வர தத்தயைவ புருஷஸ் ஸ்வாதந்த்ர்ய சக்த்யா ஸ்வயம் தத்தத் ஜ்ஞாந சிகீர்ஷண ப்ரயதநாந் யுத்பாதயந் வர்த்ததே” என்கிறபடியே, அடியிலே தான் கொடுத்த ஜ்ஞாத்ருத்வரூப ஸ்வாதந்த்ர்ய சக்தியாலே ஸ்வருச்யநுகுணமாக ப்ரவ்ருத்திகளைப் பண்ணிக்கொண்டு போருகைக்கு யோக்யரான இச்சேந்தநர், துர்வாஸநா பலத்தாலே பாபகர்மங்களிலே ப்ரவர்த்திக்குமளவிலும் அந்தர்யாமியான தான் நினைத்தால் மீட்கலா யிருக்கச்செய்தேயும், அப்படி செய்யுமளவில் ஸ்வாஜ்ஞாரூப சாஸ்த்ர விநியோகமறு மென்னுமத்தைப் பற்றவும், ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வருமென்னு மத்தைப்பற்றவும் மீட்கமாட்டாதே அநுமதி தாநத்தைப் பண்ணி, உதாஸீந னன்றிக்கே யிருக்கச்செய்தே இவர்கள் ளென்பட்டால் நல்லதென்றிருக்கு முதாஸீநரைப் போலேயிருந்தும், அதில் நின்று மவர்களை மீட்கைக் குறுப்பாகச் சொல்லிக் கொள்ளத்தக்கதொரு நன்மையாகிற அவகாசம் பார்த்தென்கை. (நெற்றியைக் கொத்திப் பார்த்தாலொரு வழியாலும் பசை காணா தொழிந்தால் அப்ராப்யமென்று கண்ணநீரோடே மீளுவது) அதாவது, ஸர்ப்ப தஷ்டராய் ம்ருத்கல்பரானவர்களை மந்த்ராதிகளாலே யெழுப்புகைக்கு ப்ராண ஸ்திதி பரீக்ஷார்த்தமாக நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு ப்ரகாரத்தாலும் ரக்தப் பசை காணாதவளவில், இவ்விஷயம் நமக்கினி கைபுகுராதென்று இழவோடே கைவாங்கும் பந்துக்களைப்போலே, நன்மை காணாதவளவில் விடாதே நன்மையென்று பேரிடலாவ தொரு தீமைதானுண்டோ வென்னு மளவாகப் பார்த்தவளவிலும் ஒரு ப்ரகாரத்தாலு மிவர்கள் பக்கல் பசை காணாவிட்டால், இவ்விஷயம் நமக்கு ப்ராபிக்கப்படுமதல்ல, இத்தை யிழந்தோமென் றழுது கண்ணநீரோடே மீளுவதென்கை. அன்றிக்கே, (நன்மையென்று பேரிடலாவதொரு தீமை) என்கிறது, “ச்யேநேநாபிசரந் யஜேத” என்று ஆஸ்திக்ய ஜநகமாக விஹிதமாகையாலே நன்மையென்று பேரிடலாயிருக்குமதாய், பரஹிம்ஸையாகையாலே தீமையாயிருக்கிற ச்யேநவித்யநுஷ்டாநத்தையாய், அங்கீகாரத்துக்குடலானதொரு நன்மை காணாதவளவன் றிக்கே சாஸ்த்ர மர்யாதையாலே மேல் தானாகிலுமாக்கிக் கொள்ளுகைக்கு யோக்யமான சாஸ்த்ராஸ்திக்யத்துக் குடலான அதுதானுமுட்பட இவர்கள் பக்கல் காணப்பெறாதே யென்னவுமாம். அப்போதைக்கு, (நெற்றியைக் கொத்திப் பார்த்தால்) இத்யாதியாலே, ஜ்ஞாத ஸுக்ரூத யோக்யதை யில்லாமையாலே அஜ்ஞாத ஸுக்ருதந்தா னுண்டோ வென்றாராய்ந்து, அதுவுமில்லாமையாலே ஒருவழியாலு மங்கீகார யோக்யதையற்று இழவோடே மீளும்படி சொல்லுகிறது. (தனக்கேற இடம் பெற்றவளவிலே) அதாவது - இப்படி மீண்டாப்போலே மீண்டுவிடுகையன்றிக்கே இவர்களை உஜ்ஜீவிப்பிக்கையி லுண்டான சாபலத்தாலே பின்னையு மங்கீகரிக்கைக் கவகாசம் பார்த்துத் திரியும் தனக்கேற அவகாசம் பெற்ற வளவிலே யென்கை. (என்னூரைச் சொன்னாய் இத்யாதி, என்றாப்போலே சிலவற்றை யேறிட்டு) அதாவது, அவ்வூர் இவ்வூர் என்று இவன் பல ஊர்களையுஞ் சொல்லா நிற்க, கோயில் திருமலை முதலாகத் தானுகந்த ஊர்களிலே யேதேனுமொன்றைச் சொன்னால், அம்மாத்ரமே பற்றாசாக, என்னுடைய ஊரைச் சொன்னாய் என்றும்; அவர் இவர் என்றாப்போலே சொல்லா நிற்க, ஒருவன் பேரைச் சொல்லுகிறதாக திருநாமங்களிலே யொன்றைச் சொன்னால், அவ்வளவிவே கொண்டு, என் பேரைச் சொன்னாய் என்றும்; சில