Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 370)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

ப்ரஜை தெருவிலே யிடறித் தாய் முதுகிலே குத்துமாபோலே, நிருபாதிக பந்துவாய் சக்தனாயிருக்கிறவன் விலக்காதொழிந்தல் அப்படிச் சொல்லலாமிறே.

பந்தாநுஸந்தாநத்தாலே இப்படி தன்னால் வருமவற்றை அவன் குறையாகச் சொல்லலாமோ வென்ன; ஆமென்னு மிடத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச்செய்கிறார் (ப்ரஜை) என்று தொடங்கி.

– ஆழ்வார்கள் மேலே கூறிய கருத்துக்கள் அவர்களுடைய கர்மம் காரணமாக உண்டாகக் கூடியவை ஆகும். இப்படி உள்ளபோது, அவனுடைய ஸம்பந்தம் குறித்து எண்ணுவதன் காரணமாக ஏற்படுகின்றன என்று அவன் மீது தோஷம் கற்பிப்பது சரியோ என்று கேள்வி எழலாம். இதற்கு “ஆம்” என்று பதில் அளித்து, தக்க உதாரணமும் காண்பிக்கிறார்.

– அதாவது, க்ரீடார்த்தமாகத் தெருவிலே ஓடித் திரிகிற ப்ரஜை, அங்கே இடறிக் கால் நொந்தவாறே அழுது கொண்டு அகத்திலே வந்து தனக்கிவ் வேதனை வந்தது தாயாலேயாக நினைத்து, அவள் முதுகிலே குத்துமாபோலே, ஒருபாதி ப்ரயுக்தமல்லாமையாலே ஒழிக்க ஒழியாத பந்தத்தையுடையவனுமாய், இச்சேதநனுடைய கர்மத்தோடு ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு வாசியற ஸர்வமும் ஸ்வாதீநமாகையாலே கர்மாநுகுணமாக ப்ரக்ருதி ப்ராக்ருதங்களாலே யிவன் படுகிற நலிவைத் தவிர்க்கைக்கு சக்தனுமா யிருக்கிறவன், நலிவு படவிட்டு விலக்காதொழிந்தால், அவனிவற்றையிட்டு நலிவிக்கிறா னென்னலாமிறே யென்கை.

விளையாடுவதற்காகத் தெருவில் ஓடித் திரியும் ஒரு சிறிய குழந்தை, கால் தடுக்கிக் கீழே விழுகிறது என்று வைப்போம். அப்போது கால் வேதனை காரணமாக வீட்டிற்கு வரும்; அங்கிருந்த தனது தாய் மூலமே அந்த வேதனை ஏற்பட்டதாக எண்ணி, அவளுடைய முதுகில் அடிக்கும். இது போன்று – எந்தவிதமான காரணமும் இல்லாமல் வந்த உறவுமுறை என்பதால் தள்ளிவிட இயலாத உறவுமுறை உள்ளவனும், ஜீவனுடைய கர்மம், சரீரம் மற்றும் அதன் அவயவங்கள் ஆகிய அனைத்தையும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் தனக்கு உடைமையாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரன், ஜீவன் அடையும் துன்பங்களை விலக்காமல் இருந்தால், அந்தத் துன்பங்கள் மூலமாக ஸர்வேச்வரனே ஜீவனை வருத்துகிறான் என்று கூறலாம் அல்லவா?