Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 336)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
ஆசார்யன் ஆத்மரக்ஷணம் பண்ணுமிடத்தி லஹங்காரம் விரோதி; சிஷ்யன் தேஹரக்ஷணம் பண்ணுமிடத்தில் மமகாரம் விரோதி.
– இனி, ஆசார்யனும் சிஷ்யனுமிப்படி தந்தாமுக்கு வ்யவஸ்திதங்களான ஆத்மரக்ஷண தேஹரக்ஷணங்களைப் பண்ணுமிடத்தில், அவச்யம் பரிஹரணீயங்களான விரோதிகளை அருளிச்செய்கிறார் (ஆசார்யனாத்ம ரக்ஷணம் பண்ணுமிடத்தில்) என்று தொடங்கி.
இப்படியாக ஆசார்யனும் சிஷ்யனும் தங்களுக்கு என்று ஏற்பட்டதான ஆத்மாவை ரக்ஷித்தல், சரீரத்தைக் காப்பாற்றுதல் என்பனவற்றைச் செய்யும்போது, அவசியம் நீக்க வேண்டிய விரோதிகள் எவை என்று அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஹிதபரனான ஆசார்யன் ஸ்வோபதேசாதிகளாலே சிஷ்யாத்ம ரக்ஷணம் பண்ணுமிடத்தில், நான் ரக்ஷித்துக்கொண்டு போருகிறேன் என்கிற வஹங்காரம், ஆசார்ய பாரதந்த்ர்யமாகிற தன்னதிகார விரோதி; ப்ரியபரனான சிஷ்யன் த்ரவ்யாதிகளாலே ஆசார்ய தேஹரக்ஷணம் பண்ணுமிடத்தில், என்னுடைய த்ரவ்யங்களாலும் கரணங்களாலும் இப்படி ரக்ஷித்துக் கொண்டு போருகிறேன் என்கிற மமகாரம் , சரீரார்த்த ப்ராணாதிகளெல்லா மாசார்யசேஷமென்றிருக்கக் கடவ தன்னதிகார விரோதி யென்கை.
சிஷ்யனின் நன்மையில் குறிக்கோள் உடையவனாகிய ஆசார்யன், தனது உபதேசம் போன்றவற்றால் சிஷ்யனின் ஆத்மாவைக் காப்பாற்றும்போது, “நான் இவனைக் காப்பாற்றுகிறேன்” என்று அஹங்காரம் கொண்டால், அந்த அஹங்காரமானது தனது ஆசார்யனுக்கு வசப்பட்டிருத்தல் என்ற தன்மைக்கு விரோதமாகும். ஆசார்யனுக்கு இனிமை அளிப்பதை மட்டுமே செய்தபடி உள்ள சிஷ்யன் பணம் போன்றவற்றால் ஆசார்யனின் சரீரத்தைப் பேணி வரும்போது, “எனது பொருள் மட்டும் உடல் உறுப்புகளால் இவ்விதம் காப்பாற்றுகிறேன்”, என்று சிந்தித்தால், அத்தகைய மமகாரம் என்பது தனது பொருள் மற்றும் சரீரம் ஆகிய அனைத்தும் ஆசார்யனுக்கு மட்டுமே உரியவை என்று இருக்கவேண்டிய தகுதிக்கு விரோதமானவை ஆகும்.