Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 348)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

அவனுடைய ரக்ஷகத்வக்ரமம் ப்ரபந்ந பரித்ராணதிக்லே சொன்னோம். குருபரிபவமாவது கேட்டவர்த்த்தின்படி யனுஷ்ட்டியா தொழிகையும் அநதிகாரிகளுக்கு உபதேசிக்கையும்; மந்த்ர பரிபவமாவது அர்த்தத்தில் விஸ்ம்ருதியும் விபரீதார்த்த ப்ரதிபத்தியும்; தேவதாபரிபவமாவது கரணத்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையும், தத்விஷயத்தில் ப்ரவணமாக்கா தொழிகையும்.

அவன் ரக்ஷித்தருளும் க்ரமந்தா னென்னென்ன வருளிச்செய்கிறார் (அவனுடைய) என்று தொடங்கி.

ஸர்வேச்வரன் நம்மைக் காப்பாற்றும் முறை எவை என்பதை அருளிச்செய்கிறார்.

அதாவது ஸர்வரக்ஷகனான அவனுடைய ரக்ஷகத்வ க்ரமம், ப்ரபந்ந பரித்ராண மென்கிற ப்ரபந்தத்திலே விசதமாகச் சொன்னோம், அங்கே கண்டு கொள்வதென்கை. அதிலே, அவனையொழிந்தா ரடங்கலும் அரக்ஷக ரென்னுமத்தை ப்ரதிபாதித்த வநந்தரம் “ஈச்வரன் மாதாபிதாக்கள் கைவிட்ட வவஸ்தையிலும் ‘பின்னும் நின்றடியேனுக் குற்றானாய் வளர்த்து’ என்கிறபடியே தன்னுருக்கெடுத்து வேற்றுருக் கொண்டு தாய் முகங்காட்டி இன்சொல் சொல்லியும்” என்று தொடங்கி, “இவனே யெல்லார்க்கும் ரக்ஷகன்” என்கிறதளவாக, அவனுடைய ரக்ஷகத்வ க்ரமத்தை ஸுவ்யக்தமாக வருளிச்செய்தாரிறே. (குருபரிபவம்) இத்யாதி. (கேட்டவர்த்தத்தின்படி அநுஷ்டியா தொழிகையாவது), ஸ்வோஜ்ஜீவநார்த்தமாக அவனருளிச்செய்யக் கேட்ட த்யாஜ்யோபாதேய ரூபமான வர்த்த விசேஷங்களுக்குத் தகுதியா யிருந்துள்ள த்யாக ஸ்வீகார ரூபமான வநுஷ்டாநத்தைப் பண்ணாதொழிகை. (அநதிகாரிகளுக் குபதேசிக்கையாவது), தனக்குத் தஞ்சமாக அவனுபதேசித்த ஸாரார்த்தங்களை, நாஸ்திக்யாதிகளாலே யிதுக்கதிகாரிக ளல்லாதவர்களுக்கு க்யாதிலாபாதிகளை நச்சி உபதேசிக்கை. (மந்த்ர பரிபவம்) இத்யாதி. (அர்த்தத்தில் விஸ்ம்ருதியாவது), ஆசார்யன் அந்த மந்த்ரத்துக்கருளிச் செய்த யதார்த்தங்களைப் பலகாலு மநுஸந்தித்து நோக்கிக் கொண்டு போருகை யன்றிக்கே ஔதாஸீந்யத்தாலே மறந்து விடுகை. (விபரீதார்த்த ப்ரதிபத்தியாவது) ஆசார்யனருளிச்செய்த ப்ரகாரமன்றிக்கே, மந்த்ரத்துக்கு விபரீதமாயிருக்கு மர்த்தங்களை இதுக்கர்த்தமென்று ப்ராந்தியாலே ப்ரதிபத்தி பண்ணியிருக்கை (தேவதாபரிபவம்) இத்யாதி. (கரணத்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையாவது) “விசித்ரா தேஹ ஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும்”, “மாயவன்றன்னை வணங்க வைத்த கரணமிவை” என்கிறபடியே – பகவத் பரிசர்யார்த்தமாக ஸ்ருஷ்டங்களாய், “உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்தேத்திக் கைதொழவே” என்கிறபடியே அவனை நினைக்கைக்கும் ஸ்துதிக்கைக்கும் வணங்குகைக்கு முறுப்பான மநோவாக்காயங்களை, ஸ்வரூப ப்ராப்தமல்லாத ஹேயவிஷயங்களிலே, மேட்டில் நீர் பள்ளத்தில் விழுமாப்போலே ப்ரவணமாம்படி பண்ணுகை. (தத்விஷயத்தில் ப்ரவணமாக்கா தொழிகையாவது) - “மால்கொள் சிந்தையராய்”, “நாத்தழும்பெழ நாரணாவென் றழைத்து மெய்தழும்பத் தொழுது” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே – ஸ்வரூப ப்ராப்தமான வவ்விஷயத்தில் மண்டி விழும்படி பண்ணுவியாதொழிகை. ஆக, “மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரெள, த்ரிஷு பக்திஸ் ஸதாகார்யா” என்றும், “மந்த்ரநாதம் குரும் மந்த்ரம் ஸமத்வேநாநுபாவயேத்” என்றும் பூஜ்யமாகச் சொல்லப்படுகிற இம்மூன்று விஷயத்தை பரிபவிக்கையாவது திவையாய்த்து.

