Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 334)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
இரண்டு மிருவர்க்கும் ஸ்வரூபமுமாய் பகவத் கைங்கர்யமுமாயிருக்கும்.
இப்படி யிருவருமிரண்டையும் பேணினா லிரண்டு தலைக்கும் பலிக்குமத்தை அருளிச்செய்கிறார் (இரண்டும்) என்று தொடங்கி.
இப்படியாக இருவரும் உயிர் மற்றும் சரீரம் ஆகிய இரண்டையும் பேணி வருவதால், இந்த இருவருக்கும் கிட்டுவது என்ன என்பதை அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஆசார்யனானால் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணுகையும் சிஷ்யனானாலாசார்யனுடைய தேஹத்தைப் பேணுகையும் ஸ்வஸ்வா ஸாதாரணா காரங்களாகையாலே, இரண்டு மிருவர்க்கும் ஸ்வரூபமுமாய்; “அஹமந்நம்” என்கிறபடியே அவனுக்கு போக்யமாகைக்கு யோக்யமாய் வைத்து அநாதிகால மப்படி விநியோகப் படப்பெறாமல் கிடந்த விவன் ஸ்வரூபம் தாத்ருச விநியோகார்ஹமாகத் திருந்தும்படி பேணிக்கொண்டு போருகையும், “நன்கென்னுடலங் கைவிடான்” என்கிறபடியே, அவனுக்கு விட்டுப்பிடிக்க ஸஹியாதபடி போக்யமாயிருக்கிற ஆசார்ய விக்ரஹத்தைப் பேணிக்கொண்டு போருகையும், பகவானுக்கு மிகவு முகப்பாகையாலே, இவைதான் வஸ்துகத்யா பகவத் கைங்கர்யமுமா யிருக்குமென்கை.
– ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைக் காப்பாற்றுவதும், சிஷ்யன் ஆசார்யனுடைய திருமேனியைக் காப்பாற்றுவதும் அவரவர்களின் தன்மையாக உள்ளதால் இந்த இரண்டும் அவர்களுடைய ஸ்வரூபம் ஆகும். தைத்திரீய உபநிஷத் – அஹம் அந்நம் – நான் ஸர்வேச்வரனுக்கு அன்னம் ஆவேன் – என்பதற்கு ஏற்ப ஸர்வேச்வரனுக்கு இனிமையாக இருக்கக்கூடிய தகுதி ஒருவனுக்கு இயல்பாகவே உண்டு; ஆனால் எல்லையற்ற காலமாக அவ்விதம் உபயோகப்படாமல் உள்ள சிஷ்யனுடைய ஸ்வரூபம், அதன்படி மாறுவதற்கு ஏற்றபடி அவனைத் திருத்திக்கொண்டு காப்பாற்றுவதும்; திருவாய்மொழி (10-7-4) – நன்கென்னுடலங் கைவிடான் – என்பதற்கு ஏற்றபடி ஸர்வேச்வரனுக்கு ஒரு நொடியும் விட்டுப் பிடிப்பதற்குப் பொறுக்க இயலாத இனிய ஆசார்யனின் திருமேனியைப் பாதுகாத்தபடி இருப்பதும் – இந்த இரண்டும் ஸர்வேச்வரனின் உகப்புக்குக் காரணமாக உள்ளதால், இவை இரண்டும் பகவத் கைங்கர்யங்களாகவே உள்ளன என்று கருத்து.