Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 372)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
இவனுடைய அநுமதி பேற்றுக்கு ஹேது வல்லாதாப்போலே அவனுடைய அநுமதியும் இழவுக்கு ஹேதுவன்று.
– ஆனால், “அப்ரதிஷித்தமநுமதம்” என்கிற ந்யாயத்தாலே, விலக்காமை யாவது அநுமதியாய்த்த பின்பு, அவனநுமதியோ பின்னே இவனிழவுக்கு ஹேதுவென்ன அருளிச்செய்கிறார் மேல் (இவனுடைய) என்று தொடங்கி.
இவ்விதம் கொண்டால், அப்ரதிஷித்தமநுமதம் - தடுக்காமல் இருப்பது அனுமதி அளிப்பது போன்றதே ஆகும் - என்ற நியாயத்தின்படி, விலக்காமல் உள்ளது என்பது அனுமதி என்றாகிறது; அப்படி என்றால், ஜீவன் துன்பம் அடைதல் என்பது ஸர்வேச்வரனின் அனுமதி காரணமாகவோ என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ரக்ஷ்யபூதனான இவனுடைய ரக்ஷ்யத்வாநுமதி அசித் வயாவ்ருத்தி வேஷமாகையாலே பகவல்லாபத்துக்கு ஹேதுவல்லாதவோபாதி, ரக்ஷகனான அவனுடைய ஸம்ஸாராநுமதியும் ஸ்வாஜ்ஞாரூப சாஸ்த்ர மர்யாதை ஜீவிக்கைக்காக க்ரமேணாங்கீகரிக்கிறோ மென்று இவன் ருசி பார்த்திருக்கிற விருப்பாகையாலே ததலாபத்துக்கு ஹேதுவன்றென்கை.
காப்பாற்றப்படுபவனாக உள்ள ஜீவனைக் காப்பாற்ற ஸர்வேச்வரன் ஒப்புக் கொள்ளுதல் என்பது - ஜீவனானவன் அறிவுள்ளவன் அல்லது அசேதனங்களைக் காட்டிலும் வேறுபட்டவன் என்னும் தன்மையால் ஏற்பட்டதாகும்; ஆக அந்தத் தன்மை ஸர்வேச்வரனை அடைவதற்கு முக்கியமான காரணம் ஆகாது. அதே போன்று காக்கும் தன்மை கொண்ட ஸர்வேச்வரன், ஜீவனை ஸம்ஸாரத்தில் நீடிக்க அனுமதித்திருப்பது என்பது - தன்னுடைய ஆணைகளாக உள்ள சாஸ்த்ரங்களின் மரியாதையானது நீடித்து நிற்பதற்காகவே ஆகும்; “சரியான காலம் வரும்போது இவனை நாம் நம்மிடம் சேர்த்துக் கொள்வோம்” என்று இவனுக்குத் தன்னிடம் உள்ள விருப்பத்தை எதிர்பார்த்தபடி உள்ளதால், ஜீவன் ஸர்வேச்வரனை அடையாமல் உள்ளதற்குக் காரணமாகாது.