Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 351)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

தோஷம் நினையாதொழிகிறது குணம்போலே யுண்டாயிருக்கவன்று, இல்லாமையாலே.

– ஆனால், தனக்குச் சில குணமுண்டாயிருக்க அது நினைக்கலாகா தென்கிறாப்போலே, அத்தலைக்கும் சில தோஷமுண்டாயிருக்க நினைக்கலாகா தென்கிறதோ வென்ன அருளிச்செய்கிறார்.

இவ்விதம் கொள்ளும்போது, தன்னிடம் உள்ள சில குணங்களை நினைத்தல் கூடாது என்பது போன்று, பகவான் மற்றும் பக்தர்களிடம் உள்ள சில தோஷங்களை எண்ணக்கூடாது என்று கூறப்பட்டதோ என்று சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் நினையாதொழிகிறது, தனக்கு குணமுண்டாயிருக்க அது நினையாதொழிகிறாப்போலே, உண்டாயிருக்க நினையாதொழிகிறதன்று; முதலிலே இவ்விஷயங்களில் அதில்லாமையாலே யென்கை. எங்ஙனேயென்னில்? ஸர்வமுக்தி ப்ரஸங்கம் வராதபடி தானிட்ட கட்டளையிலே அங்கீகரிக்கைக்காக, “ஒன்றி யொன்றி யுலகம் படைத்தான்” என்றும், “எதிர் சூழல்புக்கு” என்றும் சொல்லுகிறபடியே, ஸகலாத்மாக்களுடையவு முஜ்ஜீவநத்துக்கு ஸ்ருஷ்ட் யவதாராதிகளாலே க்ருஷி பண்ணிக்கொண்டு போருகையாலே, அநாதிகால முபேக்ஷகனாய்க் கைவிட்டிருந்தா னென்னவொண்ணாது; நிர்தயரைப்போலே கர்மாநுகுணமாக தண்டிக்கிறதும், மண் தின்ற ப்ரஜையை நாக்கிலே குறியிட்டு அஞ்சப் பண்ணும் மாதாவைபோலே ஹிதபரனாய்ச் செய்கையாலே உஜ்ஜீவநத்துக் குடலாமித்தனை; நிரங்குச ஸ்வாதந்த்ர்யம் பூர்வம் பந்தஹேதுவாய்ப் போந்ததேயாகிலும், க்ருபா பரதந்த்ரனாய் அங்கீகரித்த பின்பு, நித்யஸம்ஸாரியை நித்யஸூரிகளோடு ஸமாந போகபாகியாக்குமளவில் நிவாரகரறச் செய்கைக்குறுப்பா மித்தன்னை ஆகையாலே, ச்லாக்யமாமித்தனை; க்ருஷ்ணாவதாரத்தில் ஸ்வைர விஹார “யதி மே ப்ரஹ்மசர்யம் ஸ்யாத்” என்கிறபடியே தனக்கிந்த போகத்தி லொட்டில்லாமையை வெளியிடு கைக்காகவும், “கோப்ய: காமாத்” என்கிறபடியே அவ்வழியாலே யவர்களைத் தன்பக்கல் ப்ரவணராக்கி உத்தரிப்பிக்கைக்காகவும் செய்ததாகையாலே, குணமித்தனையல்லது குற்றமன்று. இனி பாகவதர்களும், “குற்றமின்றிக் குணம் பெருக்கி” என்கிறபடியே, நிர்தோஷராய் நிரவதிககுணரா யிருக்கையாலே, உள்ளுற வாராய்ந்து பார்த்தால், அவர்கள் பக்கலிலுங் காணலாவதொரு தோஷமில்லையிறே. மற்றுமிப்புடைகளிலே பகவத் பாகவத விஷயங்களில் தோஷங்கள் தோற்றிற்றாகில் பரிஹாரங்கள் கண்டுகொள்வது. இத்தையெல்லாம் திருவுள்ளம் பற்றியாய்த்து (இல்லாமையாலே) என்றிவ ரருளிச்செய்தது.