பாகவதர்கள் காட்டிலே வழி போகா நிற்க அவர்களை ஹிம்ஸித்துக் கையிலுள்ளது பறிப்பதாக வழி பறிக்கார ருத்யோகிக்கிறவளவில், ஸ்வகார்யத்திலே போகிறானொரு சேவகன் அவர்கள் பின்னே தோன்ற, அவனை தத்ரக்ஷணார்த்தமாக வருகிறனாக நினைத்து அவர்கள் பயப்பட்டுப் பறியாதொழிய, அது பற்றாசாக அந்த சேவகனை, என்னடியாரை நோக்கினாய் என்றும்; ஒருவன் கர்மகாலத்தில் தன் வயல் தீயப்புக்கவாறே நீருள்ளவிடத்தே நின்றும் வயலிலே வர நெடுந்தூரத்திலே துலையிட் டிறையாநிற்க, மருபூமியிலே நெடுந்தூரம் நடந்து, இத்தனை ஜலம் பெறில் நம் ப்ராணன் தரிக்கும் என்னும்படி யிளைத்து வருகிறார்கள் சில பாகவதர், அவனறியாமல் அந்த நீரிலே தங்கள் ஸ்ரீபாதம் முதலானவற்றை விளக்கி இளைப்பாறிப் போனால், அதடியாக, என்னடியார் விடாயைத் தீர்த்தாய் என்றும்; ஒருவன் தனக்குச் சூதுசதுரங்கம் பொருகைக்கும், காற்றபேக்ஷிதமானபோது வந்திருக்கைக்கு இவற்றுக்காகப் புறந்திண்ணை கட்டிவைக்க, வர்ஷபீடிதராய் அங்கே யொதுங்குவோமென்று வருகிறார் சில பாகவதர் அங்கே யொதுங்கி இருந்துபோக, தாவந்மாத்ரத்தாலே, என்னடியார்க்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் என்றும்; இப்புடைகளிலே சிலவற்றை அவர்க ளறியாதிருக்கத் தானே யாரோபித் தென்கை. (மடிமாங்காயிட்டு) மடிமாங்கா யிடுகையாவது, மாங்கா யெடாமல் வெறுமனே வழி போகிறவன் மடியிலே மாங்காயை மறைத்துக்கொண்டு சென்றிட்டு, மாங்காயைக் களவுகண்டா யென்கை. இது வலிய ஆரோபிக்குமதுக்கு த்ருஷ்டாந்தம். (பொன் வாணியன் இத்யாதி, ஒன்று பத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்) அதாவது, பொன் வாணியம் செய்வானொருவன் ஆரேனும் பரீக்ஷிக்கைக்குக் காட்டின பொன்னை உரை கல்லிலே யுரைத்து ஒன்றும் சோராதபடி மெழுகாலே யொத்தி யெடுத்து நாளோட்டத்துடனே கால் பொன்னாய்த்து, கழஞ்சு பொன்னாய்த்து என்று திரட்டுமாப் போலே, ஒரு ஜந்ம மிரண்டு ஜந்மத்தள வன்றிக்கே சேதநருடைய ஜந்மபரம்பரைகள் தோறும், விடாயைத் தீர்த்தாய், ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் என்றாப்போலே யுண்டாம் யாத்ருச்சிகம், ஊரைச் சொன்னாய், பேரைச் சொன்னாய் என்றாப்போலே வரும் ப்ராஸங்கிகம், அடியாரை நோக்கினாய் என்றாப்போலே யுண்டா மாநுஷங்கிகம் என்கிற ஸுக்ருத விஷயங்களை, சாஸ்த்ர விஹிதமும் சேதந விதிதமுமன்றியேயிருக்கத் தானே கல்பித்து, கல்பிதமானவை தன்னை ஒன்றை அநேகமாக்கி நடத்திக் கொண்டு போருமென்கை.
புருஷஸூக்தத்தில் (3) - த்ரிபாதஸ்யாம்ருதம் திவி - என்று கூறுவதன் மூலம் நித்யவிபூதியாக உள்ள பரமபதம் என்பது த்ரிபாத் விபூதி ஆகிறது. இந்தப் பரமபதத்தை த்ரிபாத் என்று கூறியது பலவிதங்களில் பொருள் கொள்ளும்படியாக உள்ளது. எப்படி? புருஷஸூக்தம் - பாதோஸ்ய விச்வா பூதாநி த்ரிபாதஸ்யாம்ருதம் த்வி – அனைத்து பூதங்களும் ஒரு பாகமாக உள்ளன, அழிவற்ற பரமபதத்தில் இவனுடைய மூன்று பாகங்கள் உள்ளன - என்று கூறியது; அதாவது இந்தப் பூமியில் உள்ள அனைத்து பொருள்களும் சேர்ந்தாலும் இவனுடைய செல்வத்தில் நான்கில் ஒரு பாகம் என்று கூறலாம்படி குறைவற்று இருப்பதாகும்; பரமாகாசம் என்று கூறப்படுவதான பரமபதத்தில் இவனுடைய செல்வமானது