Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 377)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

சீற்றமுளவென்ற வநந்தரத்திலே யிவ்வர்த்தத்தைத்தாமே அருளிச்செய்தாரிறே.

– இப்படி சொல்லுகை ஈச்வரனுக்குச் சீற்றத்துக் குடலென்னுமிது லௌகிக ந்யாயத்தைக் கொண்டு சொல்லவேணுமோ, தத்வ தர்சிகளான திருமங்கையாழ்வார் பூர்வோக்திக் கநந்தரத்திலே தாமே அருளிச்செய்தாரிறே யென்கிறார் (சீற்றமுள) என்று தொடங்கி.

கடந்த சூர்ணையில் கூறியது போன்று உரைப்பதே ஸர்வேச்வரன் கோபம் கொள்வதற்கான காரணம் என்பதை, உலகில் பொதுவாக காணப்படும் நியாயங்கள் மூலம் உரைக்கவேண்டுமோ? உண்மையாக உள்ளவற்றை அறிந்தவர்களான திருமங்கையாழ்வார் முன்னர் உரைத்த பாசுரத்திற்கு அடுத்தபடியாகத் தானே அருளிச்செய்தார் என்று இந்த சூர்ணையில் உரைக்கிறார்.

– அதாவது “இன்னம், மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பாய்கொல்” என்று ஈச்வரன் தன் ஸ்வாதந்த்ர்யத்தாலே ஸம்ஸரிப்பிக்கிறானாகச் சொன்னவிது, கர்மாநு குணமாக ஸம்ஸரிக்கிற ஆத்மாவை ஸம்ஸாரத்தினின்று மெடுக்கைக்கு க்ருஷி பண்ணிப் போருமவன் திருவுள்ளம் சீறுகைக் குடலென்று நினைத்து, கீழ் விண்ணப்பஞ் செய்த வார்த்தையாலே திருவுள்ளத்துக்குச் சீற்றமுண்டென்ற முதல் வார்த்தைக் கநந்தரத்திலே, இழவுக்கடி யவனாகச் சொல்லுகை நிக்ரஹ ஜநகமென்னு மிவ்வர்த்ததை முன்பப்படி அருளிச்செய்த தாமே அருளிச்செய்தாரிறே யென்கை.

பெரியதிருமொழி (11-8-1) - இன்னம் ஆற்றங்கரைவாழ் மரம் போல் அஞ்சுகின்றேன் – என்று அருளிச்செய்ததைத் தொடர்ந்து, பெரியதிருமொழி (11-8-2) – மக்கள் தோற்றக்குழி தோற்றுவிப்பாய்கொல் – என்று அருளிச்செய்தார். அதாவது ஸர்வேச்வரன் தனது சுதந்திரம் காரணமாக ஜீவாத்மாவை ஸம்ஸாரத்தில் மூழ்கியபடி இருக்கச்செய்கிறான் என்று உரைத்தால், கர்மம் காரணமாக ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ள ஜீவாத்மாவை அதிலிருந்து உயர்த்துவதற்கு முயற்சிக்கும் ஸர்வேச்வரனின் திருவுள்ளத்தில் சீற்றம் ஏற்படும் என்று எண்ணினார்; ஆகவே இதுவரை விண்ணப்பம் செய்த சொற்கள் மூலம் ஸர்வேச்வரனுக்கு கோபம் உண்டு என்ற பொருள் உள்ளதான முதல் சொல்லைத் தொடர்ந்து (அதாவது கடந்த பாசுரத்தினைத் தொடர்ந்து), அவனை இழந்து நிற்பதற்குக் காரணம் (அவனுடைய சுதந்திரம் என்று) அவனே என்று உரைப்பது சீற்றத்தை ஏற்படுத்தும் என்றுள்ள அர்த்தத்தை திருமங்கையாழ்வார் அருளிச்செய்தார் அல்லவோ?