Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 335)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
ஆசார்யனுக்கு தேஹரக்ஷணம் ஸ்வரூபஹாநி; சிஷ்யனுக்கு ஆத்ம ரக்ஷணம் ஸ்வரூபஹாநி.
இப்படி வயவஸ்திதமாக வேணுமோ, ஆசார்யனுக்குத் தன்னுடைய தேஹரக்ஷணத்திலும் சிஷ்யனுக்குத் தன்னுடைய ஸ்வரூப ரக்ஷணத்திலு மந்வய முண்டானால் வருமதேதென்ன அருளிச்செய்கிறார் (ஆசார்யனுக்கு) என்று தொடங்கி.
இவ்விதம் வரைமுறை என்று விதிக்க வேண்டுமோ? ஆசார்யனுக்குத் தனது சரீரத்தைக் காப்பாற்றுவதிலும், சிஷ்யனுக்குத் தனது ஸ்வரூபத்தைக் காப்பாற்றுவதிலும் ஸம்பந்தம் ஏற்படும்போது உண்டாகும் விளைவு என்ன என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.
– அதாவது, தன்னுடைய தேஹயாத்ரையில் தானுபேக்ஷகனாயிருக்க சிஷ்யனானவன் இதுவே நமக்கு ஸ்வரூபம் என்று தன்னுடைய தேஹத்தைப் பேணிக் கொண்டு போருகையொழிய, தன்னுடைய தேஹத்தைத் தான் ரக்ஷிக்கையாகிறவிது ஆசார்யனுக்கு ஆசார்யத்வமாகிற ஸ்வரூபத்துக்கு ஹாநி; தானாசார்யன் பக்கலிலே ந்யஸ்தபரனான பின்பு தன் ஸ்வரூபத்தை அவன் பேணிக்கொண்டு போரக் கண்டிருக்கையொழிய தான் தன்னாத்மரக்ஷணம் பண்ணுகையாகிற விது, சிஷ்யனுக்கு சிஷ்யத்வமாகிற ஸ்வரூபத்துக்கு ஹாநியென்கை. ஆகையால், மறந்தும், சிஷ்யனுக்குத் தன்னுடைய ஸ்வரூப ரக்ஷணமும், ஆசார்யனுக்குத் தன்னுடைய தேஹரக்ஷணமும் கர்த்தவ்யமன்றென்றதாய்த்து.
ஆசார்யன் தனது திருமேனியைக் காப்பாற்றிக் கொள்வதில் அக்கறை எடுத்துக்கொள்ளாமல் உள்ளபோது, சிஷ்யனாக உள்ளவன் “இதுவே நமது ஸ்வரூபம்” என்று ஆசார்யனின் திருமேனியைக் காப்பதை விடுத்து, தனது சரீரத்தை மட்டும் நோக்கிக்கொண்டு இருந்தால், இந்த நிலையானது ஆசார்யனாக உள்ள தன்மைக்குக் கேடு ஏற்படுத்திவிடும். தனது ஸ்வரூபத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஆசார்யனிடம் ஒப்படைத்த பின்னர், தனது ஸ்வரூபத்தை (இங்கு ஸ்வரூபம் என்பது உயிர் என்னும் பொருளில் கொள்வர்) ஆசார்யன் காப்பாற்றியபடி இருப்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதை விட்டு, தானே தனது ஆத்மாவைக் காப்பாற்ற முயற்சி செய்தால், அது சிஷ்யனாக உள்ள தன்மைக்குக் கேடு ஏற்படுத்தும். ஆகவே மறந்தும் கூட சிஷ்யனுக்குத் தனது ஸ்வரூபத்தை தானே ரக்ஷிக்க முயலுதல், ஆசார்யன் தனது சரீரத்தைக் காப்பாற்றிக்கொள்ள தானே முயலுதல் என்ற இரண்டும் செய்யத்தக்கவை அல்ல.