Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 349)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

இவனுக்கு சரீராவஸாநத்தளவும் ஆசார்ய விஷயத்தில் “என்னைத் தீமனம் கெடுத்தாய்”, “மருவித்தொழும் மனமே தந்தாய்” என்று உபகார ஸ்ம்ருதி நடக்கவேணும்.

– ஆக, இப்படி ஆசார்ய ப்ரீத்யர்த்தமாகச் செய்யவேண்டுமவையும், தவிர வேண்டுமவையு மருளிச்செய்தாராய் நின்றார் கீழ்; இன்னமு மிவனுக் கபேக்ஷிதமா யிருப்பதொன்றை அருளிச்செய்கிறார் மேல் இவனுக்கு என்று தொடங்கி.

இப்படியாக ஆசார்யனின் மனமகிழ்வின் பொருட்டுச் செய்ய வேண்டியதையும், தவிர்க்க வேண்டியதையும் இதுவரை அருளிச்செய்தார். மேலும் இந்த அதிகாரிக்கு அவசியமாக இருக்கவேண்டியதொன்றை அருளிச்செய்கிறார்.

– அதாவது, இவ்வதிகாரிக்கு, சரீரத்தோடிருக்குங் காலமித்தனையும் மஹோபகாரகனான வாசார்யன் பக்கலில், என்னுடைய தீயமனஸ்ஸைப் போக்கினாய், அநந்ய ப்ரயோஜநமாக வநுகூல வ்ருத்திளைப் பண்ணும் மநஸ்ஸைத் தந்தாய் என்று உபகார ஸ்ம்ருதி யநுவர்த்திக்க வேணும்.

இந்த அதிகாரியின் சரீரம் இந்த உலகிலிருந்து மறையும் காலம் முடிய தனக்கு உபகாரம் செய்த ஆசார்யனிடம், “எனது தீய மனத்தைப் போக்கினாய். வேறு எந்தப் பலனையும் எதிர்பாராமல் அநுகூலமான கைங்கர்யங்களைச் செய்யும் மனம் அளித்தாய்”, என்று செய்ந்நன்றியுடன் இருந்தல் வேண்டும்.