Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 374)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
இழவுக்கடி கர்மம்; பேற்றுக்கடி க்ருபை.
ஆனால் இழவு பேறுகளுக்கடி யெவையென்ன அருளிச்செய்கிறார் (இழவுக்கடி) என்று தொடங்கி.
இவ்விதம் கொண்டால் ஜீவாத்மா ஸர்வேச்வரனை அடைவதற்கும், அடையாமல் போவதற்கும் என்ன காரணம் என்பதை அருளிச்செய்கிறார்.
அதாவது பகவத்விஷயத்தை அநாதிகால மிழக்கைக்கு ஹேது, “முன் செய்த முழுவினை” என்னும்படி அநாதிகால ஸஞ்சிதமான இவனுடைய கர்மம்; இப்படி இழந்து கிடக்கிறவிவ னவ்விஷயத்தைப் பொறுகைக்கு ஹேது, “விதிவாய்க்கின்று காப்பாரார்” என்னும்படி இருகரையுமழியப் பெருகும் பகவத் க்ருபை யென்கை.
ஸர்வேச்வரனை எல்லையற்ற காலமாக ஜீவன் இழந்து நிற்பதற்குத் திருவாய்மொழி (1-4-2) - முன் செய்த முழுவினை - என்று கூறுவதற்கு ஏற்ப, பல காலமாகச் சேர்ந்து கிடக்கின்ற ஜீவனின் கர்மங்களே ஆகும். இப்படியாக இழந்து நிற்கும் ஜீவன், ஒருநாள் ஸர்வேச்வரனை அடைவதற்கான காரணம், திருவாய்மொழி (5-1-1) - விதிவாய்க்கின்று காப்பாரார் - என்பதற்கு ஏற்ப இரண்டு கரைகளும் (ஜீவனின் பாவம் என்ற கரை, சாஸ்த்ரங்கள் என்ற கரை) அழிந்து போகும்படியாகப் பெருகும் ஸர்வேச்வரனின் கருணையே ஆகும்.