Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 363)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

பிராட்டி, ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதாப்போலே, தனக்குப் பிறர் செய்த குற்றங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவனல்லன்.

– ஆக இவ்வதிகாரி, ஸம்ஸாரிகள் தோஷங்கண்டா லநுஸந்திக்கும் ப்ரகாரமும், தத்தோஷந்தா னிவனுக்குத் தோன்றா தென்னுமிடமும் தோன்றுவ தின்னதுக்காகவென்று மருளிச்செய்தார் கீழ்; இப்படி காதாசித்கமாகத் தோன்றும் ஸம்ஸாரிகள் தோஷங்களை ஸ்வதோஷமாக நினைத்தும் தந்நிவர்த்தகனாயும் போருமளவன்றிக்கே, ஸ்வவிஷயத்திலே குற்றங்களைச் செய்தால் இவனிருக்க வடுக்கும்படி யருளிச்செய்கிறார் மேல் (பிராட்டி) என்று தொடங்கி.

ஆக இந்த அதிகாரி, ஸம்ஸாரிகளின் குற்றங்களைக் கண்டால் எண்ணியிருக்கும் விதமும், அவர்களுடைய குற்றம் அவனுக்குத் தோன்றாது என்பதும், அவ்விதம் தோன்றினாலும் அதன் காரணம் இன்னதற்காக என்பதும் கூறப்பட்டது. இப்படியாக எப்போதாவது ஒரு சமயத்தில் ஸம்ஸாரிகளின் குற்றங்கள் புலப்படும்போது அந்தக் குற்றங்களைத் தனது விஷயத்தில் அவர்கள் செய்தால், இவன் நடக்கவேண்டியது எவ்விதம் என்பதை அருளிச்செய்கிறார்.

– அதாவது ஏகாக்ஷீ, ஏககர்ணி முதலான ஏழுநூறு ராக்ஷஸிகள் ஏகதிவஸம் போலே பத்து மாஸம் தர்ஜந பர்த்ஸநம் பண்ணவிருந்த பிராட்டி, இவர்களப்படி செய்த குற்றத்தை பகவத் விஷயமான பெருமாளுக்கும் பாகவத விஷயமான திருவடிக்கு மறிவியாதாப் போலே, தன் விஷயமாகப் பிறர் செய்த குற்றங்களை பகவத் விஷயத்திலாதல் பாகவத விஷயத்திலாதல் மறந்தும் விண்ணப்பஞ் செய்யக் கடவனல்ல னென்கை. (அறிவிக்கக் கடவனல்லன்) என்கிறது, அவர்கள் திருவுள்ளத்திலே புண்பட்டால் பண்டேயழிந்து கிடக்கிற இவர்களுக்கு மிகவும் விநாச ஹேதுவாமென்று நினைத்து.

– ஒரு காது உள்ளவள், ஒரு கண் உள்ளவள் என்று எழுநூறு ராக்ஷஸிகளால் அன்றாடம் பத்து மாதங்கள் கைளால் அதட்டப்பட்டும், வாயால் மிரட்டப்பட்டும் சீதை இருந்தாள். ஆனாலும் அவர்கள் செய்த அந்தக் குற்றங்களை, ஸர்வேச்வரனாகிய இராமனுக்கும், பாகவதனாகிய அனுமனுக்கும் தெரிவிக்கவில்லை. இதே போன்று தனக்கு மற்றவர்கள் ஏதாவது குற்றம் இழைத்திருந்தாலும், அதனை ஸர்வேச்வரனிடமும் பாகவதர்களிடமும் தெரிவிக்காமல் இருத்தல் வேண்டும். “அறிவிக்கக் கடவனல்லன்” என்பதன் மூலம் இப்படிப்பட்டவர்களைக் குறித்து ஸர்வேச்வரனிடம் உரைத்தால், அதன் மூலம் புண்படும் ஸர்வேச்வரனுடைய திருவுள்ளம் காரணமாக, முன்பே அழிந்துள்ள இவர்கள் மேலும் அழிவார்கள் என்று உணர்த்தினார்.