Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 368)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
ஆனால் “நலிவானின்ன மெண்ணுகின்றாய்”, “ஆற்றங்கரை வாழ்மரம் போலஞ்சுகின்றேன்” என்கிற பாசுரங்களுக்கு அடியேன்னென்னில்.
– “அஜ்ஞதையே ஸித்திக்கும்” என்றவித்தைத் தள்ளுகைக்காக, ஆழ்வார்கள் பாசுரங்களைக் கொண்டு ப்ரத்யவஸ்தாநம் பண்ணினவர்கள் சங்கையை யநுவதிக்கிறார் “ஆனால்” என்று தொடங்கி.
கடந்த சூர்ணையில் கூறப்பட்டதான “அறியாமையே ஏற்படுகிறது” என்பதைத் தள்ளும்விதமாக, ஆழ்வார்கள் பாசுரங்களை மனதில் சிந்தித்தபடி, ஒரு சிலர் கடந்த சூர்ணையில் கூறப்பட்ட விஷயத்திலிருந்து மாறுபட்டு நிற்கக்கூடும். அவர்கள் எழுப்பும் கேள்வியை உரைக்கிறார்.
– அதாவது, இப்படியாகில் தத்த்வவித க்ரேஸரரான ஆழ்வார்கள், “உண்ணிலாவிய வைவரால் குமைதீற்றி என்னையுன் பாதபங்கயம், நண்ணிலா வகையே நலிவானின்ன மெண்ணுகின்றாய்” என்றும், “காட்டிப் படுப்பாயோ” என்கிறபடியே விஷயங்களைக் காணில் முடியும்படியான வென்னை, உள்ளே நிரந்தரவாஸம் பண்ணுகையாலே ஆந்தரசத்ருக்களாயிருக்கிற இந்த்ரியங்க ளைந்தாலும் நலிவுண்ணும்படி பண்ணி ப்ராப்தமுமாய் போக்யமுமான உன் திருவடிகளைக் கிட்டாதபடியாகவே, சரணாகதனான பின்பும் ஸம்ஸாரத்திலே வைத்து நலிய வெண்ணா நின்றாயென்றும்; “மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொலென்றின்ன மாற்றங்கரை வாழ்மரம் போலஞ்சுகின்றேன்” என்று – மநுஷ்யர்களுடைய கர்ப்பஸ்தாநத்திலே என்னுடைய கர்மாநுகுணமாக வின்னம் ஸம்ஸரிப்பிக்கிறாயோவென்றும்; இப்போதிப்போது போய்த்து என்னும்படி பயஸ்தாநமான ஆற்றங்கரையிலே வர்த்திக்கிற மரம்போலே உன் ஸ்வாதந்த்ர்யத்தை நினைத் தஞ்சாநின்றேன் என்றும் அருளிச்செய்த பாசுரங்களுக்கு நிதாநமென்னென்னி லென்கை.
கடந்த சூர்ணையில் கூறப்பட்டது போன்று வைத்துக்கொண்டால் உண்மையை அறிந்தவர்களில் முதலில் நிற்பவர்களான ஆழ்வார்கள், கீழே உள்ள பாசுரங்களை ஏன் அருளிச்செய்தார்கள் என்ற கேள்வி எழக்கூடும். திருவாய்மொழி (7-1-1) - உண்ணிலாவிய வைவரால் குமைதீற்றி என்னையுன் பாதபங்கயம், நண்ணிலா வகையே நலிவானின்ன மெண்ணுகின்றாய் - என்றும், திருவாய்மொழி (6-9-9) - காட்டிப் படுப்பாயோ – என்றும் கூறுவதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனாகிய உன்னைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபட்டு, அவற்றைக் கண்டவுடனேயே அழியும்படியாக நான் உள்ளேன்; இப்படிப்பட்ட என்னை, என்னுடைய சரீரத்தின் உள்ளேயே எப்போதும் நிரந்தரமாக வசித்து வருவதான சத்ருக்கள் போன்றுள்ள இந்த்ரியங்கள் மூலம் என்னைத் துன்புறுத்துகிறாய்; மேலும், எனது ஸ்வரூபத்துக்கு ஏற்றதும், இன்பம் அடைவிக்கக் கூடியதும், அடையவேண்டிய இலக்காக உள்ளதும் ஆகிய உனது திருவடிகளை அடைய இயலாமல் வைத்து, நான் உன்னைச் சரணம் என்று புகுந்த பின்னரும் என்னை ஸம்ஸாரத்தில் சிக்கித் தவிக்க வைக்கிறாய் - என்றும்; பெரியதிருமொழி (11-8-1) – மக்கள் தோற்றக் குழி தோற்றுவிப்பாய் கொலென்றின்ன மாற்றங்கரை வாழ்மரம் போலஞ்சுகின்றேன் – மனிதர்களின் கர்ப்பஸ்தானத்தில் எனது கர்மத்திற்கு ஏற்றபடி இன்னமும் என்னை இந்த ஸம்ஸாரத்தில் உழலவைப்பாயோ – என்றும்; “இப்போது அழியுமோ, இப்போது அழியுமோ” என்று எப்போதும் அச்சத்துடன் காணப்படும் ஆற்றங்கரையில் உள்ள மரம் போன்று உன்னுடைய சுதத்திரம் காரணமாக நீ என்னை எப்போது என்ன செய்வாயோ என்று எண்ணி எப்போதும் அச்சப்படுகிறேன் - என்றும் கூறியது காண்க.