Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 337)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஆசார்யன் தன்னுடைய தேஹரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன்; சிஷ்யன் ஸ்வதேஹரக்ஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன்.

ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் தந்தாமுடைய தேஹரக்ஷண தசையில் ப்ரதிபத்தி விசேஷங்களை வகுத்தருளிச் செய்கிறார் மேல் (ஆசார்யன்) என்று தொடங்கி.

– ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் தங்களுடைய சரீரங்களைப் பேணுதல் என்பதைச் செய்யும்போது எவ்விதம் சிந்திக்கவேண்டும் என்று அருளிச்செய்கிறார்.

(ஆசார்யன் தன்னுடைய தேஹரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக்கடவன்) என்றது, “சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத்” என்கிறபடியே சிஷ்ய ஸர்வஸ்வமும் அடியிலே ஸமர்ப்பிதமாகையாலே ஸ்வதேஹ ரக்ஷணத்துக்குறுப்பாக வவன் காலோசிதமாக கிஞ்சித்கரிக்குமவற்றை, அவனதென்னும் நினைவின்றிக்கே தன்னதென்று வாங்கி விநியோகங் கொள்ளக் கடவனென்கை. (சிஷ்யன் ஸ்வதேஹரக்ஷண மாசார்யன் வஸ்துவைக்கொண்டு பண்ணக்கடவன்) என்றது, தனக்கோருடைமை யின்றிக்கே ஸகலமுமாசார்ய சேஷமாகையாலே, ஸ்வதேஹ ரக்ஷணத்துக்குறுப்பாக விநியோகங் கொள்ளுமவற்றை ஆசார்யனுடைமை யென்று ப்ரதிபத்தி பண்ணி விநியோகங் கொள்ளக்கடவனென்கை.

– (ஆசார்யன் தன்னுடைய தேஹரக்ஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக்கடவன்) – சரீரமர்த்தம் ப்ராணஞ்ச ஸத்குருப்யோ நிவேதயேத் – சிஷ்யன் ஒருவன் தனது உயிரையும் சரீரத்தையும் சிறந்த ஆசார்யனுக்குத் தரவேண்டும் – என்றது காண்க; இதற்கு ஏற்ப சிஷ்யன் ஒருவன் ஆசார்யனுக்குச் சிஷ்யனானவுடனேயே தனது அனைத்தையும் ஆசார்யனுக்கு சமர்பித்தவனாகிறான்; ஆகவே தனது சரீரத்தின் பாதுகாப்பிற்காக சிஷ்யன் அவ்வப்போது அளிக்கின்ற பலவற்றையும் சிஷ்யனின் உடைமை என்று சிந்தனை இல்லாமல், அவை தன்னுடையதே என்று வாங்கிக்கொண்டு ஆசார்யன் பயன்படுத்தவேண்டும். (சிஷ்யன் ஸ்வதேஹரக்ஷண மாசார்யன் வஸ்துவைக்கொண்டு பண்ணக்கடவன்) – தன்னுடையது என்று எந்த ஓர் உடைமையையும் வைத்துக்கொள்ளாமல், அனைத்தும் தனது ஆசார்யனுக்கு உரிமை என்று ஆக்கியபடியால், தனது சரீரத்தை பாதுகாத்துக் கொள்ள தான் பயன்படுத்தும் அனைத்துப் பொருள்களையும் “இவை ஆசார்யன் உடைமைகள்” என்று எண்ணிப் பயன்படுத்தவேண்டும்.