த்ரிபாத் என்று கூறலாம்படி மூன்று மடங்காக இருக்கும். “இந்த விபூதி த்வய விஷயமான பாதசப்தமும் த்ரிபாச் சப்தமும் அல்பத்வ மஹத்த்வங்களுக் குபலக்ஷணமித்தனையொழிய பரிச்சேதபர மன்று, லீலாவிபூதியி லண்டங்கள்தானே அஸங்க்யாதங்களாயிறே யிருப்பது – இவனுடைய நித்யவிபூதி, லீலாவிபூதி என்பதான செல்வங்களை உணர்த்தக்கூடிய பாதம் மற்றும் த்ரிபாதம் போன்ற இரண்டும் பதங்களும் சிறியது மற்றும் பெரியது என்ற தன்மைகளை உணர்த்துமே அல்லது அவை கால்பங்கு முக்கால்பங்கு என்று அளவுகளைக் குறிக்காது; லீலாவிபூதி என்று கூறப்படும் இந்த உலகத்தில் அண்டங்கள் கணக்கில்லாமல் உள்ளன அல்லவோ?” – என்று தீப ப்ரகாசத்தில் வாதிகேசரி அழகியமணவாள ஜீயர் அருளிச்செய்தார்; ஆக இதற்கு ஏற்ப, இந்த உலகில் காணப்படும் இடங்கள் போன்று பரமாகாசம் என்பதான நித்யவிபூதியில் உள்ள பொருள்கள் மூன்றுமடங்கு உள்ளன என்று கொள்ளலாம். அல்லது திவி இதி அப்ராக்ருதம் ஸ்தாநமுச்யதே; த்ரிபாத்த்வஞ்ச, அப்ராக்ருதைர் போக்யபோகோபகரண போகஸ்தாந விசேஷைர் வா, பூஷணாஸ்த்ராதி ரூபேண ஜகதந்தர்கத வஸ்த்வபிமாநிபிர் நித்யைர் பகவதநுபவமாத்ர பரைச்ச நித்யஸித்தைர் முக்தைச் சாத்மபிர்வா ஸம்பவதி - திவி என்ற பதம் இந்தப் ப்ரக்ருதியுடன் தொடர்பு இல்லாமல் உள்ள பரமபதத்தைக் கூறுகிறது. அதாவது இந்த ப்ரக்ருதியின் தொடர்பு இல்லாத இனிய பொருள்கள், அவற்றை அனுபவிப்பதற்குத் தேவையான போகோபகரண பொருள்கள், அவற்றை அனுபவிக்கத் தேவையாக உள்ள இடங்கள் என்ற பொருள்கள் என்று மூன்றுவிதமாக உள்ளதால் த்ரிபாத் எனப்பட்டது. அல்லது ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்களின் வடிவில், உலகில் உள்ளவற்றைக் காப்பாற்றியபடி உள்ள நித்யஸூரிகள், பகவத்அனுபவத்தில் மட்டுமே நாட்டம் உள்ள நித்யஸூரிகள், முக்தி பெற்றவர்கள் என்று மூன்றுவிதமான பிரிவுகள் உள்ள ஆத்மாக்களைக் கொண்டதால் த்ரிபாத் எனப்பட்டது - என்று ச்ருதப்ரகாசிகையில் ஸுதர்சனபட்டர் அருளிச்செய்தது போன்று - இந்த உலகின் தொடர்பு இல்லாத போக்யவஸ்துக்கள், போகோபகரண வஸ்துக்கள், போக இடங்கள் என்ற வஸ்துக்கள் முதலான மூன்று விதமான பொருள்களுடன் கூடியிருப்பதால். (அல்லது) அஸ்த்ரபூஷணம் என்ற அத்யாயத்தில் கூறியுள்ளது போன்று ஆபரணங்கள், அஸ்த்ரங்கள் போன்றவற்றின் வடிவத்தில் இருந்தபடி உலகில் உள்ள பொருள்களை விரும்பும் நித்யஸூரிகள், பகவத் அனுபவத்தில் மட்டுமே குறிக்கோள் உள்ளவராக இருக்கும் நித்யஸூரிகள், முக்தர்கள் என்று மூன்றுவிதமான ஆத்மாக்களை உடையதால் என்று இரண்டுவிதங்களிலும் த்ரிபாத் என்று கூறப்பட்டது. இப்படியாக இந்த உலகங்களைக் காட்டிலும் உயர்ந்த மேன்மைகள் கொண்டதால் எல்லையற்ற இன்பம் அளிப்பதாக உள்ள நித்யவிபூதியில். (பரிபூர்ணாநுபவம் நடவாநிற்க) - நித்யமுக்தர்களுடன் கூடியிருந்தபடி, ஒவ்வொன்றும் இத்தகைய ஆனந்தம் அளிக்கும் என்று கூற இயலாதபடி எல்லை இல்லாத ஆனந்தம் ஏற்படுத்துகின்ற ஸ்வரூபம், ரூபம், குணம், செல்வம் போன்ற அனைத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கவல்ல பரிபூர்ண அனுபவம் தடை இல்லாமல் உள்ள நேரத்தில். (அது உண்டதுருக்காட்டாதே) - அப்போதைக்கப்போது வடிவத்தில் மாற்றி