Sri Vachana Bhushanam - ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம் (சூர்ணை 366)

ஐந்தாம் ப்ரகரணம் – பகவந் நிர்ஹேதுக க்ருபா ப்ரபாவம்

ஸ்வதோஷாநுஸந்தாநம் பயஹேது; பகவத் குணாநுஸந்தாநம் அபயஹேது

இனி, (ஸ்வதோஷாநுஸந்தாநம் பயஹேது, பகவத் குணாநுஸந்தாநம் அபயஹேது) என்று தொடங்கி, (நிவர்த்யஜ்ஞாநம் பயஹேது, நிவர்த்தகஜ்ஞாந மபயஹேது) என்னுமளவாக, இவ்வதிகாரிக் கநாதிகாலார்ஜித கர்மவிநாச காரணமாய் அத்வேஷம் முதலாக ப்ராப்தி பர்யந்தமாக நடுவுள்ள பேறுகளுக்கெல்லாம் ப்ரதாந ஹேதுவான பகவந்நிர்ஹேதுக க்ருபா வைபவம் சொல்லப்படுகிறது. ஸம்ஸாரிகள் தோஷமும் ஸ்வதோஷமென்று நினைக்கை முதலாக ப்ரஸக்தாநுப்ரஸக்தமாய் வந்த அர்த்த விசேஷங்களை ப்ரதிபாதித்துத் தலைக்கட்டின அநந்தரம், கீழ் (ஸ்வதோஷத்துக்கும்) இத்யாதி வாக்யத்திலே இவனுக்கு அநவரத கர்த்தவ்யமாகச் சொன்ன ஸ்வதோஷ பகவத் பாகவத குணாநுஸந்தாநங்களில் வைத்துக்கொண்டு, பாகவத குணாநுஸந்தாநம் ப்ரதிபாத்யாம்சத்துக் குபயுக்தமல்லாமையாலே அத்தைவிட்டு, அதுக்குபயுக்தமான ஸ்வதோஷ பகவத் குணாநுஸந்தாநங்களை அங்கீகரித்துக்கொண்டு அவை இரண்டுக்கும் ப்ரயோஜநமின்ன தென்கிறார் மேல் (ஸ்வதோஷாநுஸந்தானம்) என்று தொடங்கி.

– அடுத்து, “ஸ்வதோஷாநுஸந்தாநம் பயஹேது, பகவத் குணாநுஸந்தாநம் அபயஹேது” என்றுள்ள சூர்ணை-366 தொடங்கி, “நிவர்த்யஜ்ஞாநம் பயஹேது, நிவர்த்தகஜ்ஞாந மபயஹேது” என்பதான சூர்ணை-406 முடிய உள்ள சூர்ணைகளில், இந்த அதிகாரிக்கு எல்லையற்ற காலமாக ஏற்பட்ட கர்மங்கள் அனைத்தும் அழிவதற்குக் காரணமாக உள்ளதும், அத்வேஷம் தொடக்கமாக (அத்வேஷம், ஆபிமுக்யம், ஸாத்வித ஸம்பாஷணம், ஸதாசார்ய ஸமாச்ரயணம், தத்வஜ்ஞானம், பகவத் சரணவரணம்) ப்ராப்தி முடிய உள்ள பல பேறுகளுக்கெல்லாம் முக்கியமான காரணமாக உள்ளதும் ஆகிய “ஸர்வேச்வரன் செய்கின்ற காரணம் இல்லாமல் செய்யும் கருணை” என்பது கூறப்படுகிறது. ஸம்ஸாரிகளுடைய குற்றங்களையும் தனது குற்றமாகவே எண்ணுவது முதலாகத் தொடர்ச்சியாகப் பல விஷயங்களைக் குறித்து அருளிச்செய்தார். அதனை அடுத்து சூர்ணை-358ல் (ஸ்வதோஷத்துக்கும் என்று உள்ளது) தனது குற்றங்களை எண்ணியபடி இருத்தல், பகவத் பாகவதர்களின் குணங்களை எப்போதும் எண்ணியபடி இருத்தல் என்பதை இவன் அன்றாடம் செய்தபடி இருத்தல்வேண்டும் என்பதை உரைத்தார். இந்த இரண்டில், இப்போது உரைக்கப்பட உள்ள கருத்திற்கு, பாகவதர்களின் குணங்களைக் குறித்து எண்ணியபடி இருத்தல் என்பது அவசியமில்லாதது என்பதால், அதனை நீக்கி, அதற்குப் பயன்படுவதாக உள்ள தனது குற்றங்களை எண்ணுதல், ஸர்வேச்வரனின் குணங்களை எண்ணுதல் என்பதை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவற்றின் பயன் என்ன என்பதை அருளிச்செய்கிறார்.

