Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 359)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
ஸம்ஸாரிகள் தோஷம் ஸ்வதோஷமென்று நினைக்கக் கடவன்.
ஆக (மநஸ்ஸுக்குத் தீமையாவது) என்று தொடங்கி இவ்வளவும் - பகவத் பாகவத தோஷ ஸ்மரணமாகா தென்னுமிடமும், அவர்களுடைய நைர்தோஷ்யமும்; தோஷமுண்டென்று நினைக்கில் அது தத்தோஷமன்று ஸ்வதோஷமென்றும், அது ஸ்வதோஷமாகைக்கு நிதாநங்களும், ஸ்வதோஷா பாவசங்கைக்குத்தரமும், தோஷ ப்ரதிபத்தி நடக்கிலதுதானே இவனுக்கு மஹாதோஷமாமென்றும், ஸ்வதோஷ பகவத் பாகவத குணாநுஸந்தாநத்துக்கே காலம் போருகையால் இது தனக்கு இவனுக் கவஸரமில்லை யென்றும் அருளிச்செய்தார் கீழ்; இப்படி தனக்கு உத்தேச்யமான பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் நினையாமலும், நினைத்தானாகிலுமது தன்னுடைய தோஷமாக நினைத்திருக்க வேணுமென்றருளிச்செய்த ப்ரஸங்கத்திலே, ஸம்ஸாரிகள் தோஷ விஷயாநுஸந்தாநமு மின்ன படியாக வேணுமென்கிறார்மேல் (ஸம்ஸாரிகள்) என்று தொடங்கி.
ஆகவே, “மநஸ்ஸுக்குத் தீமையாவது” என்றுள்ள சூர்ணை 350 தொடங்கி இதுவரை, ஸர்வேச்வரன் மற்றும் அவனுடைய அடியார்கள் விஷயத்தில் குற்றங்களை எண்ணுதல் கூடாது என்பதும்; அவர்களிடம் எந்தவிதமான தோஷமும் இல்லை என்பதும்; அவர்களிடம் தோஷம் உண்டு என்று எண்ணினால், அது உண்மையில் அவர்களிடம் உள்ள தோஷம் அல்ல, அவ்விதம் எண்ணுபவர்களிடம் உள்ள தோஷமே என்பதும்; இவ்விதம் அது எண்ணுபவர்களிடம் உள்ள தோஷமாவதற்குக் காரணங்கள் என்ன என்பதும்; “அது எவ்விதம் எனது குற்றமாகும்” என்ற சந்தேகத்திற்கான விடையும்; அவர்களிடம் தோஷம் உண்டு என்று எண்ணுவதே மிகப் பெரிய தோஷம் என்பதும்; நம்முடைய குற்றத்தையும், பகவத் பாகவதர்களின் குணங்களையும் எண்ணுவதற்கே நேரம் சரியாக இருப்பதால் மற்றவர்களின் குற்றங்களை எண்ண இவனுக்கு நேரம் இல்லை என்றும் அருளிச்செய்தார். இப்படியாகத் தனக்கு வேண்டப்பட்டவர்களாக உள்ள ஸர்வேச்வரன் மற்றும் பாகவதர்கள் விஷயத்தில் குற்றம் எண்ணாமலும், அப்படியே எண்ணினாலும் அந்தச் சிந்தனையானது தனது குற்றம் காரணமாகவே ஏற்படுகிறது என்று அருளிச்செய்த இந்த இடத்தில் - ஸம்ஸாரிகளுடைய குற்றம் குறித்த சிந்தனையும் இன்னவிதமாக இருக்கவேண்டும் என்பதை இங்கு அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸம்ஸாரிகளுக்குண்டான பகவத் வைமுக்க்யம், அநாத்மந்யாத்ம புத்தி, அஸ்வேஸ்வபுத்தி முதலான தோஷங்கண்டால் அந்த தோஷங்களையிட்டு அவர்களை யிகழ்ந்து இவர்களுக்கும் நமக்கும் பணியென் னென்றிராதே, அவர்களுடைய தோஷமும் தன்னுடைய தோஷமென் றநுஸந்தித்திருக் கடவனென்கை.
ஸம்ஸாரிகளுக்கு ஏற்படும் ஸர்வேச்வரனிடம் பக்தி இல்லாமை, ஆத்மா அல்லாத சரீரத்தை ஆத்மாவாக எண்ணுதல், தன்னுடையது அல்லாதவற்றைத் தன்னுடையது என்று எண்ணுதல் முதலான குற்றங்களைக் கண்டால், அந்தக் குற்றங்களை நோக்கி, அவர்களை இகழாமல் இருக்கவேண்டும். மேலும், “இவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை” என்று எண்ணி ஒதுங்காமல், அவர்களுக்குக் குற்றம் உள்ளதாகக் கண்டதும் தனது குற்றமே என்று எண்ணவேண்டும்.