Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 338)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக் கடவனல்லன்; சிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவனல்லன்.

ஆசார்ய தேஹரக்ஷணத்தில் வந்தால், சிஷ்யன் தனக்குள்ளதெல்லா மங்குத்தை யுடைமையென்னும் நினைவாலே கொடுக்கையும், ஆசார்யனும் தாத்ருச வஸ்துவை வாங்குகையுமொழிய, சிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்துவையிருவரும் கொள்ளவும் கொடுக்கவும் கடவர்களல்லரென்கிறார் (ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை) என்று தொடங்கி.

ஆசார்யனின் சரீரத்தைப் பாதுகாக்கும்போது சிஷ்யன், தனக்குள்ள அனைத்தையும் ஆசார்யனின் உடைமை என்று எண்ணியபடி அளிப்பதும்; ஆசார்யன் அந்தப் பொருள்களைப் பெற்றுக் கொள்வது மட்டும் அல்லாமல், அந்த சிஷ்யன் “தன்னுடையது” என்று மமகாரத்தை ஏற்றிக்கொண்டு அளிப்பவற்றை அவனும் அளிக்கத் தக்கவன் அல்ல, பெறத்தக்கதும் அல்ல என்பதும் இந்தச் சூர்ணையில் அருளிச்செய்கிறார்.

(சிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக்கடவன் அல்லன்) என்றது, இவன் மதீயம் என்றபிமாநித்திருக்கும் வஸ்துவை மறந்து அங்கீகரிக்கக்கடவனல்ல னென்கை. (சிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவனல்லன்) என்றது, ஸ்வகீயன் என்றபிமாநித்திருக்கும் வஸ்துவை, அஹங்கார மமகார ஸ்பர்சமுள்ளவை விஷம் என்று வெருவியிருக்கும் ம்ருது ப்ரக்ருதியான வாசார்யனுக்கு, விஷத்தை யிடுமாப்போலே ஸமர்ப்பிக்கக் கடவனல்ல யென்கை.

(சிஷ்யன் வஸ்துவைக் கொள்ளக்கடவன் அல்லன்) - என்று அபிமானித்துள்ள பொருள்களை ஆசார்யன் மறந்தும் பெறக்கூடாது. (சிஷ்யன் தன் வஸ்துவைக் கொடுக்கக் கடவனல்லன்) – “தனக்கு உரியது” என்று அபிமானித்துள்ள பொருள்களை, “அஹங்காரம் மற்றும் மமகாரம் ஆகியவற்றுடன் உள்ள பொருள் விஷம் போன்றது”, என்று எண்ணியுள்ள ஆசார்யனுக்கு விஷத்தை அளிப்பது போன்று அளிக்கக்கூடாது.