Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 361)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

“இறைப்பொழுது மெண்ணோம்” என்கையாலே அதுதான் தோன்றாது.

இதுதான் வேண்டுவது அவர்கள் தோஷந்தா னிவனுக்குத் தோன்றிலிறே, அதுதான் முதலிலே யிவனுக்குத் தோன்றாதென்கிறார் மேல் (இறைப்பொழுது மெண்ணோம்) என்று தொடங்கி.

இப்படியாக அவர்கள் குற்றத்தைத் தன்னுடைய குற்றமாக நினைத்தல் என்பது, அவர்களுடைய குற்றத்தை முதற்கண் இவன் உணர்ந்தால் அல்லவோ கூடும்? அது முதற்கண் இவனுக்கு ஏற்படாது என்கிறார்.

– அதாவது “கடல் மல்லைத் தலசயனுத் துறைவாரை எண்ணாதே யிருப்பாரை இறைப்பொழுது மெண்ணோம்” என்று, பரமபதத்திலே நித்யஸூரிகள் பரிந்து பரிசர்யை பண்ணவிருக்கும் பெருமையை யுடையனாய் வைத்து திருக்கடல் மல்லையிலே வந்து தங்களைப் பெறுகைக்குத் தரைக்கிடை கிடக்கிற நீர்மையை யுடையவனை, இதொரு நீர்மை யிருக்கும் படியென்! என்று அந்நீர்மையிலே தோற்று அநவரதாநு ஸந்தாநம் பண்ணவேண்டியிருக்க, அவனிடையாட்டங் கொண்டு காரியமற்று கேவல தேஹ போஷணாதி பரராயிருக்கிற ஸம்ஸாரிகளை க்ஷணகாலமும் நினையோ மென்கையாலே, ஸம்ஸாரிகள் தோஷந்தா னிவ்வதிகாரிக்குத் தோன்றாதென்கை. திருமங்கையாழ்வாரருளிச்செய்தவிது ஸ்ரீவைஷ்ணவர்களெல்லார்க்கு மொக்குமிறே.

பெரிய திருமொழி (2-6-1) - கடல் மல்லைத் தலசயனுத் துறைவாரை எண்ணாதே யிருப்பாரை இறைப்பொழுது மெண்ணோம் – பரமபதத்தில் நித்யஸூரிகளால் மிகவும் பரிவுடன் கைங்கர்யம் செய்யப்படும் உயர்ந்தவனாக உள்ளபோதிலும், திருக்கடல்மல்லையில் (இன்று சென்னையை அடுத்துள்ள மஹாபலிபுரம் என்று அழைக்கப்படுவதாகும்) வந்து, தரையிலே சயனித்துள்ளான் (இங்குள்ள ஸர்வேச்வரன் ஆதிசேஷனில் சயனிக்காமல், வெறும் தரையில் கிடப்பதை இன்றும் காணலாம்) நம்மை அடைய வந்த இப்படிப்பட்ட நீர்மையைக் கண்டு, “இப்படி ஒரு நீர்மையா?” என்று வியந்து, அந்த நீர்மைக்குத் தோற்று, எப்போதும் அவனைச் சிந்தித்தபடி இருக்கவேண்டும். ஆனால் இவ்விதம் செய்யாமல், அவனைப் பற்றியே எண்ணாமல், அற்பமான நமது சரீரத்தைப் பாதுகாப்பதையே சிந்தித்துள்ள ஸம்ஸாரிகள் குறித்து ஒரு நொடியும் எண்ணமாட்டோம் என்பதால், ஸம்ஸாரிகளுடைய குற்றம் இவனுக்குத் தோன்றாது. திருமங்கையாழ்வார் அருளிச்செய்த இந்தக் கருத்து ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவருக்கும் ஒரே போன்று பொருந்தும் அல்லவோ?