Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 352)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

தோஷமுண்டென்று நினைக்கில் அது பரதோஷமன்று, ஸ்வதோஷம்.

தோஷமில்லை என்று ஸ்வபக்ஷத்தாலே ஸாதித்தார் கீழ்; இனி, பரபக்ஷத்தாலே தோஷ ஸத்பாவத்தை அங்கீகரித்துக் கொண்டு தத்பரிஹாரத்தை அருளிச்செய்கிறார் மேல் (தோஷமுண்டு) என்று தொடங்கி.

பகவானிடமும் பாகவதர்களிடம் எந்தவிதமான தோஷமும் இல்லை என்று தன்னுடைய கருத்தின்படி இதுவரை உரைத்தார். இனி மற்றவர்களின் பார்வையில் அவர்கள் மீது தோஷம் ஏற்படலாம் என்பதை ஒப்புக்கொண்டவராக, அதற்கான பரிகாரத்தை இனி உரைக்கிறார்.

– அதாவது, கீழ்ச் சொன்னபடியன்றிக்கே பகவத் பாகவத விஷயங்களில் தோஷமுண்டென்று நினைக்கில், அவர்கள் பக்கல் தனக்குத் தோற்றுகிற தோஷம் அவர்கள் தோஷமன்று; தத் த்ரஷ்டாவான தன்னுடைய தோஷமென்கை.

கடந்த சூர்ணையில் விவரிக்கப்பட்டபடி பகவான் மற்றும் பாகவதர்கள் மீது எந்தவிதமான தோஷமும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளாமல், அவர்களிடம் தோஷம் உண்டு என்று எண்ணினால் – அவர்கள் விஷயத்தில் தோன்றுகிற தோஷம் என்பது உண்மையில் அவர்களிடம் இல்லை; யார் அவ்விதம் தோஷம் உள்ளதாக எண்ணுகிறார்களோ அவர்களுக்கே உள்ளது என்று கருத்து.