Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 332)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
நிக்ரஹந்தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்யாந்தர்க்கதம்
கீழ்ச்சொன்ன வாசார்ய நிக்ரஹம் ஹிதரூபமென்று வைதமாக உபாதேயமாமளவன்றிக்கே, இவனுக்கு ப்ராப்ய கோடி கடிதமாயிருக்கு மென்னுமத்தை ஸத்ருஷ்டாந்தமாக அருளிச்செய்கிறார் (நிக்ரஹந்தான்) என்று தொடங்கி.
– கீழே உரைக்கப்பட்ட ஆசார்யனின் கோபம் என்பது நன்மை அளிக்கவல்லது என்று விதிக்கப்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்படும் தன்மை கொண்டது; அது மட்டும் அல்லாமல், சிஷ்யன் அடையத்தக்க பேறுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்பதை உதாரணத்துடன் அருளிச்செய்கிறார்.
– அதாவது, ஸ்வாசார்யன் ஸ்வவிஷயத்தில் ஹிதரூபேண பண்ணுகிற நிக்ரஹந்தான், ஸ்வவிரோதி நிவ்ருத்திக்குறுப்பாகையாலே, “கொண்ட சீற்றமொன் றுண்டு”, “செய்யேல் தீவினை” இத்யாதிகளிற் சொல்லுகிற பகவந் நிக்ரஹம் போலே புருஷார்த்த கோடியிலே அந்தர்பூதமென்கை. “ஆசார்ய னர்த்த காமங்களில் நசையற்றவனாகையாலே அவை ஹேதுவாகப் பொறுக்கவும் வெறுக்கவும் ப்ராப்தியில்லை, இனி இவனுடைய ஹிதரூபமாக வெறுத்தானாகில் அதுவும் ப்ராப்யாந்தர்க்கதமாகக் கடவது” என்று இது தன்னை மாணிக்கமாலையிலே ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தாரிறே.
தனது ஆசார்யன் சிஷ்யனாக உள்ள தனது விஷயத்தில் நன்மை அளிப்பதாகச் செய்கிற கோபம் என்பது தனது விரோதிகளை நீக்க உதவும் காரணத்தால் கீழே உள்ள பாசுர வரிகளில் கூறப்படுவது போல, ஸர்வேச்வரனின் சீற்றம் போன்று புருஷார்த்தமாகவே ஆசார்யனின் கோபமும் உள்ளது என்று கருத்து: பெரியதிருமொழி (5-8-3) – கொண்ட சீற்றமொன்றுண்டு திருவாய்மொழி (2-9-3) – செய்யேல் தீவினை