Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 330)

நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்

நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம்போது அநு ஹிதரூபமாகையாலே யிருவர்க்கு முபாதேயம்.

– ப்ரக்ருதி ஸம்பந்தத்தோடேயிருக்கிற விவனுக்கு எப்போது மொருபடிப்பட்டிருக்குமோ, காலுஷ்யங்களுண்டாகாதோ, அதடியாக நிக்ரஹ பாத்ரமாம்போது அந்த நிக்ரஹம் இரண்டு தலைக்கு மெங்ஙனேயாகக் கடவதென்ன அருளிச் செய்கிறார் (நிக்ரஹத்துக்கு) என்று தொடங்கி.

சரீர ஸம்பந்துடன் உள்ள ஒருவனால் எப்போதும் ஒரே போன்ற மனநிலையில் இருக்க முடியுமா? மனதில் கலக்கம் உண்டாகாதோ? அதன் காரணமாக கோபத்துக்கு ஆளாகும்போது, அந்தக் கோபம் இந்த இருவருக்கும் எப்படி ஆகிறது என்ற கேள்விக்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அநிஷ்டகரணாதிகளடியாக ஆசார்ய நிக்ரஹத்துக்குப் பாத்ரமாம் தசையில் அந்த நிக்ரஹம் சிஷ்யனானவிவனை அபதேப்ரவ்ருத்தனாகாதபடி நியமித்து நல்வழி நடத்துகைக் குறுப்பாய்க் கொண்டு ஹிதரூபமாயிருப்ப தொன்றாகையாலே, இப்படி நம்மை நிக்ரஹிப்பதே என்று இவன் நெஞ்சுளைதல், இவனை யிப்படி நிக்ரஹிக்க வேண்டுகிறதேயென்று ஆசார்யன் நெஞ்சுளைதல் செய்கை யன்றிக்கே, நிக்ரஹ விஷயமான விவனுக்கும் நிக்ரஹாச்ரயமான வாசார்யனுக்கும் அங்கீகார்யமென்கை.

விருப்பம் இல்லாதவற்றைச் செய்வதன் காரணமாக ஆசார்யனின் கோபத்திற்கு இலக்காகும்போது, அந்தக் கோபம் என்பது சிஷ்யனை தகாத வழியில் செல்லாதபடி தடுத்தும், நல்ல வழியில் வருவதற்குக் காரணமாகவும் அமைந்துவிடுகிறது; இப்படியாக அந்தக் கோபம் என்பது நன்மை வடிவாகவே உள்ளதால், “இப்படியாக ஆசார்யன் நம்மிடம் கோபம் கொள்ளும்படி ஆனதே” என்று சிஷ்யன் மனம் கலங்குகிறான். “இப்படியாக இவன் மீது கோபம் கொள்ளும்படி ஆனதே” என்று ஆசார்யன் மனம் கலங்காமல் இருந்து, கோபத்துக்கு இலக்கான சிஷ்யனுக்கும் கோபம் அடைந்த ஆசார்யனுக்கும் கைக்கொள்ளத்தக்கதாக உள்ளது.