Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 367)
ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்
பயாபயங்களிரண்டும் மாறாடில் அஜ்ஞாதையே ஸித்திக்கும்.
இப்படி இவ்விடத்திலே பயாபயஹேதுக்களான ஸகலதோஷ ஸகல குணங்களையும் சேரச் சொல்லியிருக்கச் செய்தே, (இழவுக்கடி கர்மம், பேற்றுக்கடி க்ருபை) என்றும், (கர்ம பலம்போலே க்ருபாபலமு மநுபவித்தேயறவேணும்) என்றும், கர்மத்தையும் க்ருபையையும் இழவுபேறுகளுக்கு ஹேதுவாகச் சொல்லிக் கொண்டு போய், (பயஹேது கர்மம், அபயஹேது காருண்யம்) என்று நிகமித்தது இவையெல்லாவற்றிலு மிவனுக்கு ஸம்ஸார மோக்ஷங்களுக்கு ப்ரதாந ஹேதுக்களவையாகையாலே; இவை இரண்டையும் பின்செல்லும் மற்றுள்ளவையும் இவை புக்கவிடத்தே தானே வந்து விடுமிறே. இங்ஙனன்றிக்கே, அவன்படியை நினைத்து பயமும், தன் படியை நினைத்து அபயமுமாமளவில் அறிவிலித்தனமே பலிக்குமென்கிறார் (பயாபயங்களிரண்டும்) என்று தொடங்கி.
இங்கு இவ்விதம் அச்சம் உண்டாவதற்குக் காரணமாக உள்ள குற்றங்களையும் அச்சம் ஏற்படாமல் உள்ளதற்குக் காரணமாக உள்ள குணங்களையும் ஒன்றாக உரைத்தார். ஆனால் சூர்ணை-374ல் “இழவுக்கடி கர்மம், பேற்றுக்கடி க்ருபை” என்றும், சூர்ணை-402ல் “கர்ம பலம்போலே க்ருபாபலமு மநுபவித்தே யறவேணும்” என்றும் கர்மத்தை மட்டும் இழப்பதற்குக் காரணமாகவும், கருணையை மட்டும் பெறுவதற்குக் காரணமாகவும் கூறிக்கொண்டார்; தொடர்ந்து சூர்ணை-404ல் “பயஹேது கர்மம், அபயஹேது காருண்யம்” என்று முடித்தது ஏன்? இவை அனைத்திற்குள்ளும், இவனுடைய பிறப்பு மற்றும் மோக்ஷம் ஆகியவற்றுக்கு முக்கியமான காரணங்களாக இவை உள்ளதால் ஆகும். இவை இரண்டும் எங்கு உள்ளதோ அந்த இடத்தில் மற்ற காரணங்கள் தாங்களாகவே பின்தொடர்ந்து வந்துவிடும். அல்லது வேறுவிதமாகவும் பொருள் உரைக்கலாம் - ஸர்வேச்வரனுடைய தன்மையை எண்ணி பயம் கொள்ளுதல், தனது தன்மையை எண்ணி பயம் கொள்ளாமல் இருத்தலும் அறிவற்ற தன்மையையே ஏற்படுத்தும் என்று இந்தச் சூர்ணையில் உரைப்பதாகவும் கொள்ளலாம்.
– அதாவது, கீழ்ச்சொன்னபடியன்றிக்கே, அநாதிகாலம் தனக்குப் பரதந்த்ரமான ஆத்மவஸ்துவை கர்மவ்யாஜத்தாலே ஸம்ஸரிப்பித்துப் போந்தவனன்றோ! நிரங்குச ஸ்வதந்த்ரனானவவ னின்னமும் ஸம்ஸரிப்பிக்கில் செய்வதென்; என்று அவன்படியை நினைத்து பயப்படுகையும், முன்பு போலன்றிக்கே நமக்கிப்போ தாத்ம குணங்களுண்டாகையால் பேற்றில் கண்ணழிவில்லையென்று தன்படியை நினைத்து பயங்கெடுகையுமாமளவில்; தான் தனக்கு நாசகன் என்று பயப்படுகையும், ஈச்வரனே ரக்ஷகனென்று பயங்கெடுகையுமாகிற ஜ்ஞாத்ருத்வ வேஷமில்லாமையாலே அஜ்ஞதையே ஸித்தித்துவிடுமென்கை.
அல்லது மேலே கூறப்பட்டபடி அல்லாமல், “எல்லையற்ற காலமாகத் தனக்கு அடிமைப்பட்ட இந்த ஆத்மாவை, கர்மம் என்பதைக் காரணமாகக் காண்பித்து, ஸம்ஸாரத்தில் உழலும்படிச் செய்பவன் ஸர்வேச்வரன் அல்லவோ? எல்லையற்ற ஸ்வதந்த்ரம் கொண்டவனாகிய அவன் மேலும் பலகாலம் நம்மை ஸம்ஸாரத்தில் மூழ்க வைத்தால் என்ன செய்வது என்று அவனுடைய தன்மையைக் குறித்து எண்ணி பயம் கொள்ளுதல்; “முன்பு போன்று அல்லாமல் நமக்கு இப்போது ஆத்மகுணங்கள் இருக்கின்ற காரணத்தால் மோக்ஷம் கிட்டுவது உறுதியே” என்று தனது நிலையை எண்ணிக் கொண்டு பயம் கொள்ளாமல் இருத்தல். இந்த இரண்டின் மூலம் ஏற்படுவது என்ன? தானே தன்னை நாசம் செய்து கொள்பவன் என்று எண்ணி அச்சம் கொள்ளுதல்; ஸர்வேச்வரன் நம்மைக் காப்பாற்றுபவன் என்று எண்ணி அச்சம் இல்லாமல் இருத்தல் ஆகிய இரண்டும் இவனுக்கு ஏற்படுகின்ற அறிவின்மை காரணமாக உண்டாவதில்லை; ஆக அறியாமையே ஏற்படுகிறது என்று கருத்து.