மாற்றி உண்டாவது போன்று புதிதுபுதிதாக உண்டாகக்கூடிய ஆத்ம அனுபவம் எதுவும் வடிவத்தில் தோன்றாமல். (தேசாந்தரகதனான புத்ரன் பக்கலிலே பித்ரு ஹ்ருதயங் கிடக்குமாப்போலே ஸம்ஸாரிகள் பக்கலிலே திருவுள்ளம் குடிபோய்) - பல பிள்ளைகள் உள்ள ஒருவனின், ஒரு பிள்ளை மட்டும், தனது கர்மம் காரணமாக வேறு தேசத்திற்குச் சென்றால், மற்ற பிள்ளைகளுடன் தான் சேர்ந்து மகிழ்வுடன் வாழ இயன்றாலும், அதனைச் செய்யாமல், “இவர்கள் போன்று அவனும் நம்முடன் சேர்ந்து வாழப் பிறந்தாலும், இதனை விட்டுப்போக நேர்ந்ததே” என்று மற்ற இடத்திற்குப் போன பிள்ளையின் நினைவே தந்தையின் இதயத்தில் இருக்கும். இது போன்று, நித்ய முக்தர்களுடன் ஸர்வேச்வரன் பரமபதத்தில் உள்ளபோதிலும், “இந்த அனுபவத்தில் உரிமை உள்ளபோதும், உலகில் உள்ள சேதனர்கள் இதனை இழந்து கிடக்கிறார்களே”, என்று பரமபதத்தில் இல்லாமல், இந்த உலகில் உள்ள ஸம்ஸாரிகளிடம் ஸர்வேச்வரனின் திருவுள்ளம் வந்து சேர்கிறது. (இவர்களைப் பிரிந்தால் ஆற்றமாட்டாதே) - அதாவது ப்ரளய காலத்தில். தன்னுடன் சேர்ந்திருப்பதற்கான தகுதி உள்ளபோதிலும், பரமபதத்தில் ஸம்ஸாரி சேதனர்களைப் பிரிந்து தான் மட்டும் உள்ளபோது, பிள்ளை மற்றும் பேரன் முதலானவர்களுடன் வாழ்ந்த ஒருவன் அவர்களை விட்டுப்பிரிந்து தனியாக இருந்து தவிப்பது போன்று, மஹோபநிஷத் – ஸ ஏகாகீ நரமேத - அவன் தனியனாக இருந்து துன்பம் அடைந்தான் – என்று கூறுவதற்கு ஏற்ப, அவர்களை இழந்து நிற்கும் நிலையை பொறுத்துக் கொள்ள இயலாதவன். ப்ரளயத்தின்போது உடல் உறுப்புகள் ஏதும் இல்லாத நிலையிலும் இந்த சேதனர்களைத் தனது சரீரமாகக் கொண்டு, தான் இவர்களுடைய ஆத்மாவாக உள்ளபோதிலும், அதனை ஒரு சேர்க்கை என்று இவன் எண்ணுவதில்லை; மாறாக, சரீரம் மற்றும் இந்த்ரியங்களோடு இவர்கள் வாழும் காலத்தில், அவர்களுடைய அந்தராத்மாவாக இருந்துகொண்டு, அவர்களின் செயல்பாடுகளையும் செயலற்ற தன்மைகளையும் நடத்தியபடி இருப்பதையே சேர்க்கையாக எண்ணுகிறான். இவர்கள் ப்ரளயகாலத்தில் சரீரம் மற்றும் இந்த்ரியங்கள் இல்லாமல், அசித் வஸ்துக்களைக் காட்டிலும் வேறுபட்டு உணர இயலாதவர்களாக உள்ளனர்; அப்போது நித்யவிபூதியில் தான் உள்ளபோது, இவர்களை விட்டுப்பிரிந்து இருப்பதாகவே அவன் எண்ணுகிறான். அதனால் “இவர்களைப் பிரிந்தால்” என்று அருளிச்செய்தார். (இவர்களோடே கலந்து பரிமாறுகைக்கு கரணகளேபரங்களைக் கொடுத்து) - அந்தர்யாமியாக உள்ளதாலும், அவதாரங்கள் மூலமாகவும், அர்ச்சை வடிவங்களாலும், இவர்களுடன் அவன் எப்போதும் சேர்ந்து வாழ எண்ணுகிறான். அதனால் ஸ்ரீவிஷ்ணு தத்வம் - விசித்ரா தேஹஸம்பத்தி: - விசித்ரமான இந்தச் சரீரம் - என்பதற்கு ஏற்ப தனது திருவடித்தாமரைகளை அவர்கள் அடைவதற்குத் தேவையான கருவிகளாக உள்ள சரீர உறுப்புகளை மிகுந்த கருணையோடு கொடுத்து. (அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கீடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து) - அந்தச் சரீரம் மற்றும் உடல் உறுப்புகள் ஆகியவை மூலமாக அறிய வேண்டியவற்றை அறிந்துகொண்டு, எதனைச் செய்யவேண்டுமோ அவற்றைச் செய்யவும், எவற்றைச் செய்யக்கூடாதோ அவற்றைத் தவிர்த்து