Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 360)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

அதுக்கு ஹேது பந்தஜ்ஞானம்.

அதுக்கு ஹேதுவென்னென்ன அருளிச்செய்கிறார் (அதுக்கு ஹேது பந்த ஜ்ஞாநம்) என்று.

– அதற்குக் காரணம் என்ன என்ற வேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, தனக்கு சேஷிகளான பகவத் பாகவதர்கள் தோஷம், ஸ்வதோஷமாக வநுஸந்திக்கைக்கு ஹேது அவர்களோடு தனக்குண்டான ஸம்பந்த ஜ்ஞாநமானாப்போலே, ஸம்ஸாரிகள் தோஷத்தைத் தன்னுடைய தோஷமாக அநுஸந்திக்கைக்கு ஹேது, நாராயணத்வ ப்ரயுக்தமான ஸம்பந்த ஜ்ஞாநமென்கை. எல்லார்க்கும் ஈச்வரனோடு ஸம்பந்த மொத்திருக்கையாலே, அவ்வழியாலே தனக்கு மவர்களுக்கும் ஸம்பந்தமுண்டாகையாலே, தனக்கு அவர்ஜநீயரான ப்ரக்ருதி பந்துக்களுக்கு வந்த தோஷம் தனக்கு வந்ததாக நினைத்திருக்குமோபாதி, ஸம்ஸாரிகளுக் குண்டான தோஷம் தன்னுடைய தோஷமென்றே நினைக்கக் குறையில்லையிறே.

தனக்கு எஜமானர்களாக விளங்கும் ஸர்வேச்வரன் மற்றும் பாகவதர்களிடம் குற்றம் காண்பது என்பது தன்னுடைய குற்றம் காரணமாகவே ஏற்படுகிறது என்ற எண்ணம், அவர்களுடன் தனக்கு உள்ள ஸம்பந்த ஞானம் மூலம் மட்டுமே ஏற்படுகிறது. இதே போன்று ஸம்ஸாரிகளின் குற்றங்களையும் தனது குற்றம் என்றே காண்பதற்கான காரணம், நாராயணனாகிய ஸர்வேச்வரனுடன் உள்ள ஸம்பந்த ஞானமே ஆகும். அனைவருக்கும் ஸர்வேச்வரனுடனான ஸம்பந்தம் ஒரே போன்று உள்ளதால், அதன் மூலம் நமக்கும், மற்றவர்களுக்கும் ஸம்பந்தம் ஏற்படுவதால், தன்னால் விட இயலாத உறவினர்களின் குற்றம் நம்முடைய குற்றம் என்று எண்ணுவது போன்று, ஸம்ஸாரிகளின் தோஷம் தன்னுடையது என்று எண்ணுவதில் எந்தக் குறையும் இல்லை.