Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 340)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
கொள் கொடையுண்டானால் ஸம்பந்தம் குலையும்.
– இவ்வளவேயன்று, ஸம்பந்த ஹாநியும் வருமென்கிறார் (கொள் கொடை) என்று தொடங்கி.
இதுவரை கூறப்பட்டது மட்டுமல்லாமல் அவர்கள் இருவரின் சம்மந்தத்திற்கும் கேடு ஏற்படும் என்கிறார்.
– அதாவது, சிஷ்யாசார்யத்வமாகிற ஸம்பந்தமுண்டானால், சேஷபூதனான சிஷ்யன் “சரீரமர்த்தம்” இத்யாதிப்படியே ஸர்வமு மங்குத்தைய தென்னும் நினைவாலே ஸமர்ப்பிக்கையும், அப்படி ஸமர்ப்பித்தவற்றை சேஷியான வாசார்ய னங்கீகரிக்கையும் முறையாயிருக்க, இவன் தன்னது என்றபிமாநித்தவற்றை ஆசார்யன் ஸ்வீகரிக்கையும், இவன் என்னது என்றபிமாநித்தவற்றை ஆசார்யனுக்கு ஸமர்ப்பிக்கையுமாகிற முறைகேடான கொள்கொடை யுண்டானபோது, சிஷ்யாசார்யத்வரூப ஸம்பந்தம் குலைந்தே விடுமென்கை.
ஒருவன் சிஷ்யன், மற்றவன் ஆசார்யன் என்ற சம்மந்தம் ஏற்படும்போது, சிஷ்யனானவன் – சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத் – என்பதற்கு ஏற்ப தனது அனைத்து உடைமைகளும் ஆசார்யனுக்கே சொந்தம் என்று எண்ணியபடி அளிக்கவேண்டும். இவ்விதம் கொடுத்தவற்றை ஆசார்யன் ஏற்பதே சரியான முறையாகும். இதனை விடுத்து, சிஷ்யன் “தன்னுடையது” என்று அபிமானித்துள்ளதை ஆசார்யன் ஏற்றுக்கொள்வதும் “இவை என்னுடையது” என்று அபிமானித்துள்ளவற்றை ஆசார்யனுக்கு அளிப்பதும் – என்பதான முறைகேடான அளித்தல், கொள்ளுதல் என்ற காரணத்தினால் இருவருக்கும் இடையே உள்ள சம்மந்தம் அழிந்துவிடும் என்று கருத்து.