Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 378)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
சீற்றமுண்டென்றறிந்தால் சொல்லும்படி யென்னென்னில், அருளும் ஆர்த்தியும் அநந்யகதித்வமும் சொல்லப்பண்ணும்.
– “சீற்றமுள” என்ற பின்பும் “ஆகிலும் செப்புவன்” என்று முன்பு சொன்னது தன்னையே சொல்லுகைக்கு ஹேதுவை, ப்ரச்நோத்தரரூபேண ப்ரகாசிப்பிக்கிறார் (சீற்றம்) என்று தொடங்கி.
பெரியதிருமொழி (11-8-1) – சீற்றமுள - என்று கூறிய பின்னர், பெரியதிருமொழி (11-8-2) – ஆகிலும் செப்புவன் – என்று முன்னர் உரைத்த விஷயத்தையே மீண்டும் உரைத்ததன் காரணத்தை, இந்தச் சூர்ணையில் கேள்வி-பதில் வடிவத்தில் அருளிச்செய்கிறார்.
– அதாவது, கீழ்ச்சொன்ன வித்தாலே ஈச்வரன் திருவுள்ளத்துக்குச் சீற்ற முண்டென் றறிந்தால் பின்னையு மிவ்வார்த்தையைக் கூசாமல் திருமுன்பே சொல்லும்படி யெங்ஙனே யென்னில்? அவன் சீற்றத்தைத் தன் ஸந்நிதியில் ஜீவிக்கவொட்டாத பர:துக்கா ஸஹிஷ்ணுத்வரூபையான க்ருபையும், சீற்றங்கண்டஞ்சி வாய் மூட வொட்டாதபடி கரையழிந்து செல்லுகிற ஸம்ஸாரார்த்தியும், சீறியெடுத் தெறியிலும் வேறு புகலில்லாமையாகிற அநந்யகதித்வமும் சொல்லும்படி பண்ணுமென்கை. இத்திருமொழியிலே, “அடைய வருளா யெனக்குன்றனருளே”, “துணியேனினி நின்னருளல்ல தெனக்கு”, “தொண்டரானவர்க் கின்னருள் செய்வாய்” என்று பல விடங்களிலு மவனருளையும்; “ஆற்றங்கரை வாழ் மரம்போ லஞ்சுகின்றேன்”, “காற்றததிடைப்பட்ட கலவர் மனம்போலாற்றத் துளங்கா நிற்பன்”, “பாம்போடொரு கூரையிலே பயின்றாப்போல் தாங்காதுள்ளந் தள்ளும்”, “இருபாடெரி கொள்ளியுனுள் ளெறும்பே போலுருகா நிற்குமென்னுள்ளம்”, “வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போலே யுள்ளந் துளங்கா நிற்பன்” என்று பல த்ருஷ்டாந்தங்களாலும் தம்முடைய ஆர்த்யநந்ய கதித்வங்களையு மருளிச்செய்தாரிறே.
முன்னர் உரைத்த சொற்கள் கேட்டு ஸர்வேச்வரன் திருவுள்ளத்தில் கோபம் உள்ளது என்று அறிந்த பின்னரும், இந்தச் சொற்களைச் சற்றும் கூசாமல் அவன் முன்பாக மீண்டும் எப்படி உரைக்க இயலும்? இதற்கு விடை - அவனுடைய கோபம் என்பது தனது அருகில் வர இயலாதபடி செய்வதான மற்றவர்களின் துன்பத்தைக் கண்டால் பொறுக்க இயலாத அவனுடைய கருணையும், அவனுடைய சீற்றத்தைக் கண்ட பின்னரும் அச்சம் கொண்டு வாயை மூடிக் கிடக்க இயலாதபடி செய்வதான கரையை அழிக்கும் வெள்ளம் போன்ற ஸம்ஸார துன்பமும், அப்படியே அவன் சீற்றத்துடன் நம்மை எறிந்தாலும் வேறு புகலிடம் இல்லாத அநந்யகதித்வமும் இவ்விதம் நம்மை உரைக்கும்படிச் செய்யும். இந்தத் திருமொழியில், பெரியதிருமொழி (11-8-6) - அடைய வருளா யெனக்குன்றனருளே - என்றும், (11-8-8) – துணியேனினி நின்னருளல்ல தெனக்கு – என்றும், (11-8-9) – தொண்டரானவர்க் கின்னருள் செய்வாய் - என்றும் பல பாசுரங்களில் அவனுடைய கருணை குறித்து அருளிச்செய்தார். மேலும் பெரியதிருமொழி (11-8-1) - ஆற்றங்கரை வாழ் மரம்போ லஞ்சுகின்றேன், (11-8-2) – காற்றததிடைப்பட்ட கலவர் மனம்போலாற்றத் துளங்கா நிற்பன், (11-8-3) – பாம்போடொரு கூரையிலே பயின்றாப்போல் தாங்காதுள்ளந் தள்ளும், (11-8-4) – இருபாடெரி கொள்ளியுனுள் ளெறும்பே போலுருகா நிற்குமென்னுள்ளம், (11-8-5) - வெள்ளத்திடைப்பட்ட நரியினம் போலே யுள்ளந் துளங்கா நிற்பன் - என்றும் உள்ள பாசுரங்களில் காணப்படும் பல உதாரணங்கள் மூலம் தனது ஸம்ஸார துன்பம் மற்றும் வேறு துணை இல்லாத நிலை ஆகியவற்றை அருளிச்செய்தார்.