– “அவன் காப்பாற்றி அருளும் விதங்கள் குறித்து ப்ரபந்ந பரித்ராணம் என்ற ப்ப்ரபந்தத்தில் விரிவாக அருளிச்செய்தோம், அங்கு அறிந்து கொள்க” என்கிறார். அந்தக் க்ரந்தத்தில் அவனைத் தவிர மற்ற யாரும் காப்பாற்றுபவர்கள் அல்லர் என்று உரைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, “பெரிய திருமொழி (8-9-7) – பின்னும் நின்றடியேனுக் குற்றானாய் வளர்த்து – என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரன் தாயும் தந்தையும் நம்மைக் கைவிட்டாலும் தனது இயல்பான ரூபத்தை மாற்றிக் கொண்டு, வேறு அவதாரங்கள் எடுத்து, தாயின் முகத்தைக் காண்பித்தபடி இனிமையான சொற்கள் பேசுபவனாக வந்து” என்பது தொடங்கி, “இவனே அனைவருக்கும் ரக்ஷகன்” என்று முடித்தமை காண்க. இப்படியாக அவன் காக்கும் வகைகளை மிகவும் விரிவாக அருளிச்செய்தார். (குருபரிபவம்) - உபதேசம் மூலம் கேட்டவற்றைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும், அதிகாரி அல்லாதவர்களுக்கு உபதேசம் செய்வதும் ஆகும். (கேட்டவர்த்தத்தின்படி அநுஷ்டியா தொழிகையாவது) – தான் பிழைப்பதற்காக ஆசார்யன் அருளிச்செய்ததாகிய கைவிடவேண்டியவை, கைக்கொள்ளப்பட வேண்டியவை என்பதற்கு ஏற்றதாக இருக்கும்படியான கைவிட வேண்டிய செயல்கள் மற்றும் செய்யக்கூடிய செயல்கள் ஆகியவற்றைப் பின்பற்றாமல் இருத்தல் ஆகும். (அநதிகாரிகளுக் குபதேசிக்கையாவது) – தனக்குத் தஞ்சமாக இருக்கவேண்டும் என்று ஆசார்யன் தனக்கு உபதேசித்த ஆழ்ந்த பொருள்களை, நாஸ்திகம் போன்ற காரணமாக இந்த உபதேசங்களைப் பெறத் தகுதி அற்றவர்களுக்கு, புகழ் மற்றும் பொருள் போன்றவற்றைக் கருதி உபதேசிப்பது ஆகும். (மந்த்ர பரிபவம்) – மந்த்ரபரிபவம் என்றால் மறதியும், வேறுபட்ட அர்த்தங்களை உணர்தலும் ஆகும். (அர்த்தத்தில் விஸ்ம்ருதியாவது) – ஆசார்யன் அந்த மந்த்ரத்திற்கான உண்மையான பொருளை அருளிச்செய்தவுடன், தொடர்ந்து அதனை எண்ணியபடி இராமல், உதாசீனப்படுத்தி மறந்துவிடுதல் ஆகும். (விபரீதார்த்த ப்ரதிபத்தியாவது) – ஆசார்யன் அருளிச்செய்த அர்த்தங்களை விடுத்து, முரண்பாடாக இருக்கும் அர்த்தங்களை மயக்கத்தின் காரணமாக மந்த்ரங்களுக்கு எண்ணிக் கொள்ளுதல் ஆகும். (தேவதா பரிபவம்) – தேவதா பரிபவம் என்றால் மனம், வாக்கு