Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 362)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

தோன்றுவது நிவர்த்தநார்த்தமாக.

(தோன்றாது) என்னப்போமோ, “சொன்னால் விரோதம்”, “ஒரு நாயகம்”, “கொண்ட பெண்டிர்” இத்யாதியிலே ஆழ்வார்க்குமுட்பட்ட ஸம்ஸாரிகள் குற்றம் தோன்றிற்றில்லையோ வென்ன அருளிச்செய்கிறார் (தோன்றுவது) என்று தொடங்கி.

கடந்த சூர்ணையில் “தோன்றாது” என்று கூறப்பட்டது எப்படி? திருவாய்மொழி (3-9-1) - சொன்னால் விரோதம், திருவாய்மொழி (4-1-1) - ஒரு நாயகம், திருவாய்மொழி (9-1-1) – கொண்ட பெண்டிர் – போன்ற பாசுரங்களில் நம்மாழ்வாருக்கே ஸம்ஸாரிகளுடைய குற்றம் தோன்றியது அல்லவோ? இந்தக் கேள்விக்கு விடை அளிக்கிறார்.

– அதாவது, ஸம்ஸாரிகள் தோஷம் தோன்றுவது அந்த தோஷங்களினின்று மவர்களை நிவர்த்திப்பிக்கைக்காக வென்கை. “சொன்னால் விரோதம்” முதலானவற்றால் ஆழ்வாருமதில் திருவுள்ளம் வைத்தது, அஸேவ்ய ஸேவாதிகளினின்று மவர்களை நிவர்த்திப்பிக்கைக்காகவிறே; அதெல்லார்க்கு மொக்குமென்று கருத்து.

ஸம்ஸாரிகளுடைய குற்றம் புலப்படுவது என்பது அந்தக் குற்றங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவே ஆகும். திருவாய்மொழி (3-9-1) – சொன்னால் விரோதம் – போன்ற பாசுரங்களில் ஆழ்வார் திருவுள்ளம் பற்றியது எதனைக் குறித்து என்றால், அடையத்தகாதவர்களை அடையத்தக்கதிலிருந்து விடுவிக்கவே ஆகும் என்பதால் இது அனைவருக்கும் ஒரே போன்றதாகும்.