Sri Vachana Bhushanam - நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம் (சூர்ணை 329)
நான்காம் ப்ரகரணம் – ஸதாசார்ய அநுவர்த்தன க்ரமம்
ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகையொழிய ரோஷத்துக்கு இலக்காகைக் கவகாசமில்லை.
கீழ்சொன்னவற்றால் பலிக்குமத்தை அருளிச்செய்கிறார் (ஆகையால்) என்று தொடங்கி.
இதுவரை கூறப்பட்டதால் நிகழ்வது என்ன என்பதை அடுத்து அருளிச்செய்கிறார்.
– அதாவது, சிஷ்யனாசார்யனுடைய ப்ரியகரணமும் ஆசார்யன் சிஷ்யனுடைய ஹிதகரணமும் ப்ரதாநமாக நடத்திப் போருகையாலே, சிஷ்யனானவிவ னாசார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமாய்ப் போருகையொழிய அநிஷ்டகரணாதிகளாலே நிக்ரஹத்துக்கு விஷயமாகைக்கு இடந்தான் முதலிலே யில்லையென்கை. (ஆகையால்) என்று, உகப்பிலே யூன்றிப் போருமென்று சொன்ன தொன்றையும் அநுவதிக்கிற தாகவுமாம்.
சிஷ்யன் ஆசார்யனுக்கு விருப்பமானவற்றைச் செய்தல், ஆசார்யன் சிஷ்யனுக்கு நன்மையானவற்றைச் செய்தல் என்பதையே முக்கியமாகக் கொண்டு நடப்பதால், சிஷ்யனாக உள்ளவன் ஆசார்யனின் மகிழ்வுக்கு ஏற்றதாக உள்ளதை மட்டுமே செய்யவேண்டும் அல்லாமல், “விருப்பம் இல்லாதவற்றைச் செய்தான்” என்று அவன் கோபத்துக்கு இடம் அளிக்கக்கூடாது என்று கருத்து. (ஆகையால்) – ஆசார்யனின் மகிழ்ச்சி என்பதில் மட்டுமே ஊன்றியிருத்தல் என்பதை மட்டும் உரைப்பதாகவும் கொள்க.