Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 341)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
இவன் மிடியனாகையாலே கொடான், அவன் பூர்ணனாகையாலே கொள்ளான்.
இப்படி தாரித்ர்ய த்ரவ்யாபஹாரங்கள் வருவதும் ஸம்பந்தங் குலைவதும் கொள்கொடைதா னுண்டாகிலிறே; அதுதானிவர்கள் செய்யார்களென்னுமிடத்தை ஸஹேதுகமாக அருளிச்செய்கிறார் (இவன்) என்று தொடங்கி.
– இவ்விதம் சிஷ்யனுக்கும் ஆசார்யனுக்கும் முறையே தரித்திரத்தன்மை மற்றும் களவுத்தன்மை ஏற்படுதல் என்பது சிஷ்யன் கொடுத்தல் மற்றும் ஆசார்யன் ஏற்றுக் கொள்ளுதல் என்பதால் உண்டாகிறது அல்லவோ? ஆகவே அவர்கள் இருவரும் அவற்றைச் செய்யமாட்டார்கள் என்பதைக் காரணத்துடன் அருளிச்செய்கிறார்.
– அதாவது, சிஷ்யனான இவன், “ஸகலமு மாசார்ய ஸ்வம், நம்மதென்று ஸமர்ப்பிக்கலாவ தொன்றுமில்லை” என்றிருக்கும் மிடியனாகையாலே, நாம் அங்குத்தைக் கொன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான்; ஆசார்யனானவன், “ஈச்வரன் ஸகலபர நிர்வாஹகனாய் நடத்திக்கொண்டு போருகையாலே நமக்கினியென்ன குறையுண்டு” என்றிருக்கும் பரிபூர்ணனாயிருக்கையாலே, இவனபிமாந துஷ்டமானவை யொன்றையு மங்கீகரியா னென்கை.
சிஷ்யன் தனது மனதில், “அனைத்துப் பொருள்களும் ஆசார்யனின் உடைமையே ஆகும், நம்முடையது என்று கருதி ஆசார்யனுக்கு அளிக்கவல்லது ஏதும் இல்லை” என்று எண்ணுவதால் ஆசார்யனுக்கு ஏதும் அளிக்கமாட்டான். ஆசார்யன் தனது திருவுள்ளத்தில், “ஈச்வரன் மட்டுமே அனைத்தையும் நிகழ்த்தி வருகிறான், ஆகவே நமக்கு என்ன குறை உள்ளது?”, என்று எண்ணுவதால் சிஷ்யன் தன்னுடையது என்று எண்ணியிருப்பதை ஒருபோதும் ஏற்கமாட்டான்.