(ஸ்வதோஷமாவது) – அநாத்ம குணாதிகளும்; அதுக்கு மூலமாய் அநாதிகாலமே படித்துக் காழ்பேறிக் கிடக்கிற அவித்யாதிகளும்; ஏததநுஸந்தாநம், இது விதுவாக இன்னம் ஸம்ஸரணம் வரில் செய்வதென்! என்னும் பயத்துக்கு ஹேது. (பகவத்குணமாவது), இத்தோஷத்தைப் பார்த்திகழாம லங்கீகரித்து இவற்றைப் பொறுத்து இவ்வாத்மாவைத் திருவடிகளிலே சேர்த்துக் கொள்ளுகைக்குடலான அவனுடைய தயாக்ஷாந்த்யாதிகள்; ஏததநுஸந்தாநம், அநாதிகாலம் ஸம்ஸார ஹேதுவாய்ப் போந்த ஸ்வதோஷ பலத்தைப் பார்த்து இன்னமு மப்படியாகில் செய்வதென் என்கிற பயத்தினுடைய நிவ்ருத்திக்கு ஹேதுவென்கை. “துரந்தஸ்யாநாதே ரபரி ஹரணீ யஸ்ய மஹதோ நிஹீநாசாரோஹம் ந்ருபசு ரசுபஸ் யாஸ்பதமபி, தயா ஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்ஸல்ய ஜலதே தவஸ்மாரம் ஸ்மாரம் குணகணமிதீச்சாமி கதாபீ:” என்னக்கடவதிறே.

(ஸ்வதோஷமாவது) - ஆத்மகுணங்களுக்கு மாறுபட்டதாக உள்ள குணங்களும், அவற்றுக்கு மூலகாரணமாக எல்லையற்ற காலமாக உள்ள அறியாமை முதலானவைகளும் ஆகியவற்றை எண்ணுவது என்பது, இதன் காரணமாக அடுத்த பிறவி ஏற்பட்டால் என்ன செய்வது என்பதான அச்சத்திற்குக் காரணம் ஆகிறது. (பகவத்குணமாவது) - இப்படிப்பட்ட குற்றங்களைக் கண்ட பின்னரும் இகழாமல் ஏற்றுக்கொண்டு, அவற்றைப் பொறுத்துக்கொண்டு, தனது திருவடிகளில் சேர்த்துக் கொள்ளுதல் என்பது அவனுடைய தயை, க்ஷமை போன்றவற்றால் ஆகும்; இவற்றை எப்போதும் எண்ணுதல் என்பது எல்லையற்ற காலமாகப் பிறந்தபடி உள்ளதற்குக் காரணமாக உள்ள தனது குற்றத்தின் வலிமையை ஆராய்ந்து, “இனி வரும் காலங்களிலும் இப்படியே இருந்தால் என்ன ஆகும்?”, என்றுள்ள அச்சம் நீங்குவதற்குக் காரணம் ஆகும். ஸ்தோத்ரரத்னத்தில் (48) – துரந்தஸ்யாநாதே ரபரி ஹரணீ யஸ்ய மஹதோ நிஹீநாசாரோஹம் ந்ருபசு ரசுபஸ் யாஸ்பதமபி, தயா ஸிந்தோ பந்தோ நிரவதிக வாத்ஸல்ய ஜலதே தவஸ்மாரம் ஸ்மாரம் குணகணமிதீச்சாமி கதாபீ: – கருணைக்கடலாக உள்ளவனே! எனது பந்துவே! எல்லையற்ற வாத்ஸல்யம் என்ற குணத்திற்குக் கடல் போன்றுள்ளவனே! நான் முடிவில்லாததும், தொடக்கம் இல்லாததும், கடக்க இயலாததும் ஆகிய மிகப்பெரும் பல பாவங்களுக்கு இருப்பிடமாக உள்ளேன்; ஆனாலும் உனது குணங்கள் குறித்து எப்போதும் சிந்தித்தபடி உள்ளதால், எனது அச்சம் நீங்கப்பெற்று, மோக்ஷத்தை விரும்புகிறேன் - என்றது காண்க.