Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 342)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

அவனுக்குப் பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது, இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது.

இந்த பூர்த்தி தாரித்ர்யங்களாக லிருவர்க்கும் பலித்தவற்றை யருளிச் செய்கிறார் (அவனுக்கு) என்று தொடங்கி.

இப்படியாக ஆசார்யன் நிறைவுடன் இருப்பதும், சிஷ்யன் ஏழையாக இருப்பதும் ஆகியவற்றால் இவர்களுக்கு உண்டாவதை அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஆசார்யனுக்கு, இவனபிமாந துஷ்டமானவை யொன்றையும் கொள்ளாமைக் குடலான பூர்த்தியாலே ஆசார்யத்வமாகிற ஸ்வரூபம் ஜீவித்தது; சிஷ்யனான இவனுக்கு, ஸ்வகீயத்வ புத்த்யா ஒன்றையும் ஸமர்ப்பிக்கைக்கு யோக்யதையில்லாத ஸகல ததீயத்வ ப்ரதிபத்தி ஸித்த தாரித்ர்யத்தாலே சிஷ்யத்வமாகிற ஸ்வரூபம் ஜீவித்ததென்கை.

சிஷ்யன் தன்னுடையது என்று சிந்திக்கும் எதனையும் ஆசார்யன் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்குக் காரணமான நிறைவு என்பதால் ஆசார்யத்வம் என்ற ஸ்வரூபம் உண்டாகிறது. சிஷ்யனுக்குத் தன்னுடையது என்ற எண்ணம் காரணமாக எதனையும் அளிக்கத் தகுதியில்லாதபடி, அனைத்தும் ஆசார்யனுடையது என்ற சிந்தனை காரணமாக ஏற்படும் ஏழ்மை என்பதால் சிஷ்யத்வம் என்ற ஸ்வரூபம் உண்டாகிறது.