மற்றும் சரீரம் போன்றவற்றை மற்ற விஷயங்களில் ஈடுபடுத்தலும், ஸர்வேச்வரன் விஷயத்தில் ஈடுபாடு இல்லாமல் இருத்தலும் ஆகும். (கரணத்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களிலே ப்ரவணமாக்குகையாவது) – விஷ்ணுதத்வம் – விசித்ரா தேஹ ஸம்பத்தி ரீச்வராய நிவேதிதும் – அந்தணரே! விசித்ரமாகவும், கைகால் முதலான உறுப்புகளுடன் கூடியதாகவும் உள்ள இந்தச் சரீரம், ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாராயணனுக்கு ஸமர்ப்பணம் செய்வதற்காகவே முன்பு படைக்கப்பட்டது – என்றும், இராமானுச நூற்றந்தாதி (67) - மாயவன்றன்னை வணங்க வைத்த கரணமிவை – என்றும் கூறுவதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்வதற்காகவே படைக்கப்பட்டவையாக; திருவாய்மொழி (7-1-8) – உன் சின்னமும் திருமூர்த்தியும் சிந்தித்தேத்திக் கைதொழவே - என்பதற்கு ஏற்ப அவனை எண்ணுவதற்கும், துதிப்பதற்கும், வணங்குவதற்கும் படைக்கப்பட்ட மனம், வாக்கு மற்றும் சரீரம் ஆகிய மூன்றையும், “அவனுடைய அடிமை” என்ற ஸ்வரூபத்திற்கு ஏற்காத விஷயங்களில், மேட்டிலிருந்து பாள்ளத்தில் நீர் பாய்வது போன்று, தானாகவே விழும்படியாகச் செய்வதாகும். (தத்விஷயத்தில் ப்ரவணமாக்கா தொழிகையாவது) – பெருமாள் திருமொழி (2-1) – மால்கொள் சிந்தையராய் – என்றும், பெருமாள் திருமொழி (2-4) - நாத்தழும்பெழ நாரணாவென் றழைத்து மெய்தழும்பத் தொழுது – என்றும் கூறுவது போன்று ஆத்ம ஸ்வரூபத்திற்கு ஏற்ற விஷயங்களான பகவத் பாகவத விஷயங்களில் ஈடுபட்டு நிற்கும்படி செய்யாமல் இருப்பதாகும். ஆகவே கீழே உள்ள வரிகளில் கூறப்பட்டபடி பக்தி செலுத்துவதற்கு ஏற்றதாக உரைக்கப்பட்ட இந்த மூன்று விஷயங்களையும் அவமானப்படுத்துவது இவையாயிற்று: விஷ்ணுதத்வம் – மந்த்ரே தத் தேவதாயாஞ்ச ததா மந்த்ர ப்ரதே குரெள, த்ரிஷு பக்திஸ் ஸதாகார்யா – திருமந்த்ரத்திலும், அந்த மந்த்ரத்தின் தெய்வமான ஸ்ரீமந்நாராயணனிடமும், அதனை உபதேசித்த ஆசார்யனிடமும் பக்தி எப்போதும் இருக்கவேண்டும், இதுவே முதன்மையான உபாயம். மந்த்ரநாதம் குரும் மந்த்ரம் ஸமத்வேநாநுபாவயேத் – மந்த்ரத்தின் நாதனாகிய ஸர்வேச்வரனையும், அதனை உபதேசித்த ஆசார்யனையும், மந்த்ரத்தையும் சமமாகவே எண்ணவேண்டும்.