Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 350)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

மநஸ்ஸுக்குத் தீமையாவது ஸ்வகுணத்தையும் பகவத் பாகவத தோஷத்தையும் நினைக்கை.

மநஸ்ஸுக்குத் தீமையாவ தேதென்னு மாகாங்க்ஷையிலே யருளிச் செய்கிறார் மேல் (மநஸ்ஸுக்கு) என்று தொடங்கி.

“மனத்துக்குத் தீமை என்ன?” என்று சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.

(ஸ்வகுணத்தை நினைக்கையாவது) - சமதமாத் யாத்ம குணங்கள் தனக்குண்டானாலும் “நிறைவொன்றுமிலேன்”, “நலந்தா னொன்றுமிலேன்” என்கிறபடியே – நமக்கோ ராத்மகுணமுமில்லை என்று தன் வெறுமையை யநுஸந்திக்க வேண்டியிருக்க, இவையெல்லாம் நமக்கிப்போதுண்டென்று தனக்குண்டான ஸத்குணங்களைப் போரப்பொலிய நினைக்கை. (பகவானுடைய தோஷத்தை நினைக்கையாவது), தனக்குப் பரதந்த்ரமான இவ்வாத்ம வஸ்துவைத் தன்னுபேக்ஷையாலே அநாதிகாலம் கர்மத்தை வ்யாஜமாக்கிக் கைவிட்டிருந்தவன், அவ்வளவு மன்றிக்கே நிர்தயரைப்போலே யதாகர்ம பலதாயியாய் நிரயங்களிலே தள்ளி யறுத்தறுத்துத் தீத்துமவன் கைக்கொண்டாலும் நிரங்குச ஸ்வதந்த்ரனாகையாலே இன்னபோதின்னபடி செய்யும் என்று விச்வஸிக்கவொண்ணாதவன் என்றாப்போலேவும், க்ருஷ்ணாவதாரத்தில் ஸ்வைர விஹாரங்களையிட்டு தர்ம ஸம்ஸ்தாபநம் பண்ணப் பிறந்தவனுக்கு இங்ஙன் செய்கை முறைமையா யிருந்ததில்லையீ என்றாப்போலவும் நினைக்கை. அல்லது, ஸமஸ்த கல்யாண குணாத்மகமான விஷயத்தில் நினைக்கலாவதொரு தோஷமில்லையிறே. இனி, (பாகவத தோஷத்தை நினைக்கையாவது), திருமேனியோடே இருக்கையாலே மேலேழத் தோற்றுகிற வாகாரங்களையிட்டு, ப்ரக்ருதிவச்யர், அஹங்காரக்ரஸ்தரர் என்றாப்போலே நினைக்கை. ஆக, இது ஸ்வகுணத்தையும் பகவத் பாகவத தோஷத்தையும் நினைக்கையாவது.

(ஸ்வகுணத்தை நினைக்கையாவது) - புலன் அடக்கம் போன்ற ஆத்மகுணங்கள் தன்னிடம் உள்ளபோதிலும், திருவாய்மொழி (3-3-4) – நிறைவொன்றுமிலேன் – என்றும், பெரியதிருமொழி (1-9-4) – நலந்தா னொன்றுமிலேன் – என்றும் கூறுவதற்கு ஏற்ப, நமக்கு எந்தவிதமான ஆத்மகுணங்களும் இல்லையே என்று தனது வெறுமையை எண்ணியபடி இருக்கவேண்டும்; இதனை விடுத்து, “இவை அனைத்தும் நமக்கு உண்டு” என்று தன்னிடம் உள்ள ஸத்வகுணங்களை மிகுதியாகச் சிந்தித்தல் ஆகும். (பகவானுடைய தோஷத்தை நினைக்கையாவது) - ஸர்வேச்வரனாகிய தனக்கு உடைமையான இந்த ஜீவாத்மாவை எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ள கர்மங்களைக் காரணம் காண்பித்துக் கைவிட்டிருந்தவன்; அது மட்டுமே அல்லாமல் சிறிதும் கருணை இல்லாதவர் போன்று அந்தக் கர்மங்களின் பலனாக உள்ள நரகங்கள் போன்றவற்றில் தள்ளி நம்மைத் துன்பம் அடையும்படிச் செய்தவன்; இப்படிப்பட்ட அவன் கைக்கொண்டாலும், எல்லையற்ற சுதந்திரம் உள்ளவன் என்பதால், “இன்ன சமயத்தில் இதனைச் செய்வான்” என்று நம்ப இயலாதபடி உள்ளவன் என்பது போன்று சிந்தித்தல்; க்ருஷ்ணாவதாரத்தில் தனது விருப்பப்படி பல செயல்களைச் செய்தது கண்டு, “தர்மத்தை நிலை நாட்ட வந்து அவதரித்தவன், இவ்விதம் செய்வது முறையாகுமோ”, என்று சிந்தித்தல் – போன்றவை ஆகும். இவ்விதம் அல்லாமல், அனைத்து கல்யாணகுணங்களுக்கும் இருப்பிடமாக உள்ள ஸர்வேச்வரன் விஷயத்தில் சிந்திக்கக்கூட ஒரு தோஷமும் இல்லை அல்லவோ? (பாகவத தோஷத்தை நினைக்கையாவது) - திருமேனியுடன் உள்ளதால் மேலெழ நோக்கும்போது தென்படும் தன்மைகள் மூலமாக, “இவர்களும் (நம்போன்று) இந்த உலகின் வசப்பட்டவர்கள், அஹங்காரம் போன்றவற்றில் ஈடுபாடு உள்ளவர்கள்”, என்று எண்ணுதல் ஆகும். இதுவே தனது குணத்தையும், பகவத் பாகவத தோஷத்தையும் சிந்திப்பது ஆகும்.