Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 365)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

குற்றம் செய்தவர்கள் பக்கல், பொறையும் க்ருபையும் சிரிப்பும் உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்கவேண்டும்.

இப்படி உத்தேச்ய விஷயங்களி லறிவியாதிருக்கும் மாத்ரமும் போராது, குற்றஞ் செய்தவர்கள் விஷயமாக க்ஷமாதயாதிகளும் நடக்கவேணுமென்கிறார் மேல் (குற்றஞ் செய்தவர்கள் பக்கல்) என்று தொடங்கி.

– இப்படியாகத் தனக்கு வேண்டியவர்களாகிய ஸர்வேச்வரனுடைய அடியார்களின் குற்றங்களை மற்றவர்களுக்கு உரைக்காமல் இருந்தால் மட்டும் போதாது; குற்றம் செய்தவர்கள் விஷயத்தில் பொறுமை, கருணை போன்றவற்றையும் காண்பிக்க வேண்டும் என்று அருளிச்செய்கிறார்.

(பொறையாவது) அவர்கள் செய்த குற்றத்துக்குத் தாமொரு ப்ரதிக்ரியை பண்ணுதல், நெஞ்சிலே கன்றியிருத்தல் செய்யாமையாகிற அபராத ஸஹத்வம். (க்ருபையாவது), நாம் பொதுத்திருந்தோமாகிலு மெம்பெருமா னுசித தண்டம் பண்ணவன்றோ புகுகிறான், ஐயோ! இனியிதுக்கென் செய்வோம்! என்கிற பரதுக்க காஸஹிஷ்ணுத்வம். (சிரிப்பாவது), அத்ருஷ்ட விரோதமாக விவர்களால் செய்யலாவ தொன்றில்லையிறே, பாருஷ்யாதி முகத்தாலே க்யாதிலாபாதி த்ருஷ்ட விரோதங்களிறே இவர்களால் செய்யலாவது, அப்படி சிலவற்றைச் செய்தால் தங்களோபாதி நாமுமிவற்றிலே சபலராய் இவற்றினுடைய ஹாநியைப் பற்ற நெஞ்சாறல் பட்டுத் தளர்வுதோமென் றிருந்தார்களாகாதே, இவர்கள் அறிவிலித்தன மிருந்தபடியென்! என்று பண்ணும் ஹாஸம். (உகப்பாவது), அவர்கள் பண்ணும் பரிபவாதிகளுக்கு விஷயமான சரீரத்தைத் தனக்கு சத்ருவாகவும், அவர்கள் ஹாநி பண்ணும் த்ருஷ்ட பாதார்த்தங்கள் தனக்கு ப்ரதிகூலங்களாகவும் நினைத்திருக்கையாலே, தன்னுடைய சத்ரு விஷயமாக வொருவன் பரிபவாதிகளைப் பண்ணுதல் தனக்கு ப்ரதிகூலங்களானவற்றைப் போக்குதல் செய்தா லுகக்குமாப்போலே, அவர்களளவில் பிறக்கும் ப்ரீதி. (உபகார ஸ்ம்ருதியாவது), நம்முடைய தோஷங்களை நாம் மறந்திருக்கும் தசைகளிலே உணர்த்தியும் நமக்கிவ் விருப்பில் நசையறும்படியான செறுப்புக்களைச் செய்தும், இவர்கள் நமக்குப் பண்ணுகிற உபகாரமென்றான்! என்றிருக்கும் க்ருதஜ்ஞதை. (நடக்கவேணும்) என்றது, இவை இத்தனையும் குற்றஞ் செய்தவர் விஷயத்திலே இவனுக்கவச்யமுண்டாய்ப் போர வேணுமென்று தோற்றுகைக்காக. ஆக இப்ப்ரகரணத்தால், ஹிதோபதேச ஸமயத்தில் விப்ரதிபத்தி விசேஷங்களும், தத்ரஹிதமாக உபதேசிக்க வேணுமென்னுமிடமும் உபதேச ஸாக்ஷாத் பலமும், உபதேஷ்டாவி னாசார்யத்வம் ஸித்திக்கும் வழிகளும், விப்ரதிபத்தியுட னுபதேசிக்கில் உபயர்க்கும் ஸ்வரூப ஸித்தியில்லாமையும், உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு அவச்யாபேக்ஷித குணத்வயமும், ஸாக்ஷாதாசார்யத்வமின்ன மந்த்ரத்தை உபதேசித்தவனுக் கென்றும் சொல்லுகையாலே, ஸதாசார்ய லக்ஷணத்தையும்; ததநந்தரம் ஸச்சிஷ்ய லக்ஷணத்தையும், ததபயருடைய பரிமாற்றங்களையும் சிஷ்யனுக் காசார்ய விஷயத்தில் “தீமனங் கெடுத்தாய்” இத்யாதிப்படியே யாவச்சரீரபாத முபகார ஸ்ம்ருதி நடக்கவேணுமென்னு மத்தையும், மநஸ்ஸுக்குத் தீமை யின்னதென்னுமிடத்தையும், அதிலுபபாதநீயாம்சத்தி னுபபாதநத்தையும், தத்ப்ரஸங்கத்திலே மற்றுமிவனுக் கபேஷிதமான ஆசார்ய விஷயத்திலுண்டாக வேண்டும் ப்ரதிபத்த் யநுவர்த்தந ப்ரகாரங்களும் சொல்லப்பட்டது.

