Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 333)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தைப் பேணக்கடவன்; சிஷ்யன் ஆசார்யனுடைய தேஹத்தைப் பேணக்கடவன்.

கீழிருவர்க்கும் ப்ரதாந க்ருத்யங்களாகச் சொன்ன ஹிதகரண ப்ரிய கரணங்களின் வேஷத்தை விசதமாக அருளிச்செய்கிறார் (ஆசார்யன்) என்று தொடங்கி.

கீழே உரைக்கப்பட்டவற்றில் இருவருக்கும் செய்யவேண்டியவை என்று உரைக்கப்பட்ட நன்மையைச் செய்தல், இனிமையானவற்றைச் செய்தல் ஆகியவை எவை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்.

– அதாவது, உஜ்ஜீவநபரனான ஆசார்யன், உஜ்ஜிஜீவிஷுவாய் வந்து உபஸத்தி பண்ணி உகப்பிலே யூன்றிப்போருகிற சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை ப்ராமாதிகமாகவும் ஒரு பழுது வாராதபடி ஏகாக்ர சித்தனாய்க் கொண்டு உபதேசாதிகளாலே நோக்கிக் கொண்டு போரக்கடவன், ப்ரியபரனான சிஷ்யன் தன்னுடைய உஜ்ஜீவநபரனாய் தன் ஸ்வரூப ரக்ஷணமே பண்ணிக் கொண்டு போருகிற ஆசார்யனுடைய திருமேனியை உசித கைங்கர்யங்களாலே ஸர்வகாலமு மேகாக்ரசித்தனாய் நோக்கிக்கொண்டு போரக்கடவ னென்கை.

சிஷ்யனின் உய்வு என்பதில் நோக்கு உடையவனான ஆசார்யன், “உய்யவேண்டும்” என்ற எண்ணத்துடன் தன்னை வந்தடைந்து, ஆசார்யனின் மனமகிழ்வு என்ற விஷயத்தில் ஊறியபடி உள்ள சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை, மறந்தும் கூட ஒரு சிறிய பிழை உண்டாகாத விதத்தில் மனம் ஒன்றி, உபதேசம் போன்றவற்றால் காப்பாற்றியபடி இருக்கவேண்டும். ஆசார்யனுக்குப் பிடித்தமானவற்றை மட்டுமே செய்தல் என்பதில் நோக்கு உள்ள சிஷ்யன், தனது உய்வு குறித்து சிந்திப்பவனாக, தனது ஸ்வரூபத்தைக் காப்பாற்றியபடி உள்ள ஆசார்யனின் திருமேனியைத் தகுந்த கைங்கர்யம் மூலம் அனைத்துக் காலங்களிலும் ஒருமித்த மனதுடன் செய்து வரவேண்டும்.