நிற்கும்படியும் செய்கிறான்; அதாவது இவ்விதம் இவர்கள் செய்வதற்கு ஏற்ற ஞானசக்தி, செயலாற்றத் தேவையான சக்தி, செயல்கள் செய்யாமல் ஒதுங்கவல்ல சக்தி முதலானவற்றையும் கொடுத்து. (கண்காணநிற்கில் ஆணையிட்டு விலக்குவர்களென்று கண்ணுக்குத் தோற்றாதபடி) - இது போன்ற பலவற்றையும் செய்த பின்னரும், தான் இவர்களுடைய நாதன் என்பது வெளிப்படும்படி இவர்களின் கண்கள் முன்பாக வந்து அவன் நின்றால், ஸ்வாமி பராசரபட்டர் அருளிய திருமஞ்சனக்கட்டியத்தில் - த்வம் மே - நீ எனக்கு உரியவன் – என்று ஸர்வேச்வரன் கூறினால், அதனை ஏற்காமல், அஹம் மே – நானே எனக்கு உரியவன் - என்று தன்னைச் சுதந்திரமாக உள்ளவர்களாக எண்ணுகிறார்கள். இதனால், “எங்களுடைய கண் முன்பாக நீ வரவேண்டாம்”, என்று கூறி தன்னை மஹாலக்ஷ்மி மீது ஆணை என்று உரைத்து விலக்கிவிடுவர்கள் என்று எண்ணுகிறான். அதனால்தான், தைத்திரீய உபநிஷத் – ந சக்ஷுஷா பச்யதி கச்சநைநம் - அவனை யாரும் காண இயலாது - என்றும், திருவாய்மொழி (7-2-3) – கட்கிலீ - என்றும் கூறுவதற்கு ஏற்றபடி இவர்களுடைய கண்களுக்குப் புலப்படாமல் உள்ளான். (உறங்குகிற ப்ரஜையைத் தாய்முதுகிலே யணைத்துக் கொண்டு கிடக்குமாப்போலே, தானறிந்த ஸம்பந்தமே ஹேதுவாக விடமாட்டாதே அகவாயிலே யணைத்து) - தன்னையும் தனது தாயையும் குறித்து சரிவர அறிய இயலாத சிறிய குழந்தை உறங்கும்போது, அதன் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள தாய், தனக்கு அறிவில் எட்டியதான “தான் காப்பாற்றும் பொருள், குழந்தை காக்கப்படும் பொருள்” என்பதற்கு ஏற்ப உண்டான தொடர்பு காரணமாக, அந்தக் குழந்தையின் முதுகில் கட்டி அணைத்துக்கொண்டு உறங்குகிறாள். இதே போன்று எல்லையற்ற காலமாக அறியாமை என்ற மாயையில் உறங்கியபடி, தங்களுடைய ஸ்வரூபம் மற்றும் ஈச்வர ரூபம் குறித்து ஏதும் அறியாமல், அறிவற்ற இந்தச் சேதனர்களை, இவர்களின் எஜமானனாக உள்ள ஸர்வேச்வரன் தான் அறிந்ததான “காக்கப்படும் பொருள், காப்பாற்றும் பொருள்” என்ற ஸம்பந்தம் காரணமாக, கைவிடுவதற்கு இயலாதவனாக உள்ளான். இதனால் தைத்ரிரீய உபநிஷத் - ஆத்மநி திஷ்டந் - எந்தப் பரம்பொருள் ஆத்மாவாக உள்ளானோ - என்பதற்கு ஏற்ப இவர்களுடைய அந்தர்யாமியாக நின்று எப்போதும் அணைத்தபடி உள்ளான். (ஆட்சியில் தொடர்ச்சி நன்றென்றுவிடாதே ஸத்தையை நோக்கி) – ஒருவனுக்குச் சொந்தமான ஒரு பொருளை ஒருவன் அபகரித்துக்கொண்டு, அதனை அவன் நன்கு அனுபவித்தபடி உள்ளான் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் பொருளுக்குச் சொந்தக்காரன், “அந்தப் பொருள் என்னுடையது” என்று உணர்ந்தும் விதத்தில் பல நாட்கள் தொடர்ந்து எதிர்த்து வந்தால், அந்தப் போராட்டம் என்பதே நீதிமன்றத்தில் அவனுக்கான நியாயம் கிட்டுவதற்குக் காரணமாகிவிடும் அல்லவோ? அது போன்று – அனுபவ விபவாத் - அனுபவத்தின் பெருமை காரணமாக - என்றுள்ள சேதனர்களின் வாழ்க்கையில் “இவர்கள் நம்முடையவர்கள்” என்ற தனது உரிமை விளங்கும்படியாகச் செய்து, அவர்களை விட்டுவிடாமல் தொடர்ந்து ஒருதலையாகப் பற்றியபடி உள்ள ஸர்வேச்வரனின் விடாமுயற்சி மிகவும் வலிமையானது; இப்படியாக உள்ள ஸர்வேச்வரன் இவர்களுடைய அந்தராத்மாவாக