Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 376)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

எடுக்க நினைக்கிறவனைத் தள்ளினாயென்கை எடாமைக்குறுப்பிறே.

இப்படி சொல்லுமளவில் ஈச்வரன் கைவாங்கு மென்னுமத்தை, லௌகிக ந்யாயத்தை யுபஜீவித்துக்கொண்டு தர்சிப்பிக்கிறார் (எடுக்க நினைக்கிறவனை) என்று தொடங்கி.

இவ்விதம் கூறும்போது, ஸர்வேச்வரன் ஜீவனைப் பெற முயற்சிக்காமல், அவனைக் கைவிடுவது என்பதை உலகத்தில் உள்ள ந்யாயங்கள் கூறி விளக்குகிறார்.

அதாவது ஆழ்ந்த கிணற்றில் தன் கர்மாநுகுணமாக அநவதாநத்தாலே விழுந்தவனை அருகினின்றா னொரு க்ருபாவானானவ னெடுப்பதாக யத்நிக்கிற வளவிலே, தான் விழுகிறபோது அவனாஸந்நனென்கிற மாத்ரத்தைக் கொண்டு அவன் தன்னைத் தள்ளினானாக நினைத்து, “இக்கிணற்றிலே யென்னைத் தள்ளினாயும் நீயன்றோ என்றால், “நான் செய்யாத காரியத்தை இவன் சொல்லுவதே!” என்று சீற்றமெழுந்திருந்து எடாமல் கைவாங்குகைக் குறுப்பாமாப்போலே, ஸ்வகர்மத்தாலே ஸம்ஸாரமாகிற படுகுழியிலே விழுந்து கிடக்கிற தன்னை யெடுக்க நினைக்கிற க்ருபாவானான வீச்வரனை, “இத்தனை காலமுமென்னை ஸம்ஸாரத்திலே தள்ளிவிட்டு வைத்தாயும் நீயே” என்றால், சீறிக் கைவாங்கி, பட்டது படுகிறான் என்றிருந்து விடுகைக் குறுப்பாமிறே யென்கை.

ஆழமாக உள்ள ஒரு கிணற்றில் ஒருவன் தனது கர்மம் காரணமாக, கவனம் தவறி விழுகிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை அருகில் நிற்கும் கருணை உள்ளம் கொண்ட ஒருவன் எடுக்க முயல்கிறான் என்றும் வைப்போம். அப்போது, தான் அந்தக் கிணற்றில் விழுந்தபோது தனது அருகில் அந்தக் கருணை உள்ளவன் நின்றதையே காரணமாக எண்ணி, அவனே தன்னைத் தள்ளிவிட்டவன் என்று கருதி, “இந்தக் கிணற்றில் நீ அல்லவோ என்னைத் தள்ளிவிட்டாய்?”, என்று கேட்கிறான் என வைப்போம். அப்போது அந்தக் கருணை உள்ளவன், “நான் செய்யாத ஒரு செயலை, நான் செய்ததாக இவன் உரைக்கிறானே” என்று கோபம் கொண்டு, அவனைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யாமல் இருந்துவிடுவான் அல்லவோ? அதே போன்று, தனது கர்மம காரணமாக ஸம்ஸாரம் என்ற படுகுழியிலே விழுந்து கிடக்கும் ஜீவனாகிய தன்னை மேலே தூக்கி விட ஓடி வரும் கருணைக்கடலான ஸர்வேச்வரனிடம், “இத்தனை காலம் என்னை இந்த ஸம்ஸாரத்தில் தள்ளிவிட்டவன் நீயே அல்லவோ?”, என்று கூறினால், ஸர்வேச்வரன் கோபத்துடன் அவனைக் கைவிடுகிறான். “இவன் எப்படியோ போகிறான், கர்மத்திற்கு ஏற்பத் துன்பப்படுகிறான்” என்று ஸர்வேச்வரன் இருப்பதற்கு ஜீவனின் இந்தச் சிந்தனையே காரணமாகிறது என்று கருத்து.