ஸர்வேச்வரன் விஷயத்திலும், பாகவதர்கள் விஷயத்திலும் உள்ள தோஷங்களை எண்ணிப் பார்த்தல் தவிர்க்கவேண்டும் என்பது, தனக்கு ஆத்மகுணங்கள் உள்ளபோதிலும் அவற்றை எண்ணிப் பார்த்தல் கூடாது என்பது போன்று, அவர்களிடம் தோஷம் உள்ளதைச் சிந்திக்கக்கூடாது என்பது அல்ல; அவை தோஷங்களே அல்ல என்பதால் சிந்திக்கக்கூடாது என்று கருத்து. எப்படி? எல்லாரும் மோக்ஷம் பெறும் தகுதி உடையவர்கள் என்ற தன்மை உண்டாகாதபடி, தான் இட்ட ஆணையால் உலகம் நடக்கவேண்டும் என்பதற்காக, திருவாய்மொழி (3-9-10) - ஒன்றி யொன்றி யுலகம் படைத்தான் – என்றும், திருவாய்மொழி (2-7-6) - எதிர் சூழல்புக்கு – என்றும் கூறுவதற்கு ஏற்ப, அனைத்து ஆத்மாக்களையும் அவை உய்வு பெறும் பொருட்டு படைத்தலும், அவதாரங்கள் மூலம் அவற்றைக் காத்தபடி இருத்தலும் செய்வதால், எல்லையற்ற காலம் நம்மை அலட்சியம் செய்து கைவிட்டான் என்று எண்ண இயலாது. கருணை இல்லாதவர்கள் போன்று நம்முடைய கர்மபலன்களுக்கு ஏற்றபடி தண்டிப்பது எதற்கு; மண்ணைத் தின்ற குழந்தையின் நாக்கைக் கிள்ளி அதனைப் பயம் கொள்ள வைக்கும் தாய் போன்று, நமது நன்மையைக் கருத்தில் கொண்டே அது போன்று செய்வதால், அந்தச் செயல் நாம் கரையேறும் பொருட்டே ஆகும். எல்லையற்ற ஸ்வதந்த்ரம் காரணமாக நம்மைச் ஸம்ஸாரத்தில் கட்டி வைக்கக் காரணமாக இருந்தபோதிலும், நம்மைக் கருணையுடன் அங்கீகரித்து ஏற்றுக் கொண்ட பின்னர், எல்லையற்ற காலமாகப் பிறப்பு இறப்பு என்றுள்ள ஸம்ஸாரத்தில் உழன்றபடி உள்ள நம்மை, நித்யஸூரிகளுக்குச் சமமான நித்யகைங்கர்யம் அளித்து ஆளாக்கும்போது, அதனைத் தடுக்க யாரும் இல்லாதபடி செய்வதற்குக் காரணமாக உள்ளதால் நன்மையே ஆகும். க்ருஷ்ணா வதாரத்தில் தனது விருப்பத்தின்படி செய்த செய்கைகள் - யதி மே ப்ரஹ்மசர்யம் ஸ்யாத் – நான் ப்ரம்மச்சாரியாக இருந்தால் அச்வத்தாமனின் அஸ்த்ரத்தால் விழுந்த இந்த பரீக்ஷத் எழவேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப கோபிகைகளுடன் உள்ள இன்பத்தில் பற்றுதல் இல்லாமையை வெளியிடுவதற்காகவும், ஸ்ரீமத்பாகவதம் - கோப்ய: காமாத் - கோபிகைகள் காமத்தினால் மோக்ஷம் அடைந்தார்கள் - என்பதற்கு ஏற்ப அந்த மார்க்கம் மூலமாக அவர்களைத் தன்னிடம் அன்புடையவர்களாகச் செய்து கரை ஏற்றவும் என்பதற்காகச் செய்தான்; ஆகவே அவனுடைய செயல்கள் அனைத்தும் நன்மையே அல்லாமல், தோஷம் இல்லை. பாகவதர்களும், பெரியாழ்வார் திருமொழி (4-4-2) – குற்றமின்றிக் குணம் பெருக்கி – என்று கூறுவதற்கு ஏற்ப, குற்றம் இல்லாதவர்களாக எல்லையற்ற குணங்கள் கொண்டவர்களாக உள்ளதால், நன்கு ஆராய்ந்து பார்த்தால் அவர்களிடம் எந்தவிதமான குற்றமும் இல்லை என்று உள்ளவர் ஆவர். இதே போன்று பகவத் பாகவத் விஷயங்களில் குற்றங்கள் உண்டு என்று தோன்றினாலும், அவற்றைத் தகுந்த ஆதாரம் மூலம் நீக்கிக்கொள்ளும் விதம் அறிந்து, அந்தச் சந்தேகங்களை போக்கிக் கொள்ளவேண்டும். இவை அனைத்தையும் திருவுள்ளம் பற்றியே இந்தச் சூர்ணையில், “இல்லாமையாலே” என்று அருளிச்செய்தார்.