Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 364)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
அறிவிக்க வுரியனகப்பட வாய்திறவாதே ஸர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கு மென்னா நின்றதிறே.
இது கிம்புநர் ந்யாய ஸித்தமாம்படி ஈச்வரன்படியை அருளிச்செய்கிறார் (அறிவிக்க வுரியவன்) என்று தொடங்கி.
– கடந்த சூர்ணையில் கூறப்பட்ட விஷயத்திற்கு மேன்மேலும் விளக்கம் கூறவும் வேண்டுமோ என்ற நியாயத்தின்படி ஸர்வேச்வரனின் தன்மையை அருளிச்செய்கிறார்.
– அதாவது “எதிர்சூழல்புக்கு” என்கிறபடியே தம்முடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி ஸம்ஸாரி சேதநரைத் தப்பாம லகப்படுத்திக் கொள்ளுவதாக வந்தவதரித்து தமக்கடியார் வேணுமென்றபேக்ஷித்தால் அவர்கள் அப்படி அநுகூலராய்த் தோன்றாதொழிந்தாலும், “அவர்கள் செய்தபடி செய்கிறார்கள், நாமிவர்களுக் குறுப்பாகப் பெற்றோமிறே” என்று அதுதானே போக்யமாக விருப்பர், அதுக்குமேல் அவர்கள் வைமுக்க்யம் பண்ணினார்கள் என்று அவர்கள் குற்றத்தைத் தனியிருப்பிலே பிராட்டிக்கும் அருளிச்செய்யாரென்கிற “சூழ்ந்தடியார்” என்கிற பாட்டிலே, சேதநர் செய்த குற்றங்களைத் தன் திருவுள்ளத்துக் குகந்தவர்களுட னறிவிக்கைக்கு ப்ராப்தனான ஸர்வேச்வரனுட்படத் தன் திருப்பவளம் திறந்தருளிச் செய்யாதே, தானருளிச் செய்யா தொழிந்தாலும் அறியவல்ல ஸர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்குமென்று சொல்லா நின்றதிறே யென்கை. இத்தால், அவனுட்பட விப்படி மறையா நின்றாலிவனுக்குப் பின்னைச் சொல்லவேணுமோ வென்றபடி.
திருவாய்மொழி (2-7-6) – எதிர்சூழல்புக்கு – என்பதற்கு ஏற்ப, தன்னுடைய நீர்மை மற்றும் எளிமை முதலான குணங்களை உணர்த்தி, அதன் மூலம் இந்த உலகில் உள்ள மனிதர்கள் தன்னிடமிருந்து தப்பிச் சென்று விடாமல் இருக்கும் விதமாக வந்து அவதரிக்கிறான்; மேலும் தனக்கு அடியார்கள் மேன்மேலும் கிட்டவேண்டும் என்று விரும்பியவனாக, அவர்கள் தனக்கு அனுகூலர்களாக இல்லாவிட்டாலும், “இவர்கள் எவ்விதமாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப்போகட்டும். நாம்தான் இவர்களைக் கைக்கொள்கிறோமே” என்று எப்போதும் ஸர்வேச்வரனும் பெரியபிராட்டியும் இனிமையாகவே இருப்பார்கள். அதற்கும் மேலே அவர்கள் ஏதேனும் குற்றம் இழைத்திருந்தாலும், அந்தக் குற்றத்தைத் தான் பிராட்டியுடன் தனியாக உள்ளபோது அவளுக்கு அவன் தெரிவிப்பதில்லை என்பதைப் பெரியதிருவந்தாதி (17) – சூழ்ந்தடியார் - என்பதில் காணலாம்; அதாவது சேதநர்கள் செய்யும் குற்றங்களைத் தனக்குப் பிரியமான பிராட்டிக்குத் தெரிவிக்கும் உரிமை உள்ளவனாக ஸர்வேச்வரன் உள்ளபோதிலும், தன்னுடைய திருவாய் திறந்து அவ்விதம் உரைப்பதில்லை; அப்படியே அவன் உரைக்காமல் இருந்தாலும், தானாகவே அறியும் திறன் கொண்டவர்களாக உள்ளவர்களுக்கும் அந்தக் குற்றங்கள் புலப்படாமல் மறைத்துவிடுகிறான் என்பதையே அந்தப் பாசுரம் உணர்த்துகிறது. இப்படியாக ஸர்வேச்வரனே குற்றங்களை மறைத்து விடுகிறான் என்னும்போது, அவனுடைய அடியார்கள் மற்ற அடியார்களின் குற்றங்களை மறைப்பார்கள் என்று கூறவும் வேண்டுமோ?