Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 371)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
ப்ரஜையைக் கிணற்றின் கரையினின்றும் வாங்கதொழிந்ததால் தாயே தள்ளினா ளென்னக் கடவதிறே.
– விலக்காத மாத்ரங்கொண்டு அவனே செய்தா னென்னலாமோவென்ன அருளிச்செய்கிறார் (ப்ரஜையை) என்று தொடங்கி.
அவன் அந்தத் துன்பங்களை விலக்கவில்லை என்பதற்காக, அவனே அவற்றை ஏற்படுத்தினான் என்று கூறலாமோ என்பதான கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, கிணற்றின் கரையிலே ப்ரஜையிருக்கிறபடியைக் கண்ட மாதாவனவள் அப்போதே யோடிச்சென்று கிணற்றின் கரைநின்றும் வாங்காதொழிந்தால், அக்கிணற்றிலே ப்ரஜை விழுந்தவளவில், “தாயப்போதே சென்றெடுத்தாளாகில் ப்ரஜை விழுமோ, கிணற்றின் கரையிலிருப்பை யிவளநுமதி பண்ணியிருக்கையாலே யன்றோ விழுந்தது, ஆனபின்பிவளன்றோ தள்ளினாள்” என்று லோகஞ் சொல்லக்கடவதிறே யென்கை.
ஒரு கிணற்றின் அருகில் நிற்கும் சிறிய குழந்தையை அதன் தாய் ஓடிச்சென்று எடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை ஒரு நொடியில் கிணற்றில் விழுந்துவிட்டால், “தாய் ஓடிச்சென்று எடுத்திருந்தால், அந்தக் குழந்தை கிணற்றில் விழுந்திருக்குமோ? கிணற்றின் அருகில் போவதற்குத் தாய் அனுமதி கொடுத்த காரணாத்தால் அல்லவோ, குழந்தை கிணற்றில் விழுந்தது? ஆகவே அது தானாகவே விழவில்லை, தாய் தள்ளிவிட்டதாகவே ஆகும்” என்று லோகத்தில் கூறுவர். அது போன்றே இங்கும் கொள்ளவேண்டும்.