(பொறை) அவர்கள் செய்த குற்றத்திற்குப் பதிலாக நாம் மீண்டும் ஒரு குற்றம் செய்தல், அவர்கள் செய்த குற்றத்தை எப்போதும் மனதில் எண்ணியபடி இருத்தல் போன்றவற்றைச் செய்யாமல் இருப்பது என்பதான குற்றங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை. (க்ருபை) – “நாம் இவர்களைப் பொறுத்துக்கொண்டோம் என்றாலும், இவர்களுக்கு ஏற்ற தண்டனையை எம்பெருமான் வழங்கிவிடுவானே! இதற்கு நாம் என்ன செய்வது?”, என்று மற்றவர்களுக்கு ஏற்படவுள்ள துக்கத்தைப் பொறுக்க இயலாமல் உள்ள தன்மை. (சிரிப்பு) – நமக்குக் கிட்டவுள்ள மேல் உலகப் பலன்களைத் தடுக்கும்விதமாக இவர்களால் ஏதும் செய்ய இயலாது; கடுமையான சொற்கள் உரைத்தல் போன்றவை மூலம் இந்த உலகில் நமக்குக் கிட்டவுள்ள இன்பங்களுக்கு விரோதமாக உள்ளவற்றை மட்டுமே இவர்களால் செய்ய இயலும்; இவ்விதம் இங்கு கிட்டவுள்ள இன்பங்களைத் தடுத்தால், இவர்கள் போன்று அந்த இன்பங்கள் கிட்டாத காரணத்தால் நாமும் வருந்துவோம் என்று எண்ணுகிறார்களே! இவர்கள் எத்தனை அறிவற்றவர்கள்? இவர்களுடைய அறிவற்ற நிலை என்னே! என்று எண்ணுவதால் உண்டாகும் சிரிப்பு. (உகப்பு) – அவர்கள் நமக்குச் செய்யும் அவமானம் போன்றவற்றுக்கு இலக்காக உள்ள சரீரத்தை நமக்குச் சத்ருவாகவும், அவர்கள் தடை ஏற்படுத்துகின்ற இந்த உலக இன்பங்கள் தனக்கு வேண்டாதவையாகவும் எண்ணுவதால் – தனது பகைவனுக்கு வேறு ஒருவன் அவமானம் உண்டாக்குவதாலும், தனக்கு விரோதமாக உள்ளவற்றை ஒருவன் விலக்கினாலும் மகிழ்ச்சி ஏற்படுவது போன்று - அவர்களிடம் நமக்கு உண்டாகும் பிரியம். (உபகார ஸ்ம்ருதி) - நமது குற்றங்களை நாம் மறந்துள்ள காலங்களில் நமக்கு அவற்றை நினைவுபடுத்தி, நாம் அவ்விதம் இருக்கும் தன்மையில் உள்ள ஆசை இல்லாதபடியாக்கப் பல வெறுக்கவல்ல செயல்கள் செய்து வருவதால், “நமக்கு இவர்கள் செய்யும் உபகாரம் என்னே!”, என்று எண்ணி செய்ந்நன்றியுடன் இருத்தல். (நடக்கவேணும்) – இவை அனைத்தும் தனக்குக் குற்றம் இழைத்தவர்கள் விஷயத்தில் இவனுக்கு அவசியம் ஏற்பட வேண்டும் என்று உணர்த்தவே “நடக்கவேணும்” என்கிறார். ஆக இந்த ப்ரகணத்தில் கூறப்படுவது என்னவென்றால் – ஒருவனுக்கு வேண்டிய நன்மையை உபதேசம் செய்யும்போது தகாத எண்ணங்கள் எவை என்பதும், அப்படிப்பட்ட தகாத எண்ணங்கள் இல்லாமல் உபதேசிக்க வேண்டும் என்பதும், உபதேசத்தின் மூலம் ஏற்படும் நேரடியான பலனும், உபதேசம் செய்பவனுக்கு ஆசார்யனாகும் தன்மைகள் ஏற்படும் விதங்களும், தகாத எண்ணங்களுடன் உபதேசம் செய்தால் ஆசார்யன் மற்றும் சிஷ்யன் ஆகிய இருவருக்குமே ஸ்வரூப ஸித்தி ஏற்படாது என்பதும், உபதேசம் செய்யும் ஆசார்யனுக்கு இருக்கவேண்டிய அவசியமான இரண்டு குணங்களும், ஆசார்யனாகும் தன்மை என்பது திருமந்திரத்தை உபதேசம் செய்யும் ஒருவனுக்குக் மட்டுமே உள்ளது என்றும் பலவிதமான விஷயங்கள் கூறுவதால், ஆசார்ய லக்ஷணம் விரிவாக அருளிச்செய்யபப்ட்டது. அதனைத் தொடர்ந்து - நல்ல சிஷ்யனின் லக்ஷணத்தையும், ஆசார்யனும் சிஷ்யனும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் எவ்விதம் நடக்கவேண்டும் என்பதையும், சிஷ்யன் ஆசார்யனிடம் திருவாய்மொழி (2-7-8) – தீமனம் கெடுத்தாய் - என்று கூறுவதற்கு ஏற்ப தனது சரீரம் உள்ளவரை நன்றியுடன் இருக்கவேண்டும் என்பதையும், மனதிற்கு உண்டாகவல்ல தீமை இத்தகையது என்பதையும், அந்தத் தீமைகளைக் குறித்து விவரிக்க வேண்டியவற்றை விவரித்தும், அவ்விதம் விளக்கும்போது நல்ல சிஷ்யனுக்கு அவசியமான அர்த்தங்களையும் - கூறுவதால், இதுவரை கூறப்பட்டதான த்வயமந்த்ரத்தில் நிலை நிற்கும் அதிகாரிக்கு அதனை உபதேசிக்கும் ஆசார்யனுடைய விஷயத்தில் ஏற்படவேண்டிய எண்ணங்களும் பின்பற்றவேண்டிய முறைகளும் கூறப்பட்டன.