Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 375)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

மற்றைப்படி சொல்லில் இழவுக்குறுப்பாம்.

இங்ஙனன்றிக்கே மாறிச் சொல்லுமளவில் வருமநர்த்தத்தை அருளிச்செய்கிறார் மேல் (மற்றைப்படி சொல்லில்) என்று தொடங்கி.

– இவ்விதம் பொருள் கொள்ளாமல், மாற்றி பொருள் உரைத்தால் உண்டாகவல்ல தீமையை அருளிச்செய்கிறார்.

– அதாவது, இப்படியன்றிக்கே, (பயாபயங்களிரண்டும் மாறாடில்) என்கிற விடத்திற்போலே, “இழவுக்கடி ஈச்வர ஸ்வாதந்த்ர்யம், பேற்றுக்கடி சேதந ஸத்குணம்” என்று இழவுபேறுகளுக்கு ஹேதுவை மாற்றிச் சொல்லில் ஈச்வரன் கைவாங்குகையாலே அவன் திருவடிகளைப் பெறாம லிழந்து போகைக் குடலாமென்கை. அதவா, (மற்றைப்படி) இத்யாதிக்கு, “இழவுக்கடி சேதந கர்மம், பேற்றுக்கடி ஈச்வர க்ருபை” என்று இழ விவனாலும் பேறவனாலுமாகச் சொன்னபடி யன்றிக்கே, இழவு பேறுக ளிரண்டுக்குமடி யீச்வர ஸ்வாதந்த்ர்யமென்று அநாதிகால மிழந்ததுக்குமடி அவனாகச் சொல்லில் அவன் கைவாங்குகையாலே. ஒருகாலமு மவனைப் பெறாம லிழந்து போகைக் குடலாய்விடு மென்னவுமாம்.

இவ்விதம் அல்லாமல் சூர்ணை (367) – பயாபயங்களிரண்டும் மாறாடில் – என்றதில் கூறப்பட்டது போன்று, ஜீவன் ஸர்வேச்வரனைப் பெறாமல் இருப்பதற்கு ஸர்வேச்வரனின் ஸ்வாதந்த்ர்யமே காரணம், ஜீவன் ஸர்வேச்வரனைப் பெறுவதற்கு ஜீவனிடம் உள்ள நல்ல குணங்களே காரணம் என்று ஜீவன் இழப்பதற்கும் பெறுவதற்குமான காரணங்களை மாற்றிச் சொல்லக்கூடும். இவ்விதம் உரைத்தால் – ஸர்வேச்வரன் ஜீவனைப் பெறுவதற்கான முயற்சி ஏதும் செய்யாமல் உள்ளான் என்றாகி விடும்; அதுவே அவனுடைய திருவடிகளை ஜீவன் பெறாமல் இருப்பதற்கான காரணம் என்றாகிவிடும். அல்லது இந்தச் சூர்ணைக்கு வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம். ஜீவன் ஸர்வேச்வரனை இழப்பதற்கும் அடைவதற்கும் காரணம், ஸர்வேச்வரனுடைய ஸ்வாதந்த்ர்யமே ஆகும் என்று உரைத்தால், ஸர்வேச்வரன் இவனை ஏற்றுக்கொள்ளாமல் பின் வாங்குவதால், எந்த ஒருநாளிலும் அவனை அடைய இயலாமல் போவதற்கு இதுவே காரணமாகிவிடும் என்றும் கொள்க.