நின்று, எப்போதும் கைவிடாமல் பற்றியபடி, இவர்களுடைய தாரகனாய் இருந்து, தன்னால் தாங்கப்படும் ஜீவனின் இருப்பு என்பது அழிந்துவிடாமல் நோக்கியபடி இருத்தல். (உடன் கேடனாய்) - அவர்களுடைய உயிர்களை இவன் தாங்கியபடி உள்ளதால், அவர்கள் ஸ்வர்க்கத்திற்குப் போனாலும், நரகத்திற்குச் சென்றாலும் அவர்களை விட்டுவிடாமல், அனைத்து நிலைகளிலும் அவர்களுக்குத் துணையாகச் செல்லுதல். (உடன்கேடன்) – ஒருவனுக்கு ஏற்படும் கேடு என்பது தனக்கு ஏற்படும் கேடு என்று சிந்திப்பவன். (இவர்கள் ஸத்கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும்போது மீட்கமாட்டாதே அநுமதி தாநத்தைப் பண்ணி உதாஸீநரைப் போலே யிருந்து மீட்கைக் கிடம் பார்த்து) – தத்வசாரத்தில் - ஆதாவீச்வர தத்தயைவ புருஷஸ் ஸ்வாதந்த்ர்ய சக்த்யா ஸ்வயம் தத்தத் ஜ்ஞாந சிகீர்ஷண ப்ரயதநாந் யுத்பாதயந் வர்த்ததே - தனது ஒவ்வொரு முயற்சியின் தொடக்திலும் ஸர்வேச்வரனால் தனக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் என்ற சக்தியில் ஜீவன் தானாகவே அதற்கான ஞானம் மற்றும் செயல்பாடுகளைச் செய்கிறான் - என்று கூறுவதற்கு ஏற்ப, தொடக்கத்தில் தான் அளித்த ஞானத்தைக் கொண்டிருத்தல் என்றுள்ள சுதந்திர சக்தி காரணமாக, தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பலவிதமான செயல்களைச் செய்யும் குணம் கொண்டவர்களாக ஜீவன்கள் உள்ளனர். இவ்விதம் உள்ளபோது துர்வாசனை காரணமாக, அவர்கள் பாவச்செயல்களில் ஈடுபடக்கூடும். அப்போது அவர்களுடைய அந்தர்யாமியாக தான் உள்ளபோதிலும், தான் நினைத்தால் அதனைத் தடுக்கவல்லவனாக உள்ளபோதிலும், அப்படிச் செய்தால் தன்னுடய ஆணைகள் என்ற சாஸ்த்ரங்கள் வீணாகும் என்பதாலும், பின்னர் அனைவரும் மோக்ஷம் போகும் தகுதி அடைவார்கள் என்பதாலும், தீயவற்றைச் செய்வதற்கும் அனுமதி அளிக்கிறான். அதே நேரத்தில் அவர்களைப் பொருட்படுத்தாமல் உள்ள உதாசீனன் போன்று அல்லாமல், “இவர்களுக்கு என்ன செய்தால் நன்மை ஏற்படும்?”, என்றுள்ள உதாசீனனைப் போன்றுள்ளான். இப்படி அவர்களை அந்தத் தீயசெயல்களிலிருந்து மீட்பதற்கு ஏற்ற தருணம் பார்த்தபடி இருந்து. (நன்மையென்று பேரிடலாவதொரு தீமையுங் காணாதே) - இவ்விதமாக இவர்களுக்கு உதவ ஒரு இடம் (தருணம்) பார்த்துக் கொண்டிருக்கும்போது சாஸ்த்ர எல்லைக்கு உட்பட்டோ அல்லது அவன் இவர்களுடைய செயல் இன்னது என்று அறிந்து கொண்டோ இவர்களிடம் நன்மையைக் காண முயல்கிறான்; அது மட்டும் அல்லாமல், அந்தந்த தீயகர்மங்களில் ஏதேனும் ஒன்றையாவது நன்மை என்று கருதிக் கொள்ளும் விதத்தில் எந்த ஒரு தீமையும் இல்லை என்று பொருள். (நன்மையென்று பேரிடலாவதொரு தீமையாவது) - மற்றவர்களை ஏதேனும் ஒரு விதத்தில் துன்புறுத்தியபடி உள்ளபோதும், ஸர்வேச்வரன் மற்றும் அவனுடைய அடியார்களைத் துன்புறுத்துவர்களைத் தற்செயலாகத் துன்புறுத்துதல்; பெண்களிடம் உள்ள சபலம் காரணமாக பகவத்தாஸிகளைப் பின்தொடர்ந்து கோயில்களுக்குள் பலமுறை சென்று வருதல்; தான் வளர்த்த பசுவானது தான் வளர்த்த பயிரையே மேயும்போது அதனை விரட்டியபடி செல்லும் நேரத்தில், அந்தப் பசு தற்செயலாக ஒரு கோயிலை வலம் வரும்போது, அதனை அடிக்கவேண்டும் என்று