Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 339)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
கொள்ளில் மிடியனாம், கொடுக்கில் கள்ளனாம்
அப்படி கொள்ளுதல் கொடுத்தல் செய்தால் வருவதென்னென்ன வருளிச்செய்கிறார் (கொள்ளில்) என்று தொடங்கி.
மேலே கூறியது போன்று அளிப்பதும், பெற்றுக்கொண்டதும் செய்தால் நிகழ்வது என்ன என்பதற்கு விடை அருளுகிறார்.
– அதாவது, சிஷ்யன் என்னது என்றிருக்கும் வஸ்துவை சாபலத்தாலே ஸ்வீகரிக்கில், ஈச்வரன் அகிலபர நிர்வாஹகனாய்ப் போருகையாலே நமக்கென்ன குறையுண்டு என்றிருக்கும் பரிபூர்ணனான தான், தேஹயாத்ரைக்குங்கூட முதலற்ற தரித்ரனாய் விடும்; என்னது என்று புத்தி பண்ணி ஒன்றை யாசார்யனுக்குக் கொடுக்கில் “சரீரமர்த்தம்” இத்யாதிப்படியே அடியிலே ஸமர்ப்பிதமாகையாலே ததீயமாய் இருக்கிறவதிலே மதீயத்வ புத்தி பண்ணுகையாலே ஆசார்ய ஸ்வாபஹாரியாய் விடுமென்கை.
சிஷ்யன் “என்னுடையது” என்று அபிமானித்துள்ள ஒரு பொருளை, அந்த பொருள் மீது ஆசையால் ஏற்றுக்கொண்டால், “ஸர்வேச்வர்ரன் நம்முடைய அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டு நடத்துவதால் நமக்கு என்ன குறை”, என்ற சிந்தனையால் பரிபூர்ணமாக உள்ள ஆசார்யன், தனது சரீரத்தை பாதுகாப்பதற்கும் ஏதும் இல்லாத ஏழையாகி விடுகிறான். மேலும் “என்னுடையது” என்ற எண்ணத்துடன் ஆசார்யனுக்கு அளிக்கும்போது, சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத் – தனது சரீரம், பொருள், உயிர் ஆகியவற்றைக் கொடுக்கக் கடவன் – என்பதற்கு ஏற்ப முன்பே இவற்றை அளித்துவிட்ட காரணத்தால், ஆசார்யனின் உடைமையாக உள்ள அவற்றைத் தன்னுடையது என்று எண்ணிய காரணத்தினால், ஆசார்யனின் உடைமைகளை திருடியவன் ஆவான்.