Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 347)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
பகவத் த்ரவ்யாபஹாரமாவது ஸ்வாதந்த்ர்யமும் அந்ய சேஷத்வமும்; பகவத் போஜநத்தை விலக்குகையாவது அவனுடைய ரக்ஷகத்வத்தை விலக்குகை.
இப்படி யுத்தேசித்தவற்றின் ப்ரகாரங்களை யடைவே விசதீகரிக்கிறார் மேல் (பகவத் த்ரவ்யாபஹாரமாவது) என்று தொடங்கி.
இப்படியாகக் கூறப்பட்டவையின் தன்மைகள் குறித்து அருளிச்செய்கிறார்.
(பகவத் த்ரவ்யம்) என்கிறது, “பிறர் நன்பொருள்” என்னும்படி ஸ்ரீகௌஸ்துபம் போலே ஈச்வரனுக்கு ஸ்ப்ருஹணீயமான ஆத்மத்ரவ்யத்தை. (ஸ்வாதந்த்ர்யமாவது), சேஷத்வைக நிருபணீயமான வற்றைத் தனக்குரித்தாக நினைத்திருக்கை. (அந்யசேஷத்வமாவது), பகவதேக சேஷமானவற்றை ததிதரசேஷமாக நினைத்திருக்கை. இதுதான் மாதா பித்ராதி தேவதாந்தர பர்யந்தமாயிருக்கும். இவையிரண்டும் ப்ரதமாக்ஷரத்தில் சதுர்த்தியாலும் மத்யமாக்ஷரத்தாலும், கழிக்கப் படுகிறவையிறே. இது தன்னை “கிந்தேந நக்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா” என்று ஸகல பாப மூலமாகச் சொல்லா நின்றதிறே. (பகவத் போஜநம்) இத்யாதி. ரக்ஷணத்தை பகவத் போஜநமென்கிறது, ரக்ஷ்யவர்க்கத்தினுடைய ரக்ஷண மவனுக்கு பசித்தவனுக்குணவு போலே தாரகமாயிருக்கையாலே; “மண்ணும் விண்ணும் மெல்லா முடனுண்ட” என்கிறவிடத்தில், “ரக்ஷண மவனுக்கு தாரகமாகையாலே ‘உண்ட’ என்கிறது, இல்லையாகில் ‘காக்கும்’ என்னவமையும்” என்றிறே நம்பிள்ளை யருளிச்செய்தது. ஏவம் பூதமான வவனுடைய ரக்ஷகத்வத்தை விலக்குகையாவது, “அவ ரக்ஷணே” என்கிற தாதுவாலே நிருபாதிக ஸர்வரக்ஷகனாகச் சொல்லப்படுகிற வவனுக்கு ரக்ஷிக்க விடமறும்படி ஸ்வயத்நத்தாலேயாதல் பிறராலேயாதல் தன்னை ரக்ஷிக்கையிலே ப்ரவ்ருத்தனாகை. இதுதான், பகவதேக ரக்ஷ்யத்வ ப்ரதிபாதகமான நமஸ்ஸாலே கழிக்கப்படுகிறதிறே.
(பகவத் த்ரவ்யம்) – கண்ணிநுண்சிறுத்தாம்பு (5) – பிறர் நன்பொருள் – என்பதற்கு ஏற்ப ஸ்ரீகௌஸ்துபம் போன்று ஸர்வேச்வரன் மிகவும் விரும்பும் ஆத்மா. (ஸ்வாதந்த்ர்யம்) – ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள நிலை என்பதையே இயல்பாகக் கொண்டவற்றைத் தனக்கு உரியது என்று எண்ணுதல். (அந்யசேஷத்வமாவது) – ஸர்வேச்வரனுக்கு மட்டுமே அடிமைப்பட்டபடி இருக்கும் ஆத்மாவை மற்றவர்களுக்கும் அடிமைப்பட்டது என்று எண்ணுதல். இத்தகைய சிந்தனை என்பது தாய், தந்தை என்று தொடங்கி மற்ற தேவதைகள் முடிய காணப்படும். இந்த இரண்டுமே திருமந்த்ரத்தின் முதல் பதமாக உள்ள ஓம் என்பதில் காணப்படும் நான்காம் வேற்றுமையாலும் (இதனால் அனைத்து உயிர்களும் ஸர்வேச்வரனுக்கு அடிமை எனப்படுகிறது), அதில் உள்ள நடு எழுத்தான ‘உ’ என்பதாலும் (இதனால் அவனுக்கு மட்டுமே அடிமை எனப்படுகிறது) விலகுகின்றன. மஹாபாரதம் ஆதிபர்வம்(74-27) – கிந்தேந நக்ருதம் பாபம் சோரேண ஆத்ம அபஹாரிணா – ஆத்மாவை அபசாரம் செய்த ஒருவனால் எந்தப் பாவம்தான் செய்யப்படவில்லை – என்பதன் மூலம் ஆத்ம அபசாரம் என்பது அனைத்து பாவங்களுக்கும் மூலமாக உரைக்கப்பட்டது காண்க. (பகவத் போஜநம்) – நம்மைக் காப்பாற்றுதல் என்பதை ஸர்வேச்வரனுக்கு உணவு என்றார். காக்கப்படுகின்ற பொருள்களைக் காப்பாற்றுதல் என்பது ஸர்வேச்வரனுக்கு பசி எடுத்தவனுக்கு, உணவு கிட்ட்டுவது போன்றதாகும். திருவாய்மொழி (2-2-1) – மண்ணும் விண்ணும் மெல்லா முடனுண்ட – என்று கூறும்போது ரக்ஷணம் என்ற செயல் அவன் தரிக்க உதவுவதால் ‘உண்ட’ எனப்பட்டது; இவ்விதம் இல்லையென்றால், “காக்கும்” என்றே கூறியிருப்பார் – என்பதை நம்பிள்ளை அருளிச்செய்தார். இப்படியாக உள்ள ஸர்வேச்வரனுடைய காப்பாற்றும் தன்மையை விலக்குவது எது என்றால் – அவரக்ஷணே – என்ற தாது மூலம் தனது இயல்பிலேயே அனைவரையும் எந்தவிதமான காரணமும் இன்றி ரக்ஷிக்கும் ஸர்வேச்வரன் அச்செயலை நிறுத்திக் கொள்ளும்படியான “தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ள முயலுதல் அல்லது ஸர்வேச்வரன் அல்லாமல் மற்றவர் மூலம் தன்னைக் காப்பாற்ற முயலுதல்” என்ற செயல்களால் ஆகும். இந்த விஷயம் ஸர்வேச்வரனால் மட்டுமே காப்பாற்றப்படுகிறது என்பதைக் கூறுகிற “நம:” என்ற பதம் மூலம் விலக்கப்பட்டது அல்லவோ?