பிடிவாதம் காரணமாக, தானும் அதன் பின்னாலேயே கோயிலை வலம் வருதல்; ஒருவனைத் திட்டுவதற்காக ஸர்வேச்வரனின் திருநாமங்களைப் பயன்படுத்துதல் போன்றவை. (நெற்றியைக் கொத்திப் பார்த்தாலொரு வழியாலும் பசை காணா தொழிந்தால் அப்ராப்யமென்று கண்ணநீரோடே மீளுவது) - பாம்பு கடித்து இறக்கும் தறுவாயில் உள்ள ஒருவனை மந்த்ரம் போன்றவற்றால் பிழைத்து எழ வைக்க முயல்வர்; அப்போது அவன் உயிருடன் உள்ளானா என்று பரிசோதிக்கும் விதமாக அவனுடைய நெற்றியில் கொத்திப் பார்ப்பர். அப்போது அங்கு இரத்தம் வரவில்லை என்றால், “இவன் இறந்துவிட்டான்” என்று அவனைக் கைவிட்டுப் போவார்கள். அத்தகையை உறவினர்கள் போன்று நன்மை என்பது சிறிதும் இல்லாமலும், நன்மை என்று கருதக்கூடிய தீமையும் இல்லாமலும் உள்ளபோது, எந்தவிதத்தாலும் கரையேற்ற இயலாதவர்கள் குறித்து, “இவர்கள் இனி நமக்குக் கிடைக்கமாட்டார்கள். இவரை நாம் இழந்தோம்” என்று அழுது கொண்டே கண்ணீரோடு செல்லுதல் என்று பொருள். அல்லது, “நன்மையென்று பேரிடலாவதொரு தீமை” என்பதற்கு வேறு பொருளும் உரைக்கலாம். ச்யேநேநாபிசரந் யஜேத - மற்றவர்களுக்குத் துன்பம் உண்டாக்க எண்ணுபவன் (அல்லது கொல்ல எண்ணுபவன்) சேந யாகம் செய்வானாக - என்று வேதத்தில் ஆஸ்திகபுத்தி உண்டாவதற்காக உரைக்கப்பட்டது. இந்தச் செயல் நன்மை என்று உரைக்கவல்லதாகவும், மற்றவர்களைத் துன்புறுத்துவதால் தீமையாகவும் உள்ள சேநயாகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இது ஏற்றுக் கொள்வதற்கான தகுதியற்ற எந்த ஒரு நன்மையும் இல்லாதது; சாஸ்த்ரவரம்புகளுக்கு உட்பட்டது; சாஸ்த்ர நம்பிக்கை என்பதைப் பிற்காலத்தில் உண்டாக்கவல்லது என்றபோதிலும் இவர்களிடம் இதுவும் காணப்படாமல் உள்ளது என்று பொருள். இவ்விதம் பொருள் கொள்ளும்போது “நெற்றியைக் கொத்திப் பார்த்தால்” என்பது எதனைக் குறிக்கும் என்றால் - அறிந்து செய்த நன்மை காணப்படவில்லை, அறியாதவிதத்தில் செய்த நன்மை (புண்ணியம்) என்று ஏதும் உண்டோ என்று ஆராய்ந்தால், அதுவும் இல்லை; ஆக எந்த ஒரு மார்க்கத்தாலும் கரையேற்றுவதற்குத் தகுதி இல்லாத நிலை அறிந்து பின்வாங்குதல் என்பதாகும். (தனக்கேற இடம் பெற்றவளவிலே) - இவ்விதம் பாம்பால் கடிக்கப்பட்ட அவர்களைக் கைவிடுவது போன்று கைவிடாமல், இவர்களைக் கரையேற்றவேண்டும் என்ற ஆசை காரணமாக, இவர்கள் வாழ்க்கையில் தன்னால் ஏற்கப்படும் தருணம் என்றாவது வருமோ என்று எதிர்பார்த்தபடி இருத்தல். (என்னூரைச் சொன்னாய் இத்யாதி, என்றாப்போலே சிலவற்றை யேறிட்டு)- இவன், “அந்த ஊர், இந்த ஊர்” என்று பல ஊர்களின் பெயர்களை உரைத்தபடி உள்ளபோது, “திருவரங்கம், திருமலை” போன்றதான, தான் மிகுந்த விருப்பத்துடன் வசிக்கின்ற ஊரின் பெயர்களைத் தற்செயலாக உரைத்தால், அதனை மட்டுமே ஸர்வேச்வரன் தனது கருத்தில் கொண்டு, “என்னுடைய ஊரின் பெயரை உரைத்தாயே” என்றும்; “அவர், இவர்” என்று மற்றவர்களின் பெயரை உரைக்கும்போது, அவர்களின் பெயராக உள்ள இவன் திருநாமங்களில் ஏதேனும் ஒன்றை உச்சரித்தாலும், அதனைக் கருத்தில் கொண்டவனாக, “எனது திருநாமத்தை உச்சரித்தாயே” என்றும்; ஸர்வேச்வரனுடைய அடியார்கள் சிலர் காட்டில் செல்லும்போது