Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 380)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
“க்ருபயா பர்யபாலயத்”, “அரிசினத்தால்”.
சீறின தசையிலும் காலைக்கட்டிக் கொள்ளலாயிருக்கும்படிக்கு ப்ரமாணங் காட்டுகிறார் (க்ருபயா பர்யபாலயத், அரிசினத்தால்) என்று.
அவன் கோபம் கொண்டாலும் அவனுடைய திருவடிகளைப் பிடித்துக் கொள்ளலாம் என்பதற்கு உதாரணம் காண்பிக்கிறார்.
– அதாவது “ஸதம் நிபதிதம் பூமௌ சரண்யச் சரணாகதம், வதார்ஹமபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத்” என்று, அபராதத்தைத் தீரக் கழியச் செய்து ப்ரஹ்மாஸ்த்ரத்துக் கிலக்காய்ப் புறம்பு புகலற்றவாறே வந்து திருவடிகளிலே விழுந்த காகத்தை, க்ருபையாலே ரக்ஷித்தா ரென்கையாலும்; “அரிசினத்தா லீன்ற தாயகற்றிடினும் மற்றவள் தன்னருள் நினைந்தே யழுங்குழுவி யதுவே போன்றிருந்தேன்” என்று, பெறுகைக்கு வருந்தி வரங்கிடந்து பெற்ற தாயானவள், இது செய்த தீம்பைக் கண்டு அரிந்து பொகடவேண்டும் சீற்றத்தை யுடையளாய்க் கொண்டு கிட்ட வரவொட்டாமல் தள்ளிவிட்டாலும், வேறு போக்கடியற்று, சீறியெடுத்தெறிகிற அவளுடைய முகத் திரக்கத்தையே நினைத்து அழுது காலைத் தழுவிக் கொள்ளும் குழவி போலே, என் னபராதத்தைக் கண்டு அருகுவாராதபடி தேவர் தள்ளிவிடப் பார்க்கிலும் திருவடிகளல்லது வேறு போக்கடி யற்றிருந்தேன் என்று ஸ்ரீகுலசேகரப்பெருமா ளருளிச்செய்கையாலும்; (சீறினாலும் காலைக் கட்டிக்கொள்ளலாம்படி யிருப்பானெருவன்) என்னுமிடம் ஸித்தமென்கை. இப்படி, ஆழ்வாரருளிச்செய்த இவ்வர்த்தத்தை, “நிராஸகஸ்யாபி நதாவதுத்ஸஹே மஹேசஹாதும் தவபாத பங்கஜம், ருஷா நிரஸ்தோபி சிசுஸ் ஸ்தநந்தயோ நஜாது மாதுச்சரணௌ ஜிஹாஸதி” என்று ஆளவந்தாரருளிச் செய்தாரிறே. ஆக இவ்வளவும், (பயாபயங்க ளிரண்டும் மாறாடில் அஜ்ஞதையே ஸித்திக்கும்) என்றதின் மேல் வந்த சங்கா பரிஹாரங்கள் பண்ணப்பட்டது.
இராமாயணம் ஸுந்தரகாண்டம் (38-35) – ஸதம் நிபதிதம் பூமௌ சரண்யச் சரணாகதம், வதார்ஹமபி காகுத்ஸ்த: க்ருபயா பர்யபாலயத் – சரணம் புகுந்தவனும், தரையில் விழுந்தவனும் ஆகிய அந்தக் காகாஸுரனைக் கொல்வதற்கான அனைத்து உரிமையும் உள்ளபோதிலும், அனைவருக்கும் புகலிடமாக உள்ள இராமன் அவனைக் காப்பாற்றினான் - என்று கூறுவதற்கு ஏற்ப, குற்றத்தை மிகவும் தெளிவாக அறிந்து கொண்டே செய்து, இராமனின் ப்ரஹ்மாஸ்த்ரத்தால் அடிபட்டு வேறு கதியில்லாமல் தனது திருவடிகளில் வந்து விழுந்த காகாஸுரனை இராமன் தனது கருணையால் காப்பாற்றினான். பெருமாள்திருமொழி (5-1) - அரிசினத்தா லீன்ற தாயகற்றிடினும் மற்றவள் தன்னருள் நினைந்தே யழுங்குழுவி யதுவே போன்றிருந்தேன் – என்பதற்கு ஏற்ப, “குழந்தையைப் பெறுவதற்கு மிகவும் துன்பப்பட்டு வரம் கிடந்து பெற்றெடுத்த தாய் ஒருவள், அந்தக் குழந்தை செய்யும் தீங்கைக்கண்டு அதனை வெட்டி விடவேண்டும் என்ற கோபம் கொண்டு, தனது அருகில் அது வரக்கூடாது என்று தள்ளிவிட்டாலும், வேறு போக்கிடம் அறியாமல், சீற்றத்துடன் தன்னைத் தூக்கி வீசும் அந்தத் தாயின் முகத்தில் உள்ள இரக்கத்தை மட்டுமே எண்ணி அழுதபடி அவளுடைய காலகளைப் பிடித்துக் கொள்ளும் குழந்தையைப் போன்று, நான் செய்த குற்றத்தைக் கண்டு உனது அருகில் வரவிடாதபடி தள்ளிவிட்டாலும் உனது திருவடிகள் அல்லாமல் வேறு போக்கிடம் இல்லாமல் உள்ளேன் - என்று குலசேகராழ்வார் அருளிச்செய்தார். இந்த இரண்டினாலும் “சீறினாலும் காலைக் கட்டிக்கொள்ளலாம்படி யிருப்பானெருவன்” என்று கடந்த சூர்ணையில் கூறப்பட்டது தெளிவாகிறது. இப்படியாக ஆழ்வார் அருளிச்செய்த இதே அர்த்தத்தை ஸ்தோத்ரரத்னத்தில் (26) - நிராஸகஸ்யாபி நதாவதுத்ஸஹே மஹேசஹாதும் தவபாத பங்கஜம், ருஷா நிரஸ்தோபி சிசுஸ் ஸ்தநந்தயோ நஜாது மாதுச்சரணௌ ஜிஹாஸதி - ஸர்வேச்வரனே! என்னை நீ கைவிட முயற்சித்தாலும் உனது திருவடித் தாமரையை விட்டுப்போவதற்கு நான் விரும்பமாட்டேன். தாய்ப்பால் பருகும் ஒரு குழந்தையை அதன் தாய் தள்ளினாலும், தனது தாயின் கால்களை அந்தக் குழந்தை விடாது அல்லவோ - என்று ஸ்வாமி ஆளவந்தார் அருளிச்செய்தார் அல்லவோ? ஆக இதுவரை “பயாபயங்க ளிரண்டும் மாறாடில் அஜ்ஞதையே ஸித்திக்கும்” என்றுள்ள சூர்ணை 367ல் உண்டான சந்தேகத்திற்கு விடை அளிக்கப்பட்டது.