அவர்களைத் துன்புறுத்தி, அவர்கள் கைகளில் உள்ளவற்றைப் பறிப்பதற்காக வழிப்பறித் திருடர்கள் முயலும்போது, தனது செயல் ஒன்றை செய்யும் பொருட்டு அந்த வழியாக வரும் சேவகன் ஒருவனை அந்தத் திருடர்கள் கண்டு, அவன் அந்த அடியார்களைக் காக்கவே வருகிறான் என்று அவனைக் கண்டு பயந்து, வழிப்பறி செய்யாமல் ஓடிவிடும்போது, அந்தச் சேவகனை “எனது அடியார்களை நீ காப்பாற்றினாயே” என்றும்; ஒருவன் கோடைக் காலத்தில் காய்ந்து போன தனது வயலில் நீர் நிரப்பும் விதமாக நீர் உள்ள இடத்திற்குச் சென்று வயலை நிரப்புவதற்காக ஏற்றம் உள்ள இடத்தில் ஏற்றத்தை இறைக்கின்ற நேரத்தில், தண்ணீர் இல்லாத இடங்களில் நீண்ட நேரம் நடந்து வந்து, சிறிதளவு என்றாலும் தண்ணீர் கிட்டினால் மட்டுமே பிழைக்க இயலும் என்று வரும் அடியார்களின் தாகம் அவன் இறைத்த நீரின் மூலம் தீர்வதுடன் அல்லாமல், அவர்கள் தங்களுடைய திருவடிகளைக் கழுவி இளைப்பாறவும் உதவும்விதமாக அந்த நீர் உள்ளது என்னும்போது, “எனது அடியார்களின் தாகம் தீர்த்தாயே” என்றும்; ஒருவன் தனது பொழுதுபோக்கும் விதமாக சூதாட்டம், சதுரங்கம் முதலானவற்றை விளையாடவும், தான் அமர்ந்து காற்று வாங்க எண்ணும்போது அமர்ந்து இளைப்பாறவும் கட்டி வைத்த திண்ணையில் அடைமழை காரணமாக அந்த வழியாக வரும் அடியார்கள் ஒதுங்கி நிற்கும் போது, அதனைக் கருத்தில் நிறுத்தியவனாக, “எனது அடியார்கள் ஒதுங்க நிழல் அளித்தாயே” என்றும் ஸர்வேச்வரன் எண்ணுகிறான். அதாவது உதவி செய்தவர்கள், “நாம் உதவி செய்தோம்” என்று உணராமல் உள்ளபோதிலும், அவர்கள் செய்த உதவியைக் கணக்கில் கொள்கிறான் என்று கருத்து. (மடிமாங்காயிட்டு) - மாங்காயை ஒருவன் எடுக்காமல் போனபோதிலும் அவன் மடியில் அவன் அறியாதவிதத்தில் மாங்காயை மறைத்துக் கொண்டுபோய் அவனிடம் வைத்துவிட்டு, “மாங்காய் திருடினாய்” என்று பழி கூறுவது போன்று, ஒருவன் செய்யாமல் உள்ளபோதிலும், அவன் செய்ததாகக் கூறுதல் என்பது, மேலே கூறப்பட்ட ஸர்வேச்வரனின் சிந்தைக்கு உதாரணம். (பொன் வாணியன் இத்யாதி, ஒன்று பத்தாக்கி நடத்திக்கொண்டு போரும்) – பொன் வியாபாரம் செய்யும் ஒருவன் தன்னிடம் பரிசோதிக்கும்விதமாக ஒருவன் வந்து கொடுக்கும் தங்கத்தை உரைகல்லில் உரசிப் பார்க்கிறான். பின்னர் அந்தத் தங்கம் உரைகல்லில் சேர்ந்து விடாதபடி மெழுகு கொண்டு அதனை ஒற்றி எடுத்து திரட்டுகிறான். இப்படியே செய்து நாளடைவில் கால் சவரன் சேர்த்தது, ஒரு கழஞ்சு சவரன் சேர்ந்தது என்று சேமிக்கிறான். இது போன்று ஒரு ஜன்மம், இரண்டு ஜன்மம் அல்லாமல், பல ஜன்மங்களாக எனது அடியார்களின் தாகம் தீர்த்தாய், ஒதுங்க நிழல் அளித்தாய் என்பது போன்று தற்செயலாக ஏற்படும் புண்ணியங்கள்; எனது ஊரை உரைத்தாய், எனது திருநாமம் கூறினாய் என்பது போன்ற புண்ணியங்கள்; எனது அடியாரைக் காப்பாற்றினாய் என்பது போன்றுள்ள செயல்களால் ஏற்படும் புண்ணியம் ஆகியவற்றை ஸர்வேச்வரன் தானாகவே மனதில் கணக்கு வைக்கிறான். இவை சாஸ்த்ரங்களால் கூறப்பட்டதும், அவர்கள் அறிந்து கொண்டு செய்ததும் அல்ல; என்றாலும் தானாகவே அவற்றைப் புண்ணியம் என்று அவன் கொள்கிறான். இவ்விதம் தானாகவே கற்பித்துக் கொண்டதைப் பல மடங்காக்கிக் கொள்கிறான் என்று கருத்து.